SOURCE :- BBC NEWS

2015 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின்  சினியோட் நகரில் இரும்பு, தாமிரம் மற்றும் தங்கத்தின் பெரிய இருப்புக்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்கள், தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் நாட்டில் கிடைப்பதாகக் கூறியுள்ளன.

2015-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சினியோட் நகரில் இரும்பு, தாமிரம் மற்றும் தங்கத்தின் பெரிய இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் அந்த வளங்கள், பாகிஸ்தானுடைய செழுமைக்கு பங்களிக்கும் என்றும் கூறினார்.

அட்டாக் நகரில் சுமார் 700 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான தங்கம் இருப்பதாக பஞ்சாப் மாகாணத்தின் சுரங்கத்துறை அமைச்சர் ஷேர் அலி கோர்ச்சானி கூறினார்.

அங்கு 32 கிலோமீட்டர் பரப்பளவில் 28 லட்சம் தோலாக்கள் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த தங்கத்தின் விலை தற்போதைய சந்தை மதிப்பின்படி 600 முதல் 700 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ஆகும்.

அட்டாக் நகரில் சிந்து மற்றும் காபூல் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தங்க இருப்புகள் உள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்கத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் கடந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் அமைச்சராக இருந்தபோது, ​​அட்டாக் நகர் அருகே இயந்திரங்கள் மூலம் அப்பகுதியில் சிலர் தோண்டியதாக தகவல் வெளியானதாகத் தெரிவித்தார்.

விசாரணை நடத்தியபோது, அப்பகுதியில் தங்கம் தேடுவது தெரிந்தது, இதையடுத்து அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டு, தங்கம் தேட தடை விதிக்கப்பட்டது என்றும் ஹசன் முராத் குறிப்பிடுகின்றார்.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் நிலவியல் ஆய்வு மையம், 25 கிலோமீட்டர் பரப்பளவில் 500 மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த ஆய்வின் மூலம் அங்கு தங்கம் இருப்பதை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது கிடைக்கும் இந்த தகவல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உண்மையில் தங்கத்தின் இருப்பு உள்ளதா, அவற்றிலிருந்து உண்மையில் எவ்வளவு தங்கம் எடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பாகிஸ்தானில் தங்கம் கிடைக்கும் பகுதிகள் யாவை?

இந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 1.6 பில்லியன் டன்கள் அளவிலான தங்கத்தின் இருப்பு உள்ளதாக அறியப்படுகின்றது.

சௌதி அரேபியாவின் எதிர்கால கனிமங்கள் மன்றத்தில், பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சகத்தின் சுரங்கத் துறை, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 1.6 பில்லியன் டன்கள் அளவிலான தங்கத்தின் இருப்பு உள்ளதாக அறியப்படுகின்றது.

மேலும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டும்படி, பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றரை முதல் இரண்டு டன் வரை தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, பலுசிஸ்தானில் ‘ரெகோடிக் திட்டம்’ முடிந்த பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் மூலத் தங்கத்தின் உற்பத்தி ஆண்டுக்கு எட்டு முதல் பத்து டன்களை எட்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலுசிஸ்தானில் வெள்ளி இருப்பு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானின் வெள்ளி சுரங்கம், மற்ற உலோகங்கள், குறிப்பாக தாமிரம் மற்றும் தங்கத்தை பிரித்தெடுப்பதில் தொடர்புடையதாக உள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

ஏனென்றால், மற்ற உலோகங்கள் வெட்டப்படும் போது பெரும்பாலும் வெள்ளி ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாகிஸ்தான் நிலவியல் ஆய்வின் (ஜிஎஸ்பி) 2022-23 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் கனிமங்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் பற்றிய ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அறியப்படுகின்றது.

பாகிஸ்தான் நிலவியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்பி) பாகிஸ்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் பரிட் ஹான்கோய் பகுதியில், செம்பு மற்றும் தங்கத்தை ஆராய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் அந்த அறிக்கையின்படி கிடைக்கும் தகவலாகும்.

இது தவிர, பாகிஸ்தான் நிலவியல் ஆய்வு மையம்பஞ்சாபின் அட்டாக் பகுதி மற்றும் கைபர் பக்துன்க்வாவின் மன்சாஹ்ரா மாவட்டங்களில் ஆற்றுப்படுகைகள் மற்றும் வண்டல் மணல் பரப்பில், தங்கம் மற்றும் பிற உலோகங்கள் இருப்பதைக் கண்டறிய முயற்சித்துள்ளது.

அட்டாக் நகரில் தங்கம் இருப்பதை உறுதி செய்வதற்காக புவி இயற்பியல் ஆய்வு மற்றும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் அறிக்கைகளும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, கைபர் பக்துன்க்வாவில் ஆற்றுப்படுகைகள் மற்றும் வண்டல் மணல் பரப்பில் தங்கம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் நிலவியல் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் தவிர, சிந்துவின் தெஹ்சில் நகர் பார்க்கரில் தங்கம் கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது பற்றிய அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் நிலவியல் ஆய்வில் ஈடுபடும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

சென்டாக் திட்டம்

1995ம் ஆண்டில், சென்டாக் திட்டத்தின் சோதனை ஓட்டம்  தொடங்கப்பட்டது, அதில் 1500 மெட்ரிக் டன் செம்பு மற்றும் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது.

பட மூலாதாரம், saindak.com.pk

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள சாகி மாவட்டத்தில் 1990-ஆம் ஆண்டில் சென்டாக் திட்டமானது தொடங்கப்பட்டது.

இதன் மூலம் கனிமங்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்கும், உலோகச் சுத்திகரிப்புத் தொழிற்சாலை அமைப்பதற்கும், மின்சாரம், தண்ணீர் மற்றும் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் சீன நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

1995-ஆம் ஆண்டில், சென்டாக் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டில், மீண்டும் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

அதே ஆண்டில், இந்தத் திட்டம் சீனாவின் உலோகவியல் கட்டுமானக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் தொடர்ந்து சென்டாக் திட்டப்பணியில் ஈடுபட்டு வருகின்றது.

சென்டாக் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, தெற்குச் சுரங்கத்தில் 7 கோடியே 58 லட்சம் டன் கனிம இருப்பு உள்ளது, அதில் தங்கத்தின் விகிதம் டன்னுக்கு 0.47 கிராமாக உள்ளது

சென்டாக் திட்டத்தில் மூலம் ஆண்டுக்கு 15,000 டன் பிலிஸ்டர் செம்பு (99 சதவீத தூய செம்பு), 1,150 கிலோ தங்கம், 1,000 கிலோ வெள்ளி ஆகியவற்றை பிரித்தெடுக்க முடியும்.

முதற்கட்ட மதிப்பீட்டின்படி, திட்டத்தின் வடக்கு சுரங்கத்தில் மொத்தம் 4 கோடியே 64 லட்சம் டன் கனிம இருப்பு இருந்ததாக அறியப்படுகின்றது.

அதன் சராசரி செப்பு உள்ளடக்கம் 0.37 சதவீதம் மற்றும் தங்கத்தின் உள்ளடக்கம் டன்னுக்கு 0.14 கிராம் என மொத்தம் 6346 கிலோவாக இருந்தது.

2021-ஆம் ஆண்டில் 16,000 மெட்ரிக் டன் தாமிரம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது ஆனால் அதில் தங்கத்தின் அளவு குறிப்பிடப்படவில்லை.

‘ரெகோடிக் திட்டம்’ பற்றிய சர்ச்சை

ரெகோடிக் திட்டம்

பட மூலாதாரம், Reuters

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகி மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய செப்பு மற்றும் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தான் அரசாங்கம் அந்த இருப்புக்களைக் கண்டறிய ரெகோடிக் திட்டத்தைத் தொடங்கியது.

ஆனால் 2013-ஆம் ஆண்டில், ரெகோடிக் திட்டத்தில் பணிபுரியும் தேதியன் காப்பர் என்ற நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்கப்படாதபோது, ​​​​முதலீட்டுத் தகராறுகளைக் கையாளும் இரண்டு சர்வதேச மன்றங்களுக்கு அவர்கள் தங்கள் வழக்கை எடுத்துச் சென்றனர்.

அதில் ஒன்றான சர்வதேச முதலீட்டுத் தகராறுகளைத் தீர்க்கும் மையம் (IGSIT) நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து பாகிஸ்தானுக்கு அபராதம் விதித்தது.

பின்னர், தேதியன் காப்பர் நிறுவனத்தின் இரு பங்குதாரர்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது, அதில் கனடா நிறுவனமான ‘பேரிக் கோல்ட்’ மீண்டும் இந்தத் திட்டத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டது.

மார்ச் 2022-ஆம் ஆண்டில், பலுசிஸ்தான் அரசாங்கத்திற்கும் பேரிக் கோல்ட் கார்ப்பரேஷனுக்கும் இடையில் ரெகோடிக் உடன்பாடு எட்டப்பட்டது. அதன் கீழ் திட்டத்தை மீண்டும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

2023-ஆம் ஆண்டில், இஸ்லாமாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மினரல்ஸ் உச்சி மாநாட்டில்’, பேரிக் கோல்ட் தலைமை நிர்வாகி மார்க் பிரிஸ்டோ, ரெகோடிக் திட்டத்தின் பணிகள் வேகமாக நடந்து வருவதாகக் கூறினார்.

மேலும், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தில் இருந்து உற்பத்தியைத் தொடங்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சினியோட்டிலுள்ள இருப்புக்கள்

2015-ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சினியோட்டில் ஆயிரக்கணக்கான டன் இரும்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இரும்பு கிடைக்குமிடம், இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளதாக அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இரும்புத் தாது இருப்புக்களைக் காட்டிலும் அங்குள்ள தாமிர இருப்புக்களில் அதிக கவனம் செலுத்துமாறு பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தினார்.

‘பாகிஸ்தானில் உள்ள அனைத்து பிரச்னைகளும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தீர்க்கப்படும்’ என்று அப்போது நவாஸ் ஷெரீப் கூறினார்.

இந்த ஆய்வுத் திட்டத்தில், 261.5 மில்லியன் டன்கள் உயர்தர இரும்பு மற்றும் 36.5 மில்லியன் டன் இரும்பு தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது என சினியோட் திட்டத்தை மேற்பார்வையிடும் அமைப்பான பஞ்சாப் மினரல் கார்ப்பரேஷனின் தலைவர் முனைவர் சமர் முபாரக் மாண்ட் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடக செய்திகள் கூறுகின்றன.

மேலும், எஃகு ஆலை மற்றும் தாமிர சுத்திகரிப்பு ஆலையில் இருந்து 4 கோடியே 50 லட்சம் டன் 99.6 சதவீதம் சுத்தமான இரும்பும், 15 லட்சம் டன் தூய செம்பும் கிடைக்கும் என்றார் சமர் முபாரக் மாண்ட்.

ஆனால் இங்கிருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

‘பிளேசர் தங்கம்’ மற்றும் வடக்கு பாகிஸ்தானில் உள்ள இருப்புக்கள்

“தங்கப் படிமங்கள் காணப்படும் மலைப் பகுதிகளில் இருந்து ஆறு பாயும் போது, ​​அந்தக் கற்களில் இருக்கும் தங்கத் துகள்களையும் அது கொண்டு செல்கிறது” என்று ஆறுகளில் காணப்படும் தங்கத் துகள்கள் குறித்து பேராசிரியர் அட்னான் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

எரிமலை பிழம்பு கற்கள் மற்றும் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருமாறிய பாறைகளில்தான் தங்கம் காணப்படுகிறது என்று கராச்சி பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் அட்னான் கான் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் இத்தகைய கற்கள் நிரம்பியுள்ள மலைகள் காணப்படுகின்றன.

ஷஹீத் பெனாசிர் பூட்டோ பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையைச் சேர்ந்த முனைவர் எஹ்தேஷாம் இஸ்லாம், கில்கிட், ஹன்சா மற்றும் கஜார் ஆகிய பகுதிகளில் தங்க இருப்புக்களைக் கண்டறிய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் அப்பர் திர் முதல் சித்ரால் வரையிலான பகுதியில் தாமிரம் அதிக அளவில் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய எஹ்தேஷாம், ”தாமிரத்துடன், தங்கமும் ஒரு துணை கனிமமாக அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக உள்ளது.”

100 செம்புத் துண்டுகள் கிடைத்தால், அதில் 0.1 அல்லது 0.2 சதவீதம் மட்டுமே தங்கம் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றார்.

“தங்கப் படிமங்கள் காணப்படும் மலைப் பகுதிகளில் இருந்து ஆறு பாயும் போது, ​​அந்தக் கற்களில் இருக்கும் தங்கத் துகள்களையும் அது கொண்டு செல்கிறது” என்று ஆறுகளில் காணப்படும் தங்கத் துகள்கள் குறித்து பேராசிரியர் அட்னான் கூறுகிறார்.

“பின்னர், இந்த ஆறு சமவெளிப் பகுதியை அடையும் போது, ​​அதன் ஓட்டத்தின் விசை உடைந்து, அந்த நீருடன் வரும் உலோகத் துகள்கள் ஆற்றங்கரையில் இடம்பெறுகின்றன. அங்கு அவற்றின் இருப்புக்கள் உருவாகின்றன. இவ்வாறு கிடைக்கும் தங்கம் பிளேசர் தங்கம் என்று அழைக்கப்படுகிறது” என்று பேராசிரியர் அட்னான் குறிப்பிடுகிறார்.

சிந்து ஆற்றின் வடக்குப் பகுதிகளிலிருந்து அட்டாக் நகரம் வரை பல இடங்களில் இத்தகைய இருப்புக்கள் காணப்படுகின்றன, அதற்காக மக்கள் அவற்றைப் பிரித்தெடுக்க உள்நாட்டுத் தொழில்களை அமைத்துள்ளனர் என்று பேராசிரியர் அட்னான் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் நிலவியலில் சிறந்து விளங்கும் தேசிய மையத்தின் முனைவர் தாஹிர் ஷாவின் மேற்பார்வையில் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சித் திட்டம் நிறைவடைந்ததாக டாக்டர் எஹ்தேஷாம் இஸ்லாம் கூறுகிறார்.

இந்தத் திட்டத்தில், கில்கிட்டில் உள்ள சிந்து நதியின் மூலத்தில் தங்க இருப்பை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, ​​பல்வேறு இடங்களில் ‘பிளேசர் தங்கம்’ இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.

சிந்து ஆற்றின் வடக்குப் பகுதிகளிலிருந்து அட்டாக் நகரம் வரை பல இடங்களில் இத்தகைய இருப்புக்கள் காணப்படுகின்றன. மக்கள் அவற்றைப் பிரித்தெடுக்க சில தொழில்முறைகளை உருவாக்கியுள்ளனர்என்று பேராசிரியர் அட்னான் தெரிவிக்கிறார்.

மறுபுறம், அப்பர் டிர் மற்றும் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சென்டாக்கில் காணப்படும் தங்கம் மற்றும் தாமிரத்தின் விகிதம் மிகவும் நன்றாக இருப்பதாக முனைவர் எஹ்தேஷாம் கூறுகிறார்.

“பலுசிஸ்தானில் உள்ள சாகி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் தங்கத்தின் விகிதம் வடக்குப் பகுதிகளை விட மிகவும் சிறப்பாக உள்ளது”என்பது முனைவர் எஹ்தேஷாமின் கருத்தாகவுள்ளது.

“வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தானின் சில இடங்களில் தாமிரம் உள்ளது. அதனுடன், தங்கத்தையும் இணை கனிமமாகக் காணலாம். ஆனால் அதன் அளவை மதிப்பிடுவது சரியல்ல.” என்கிறார்.

பாகிஸ்தானில் நிகழும் பெரும்பாலான தங்கக் கண்டுபிடிப்புகள் தற்செயலாக நடக்கின்றன என்கிறார் பேராசிரியர் அட்னான் கான்.

”ஆராய்ச்சிக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின்மை இதற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலான விஷயங்கள் வெளிவரவில்லை” என்று அவர் குறிப்பிடுகின்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC