SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

47 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்திய அரசு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்திய எல்லைக்குள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தத் தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதல்களிலும் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழந்ததுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்கள் என்னென்ன என்பதை இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட விங் கமாண்டர் வ்யோமிகா சிங், “இந்த தாக்குதலுக்கான இலக்குகள் நம்பகத்தக்க தகவல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

இந்த ஒன்பது இடங்கள் ஏன் தேர்வு செய்யப்பட்டன என்பது பற்றியும் இந்தியா விளக்கமளித்துள்ளது.

பஹாவல்பூர்

பஹாவல்பூர், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்த இடங்களில் முக்கியமான இடமாக பஹாவல்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் அஹமத்பூர் ஷர்கியா என்கிற இடத்தில் உள்ள சுபன் அல்லா மசூதி அமைந்துள்ள வளாகம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் சர்வதேச எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இங்கிருந்து தான் செயல்படுவதாக இந்தியா ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த அமைப்பின் தலைமையிடமாக பஹாவல்பூர் இருக்கிறது என பிபிசி உருது தெரிவித்துள்ளது.

மௌலானா மசூத் அசார்

பட மூலாதாரம், Getty Images

இந்த இடத்தை தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கிய இந்திய ராணுவம், இங்கிருந்துதான் தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, மூலைச் சலவை செய்யப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள மசூத் அசார் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் ஜெய்ஷ்-இ-முகமது இயங்கி வருகிறது

முரிட்கே

முரிட்கே

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முரிட்கே மாவட்டத்தில் உள்ள மர்காஸ் டைபா தாக்குலுக்கு உள்ளானது.

லாகூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் சர்வதேச எல்லையில் இருந்து 18-25 கிலோமீட்டர் தொலைவிலும் முரிட்கே அமைந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வளாகம் இடம் முரிட்கே நகரில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இங்கிருந்து செயல்படுவதாக இந்திய தெரிவித்துள்ளது. மேலும் 2008-இல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் இங்கிருந்து தான் திட்டமிடப்பட்டதாகவும் அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லிக்கு இங்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

சியால்கோட்

அடுத்ததாக சியால்கோட் மாவட்டத்தில் இரண்டு இடங்கள் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செனாப் நதிக்கரையில் சியால்கோட் அமைந்துள்ளது.

இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே சியால்கோட் அமைந்துள்ளது.

சியால்கோட்டில் சர்வதேச எல்லையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சர்ஜல் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி மையமாக செயல்பட்டதாக இந்திய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.

அதே போல் சியால்கோட்டில் சர்வதேச எல்லையில் இருந்து 12-18 கிலோமீட்டர் தொலைவில் மெஹ்மூனா ஜோயா என்கிற முகாம் அமைந்துள்ளது. இந்த இடம் ஹுஜ்புல் முஜாஹிதின் அமைப்பின் மிகப் பெரிய பயிற்சி மையமாக விளங்கியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் தாக்குதல்

முசாஃபராபாத், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்த இடங்கள் போக பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மிர் பகுதிகளிலும் ஐந்து இடங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இங்கு பீம்பர், முசாஃபராபாத், கோட்லி போன்ற இடங்கள் குறிவைக்கப்பட்டன.

முசாஃபராபாத் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் தலைநகரமாக உள்ளது. இங்கு பல முக்கியமான அரசு அலுவலகங்களும் கட்டடங்களும் உள்ளதாக பிபிசி உருது தெரிவிக்கிறது. இங்கு இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சவாய் நல்லா முகாமை இந்தியா தாக்கியுள்ளது. இந்த இடம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையமாக இருந்தது என இந்தியா விளக்கமளித்துள்ளது.

அதே போல் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சையத்னா பிலால் முகாமும் இந்தியாவின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. இந்த இடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி இடமாக இருந்தது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கோட்லி

கோட்லி

பட மூலாதாரம், Getty Images

முசாஃபராபாத்தை தொடர்ந்து அடுத்து முக்கிய இலக்காக இருந்தது கோட்லி மாவட்டம். இந்த மாவட்டம் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் சர்வதேச எல்லைக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது.

இங்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அப்பாஸ் முகாம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையமாக விளங்கியதாகவும் இங்கு 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் வசதி இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த முகாமின் இந்தியாவின் வான்வழித் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளது.

அதே போல் சர்வதேச எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குல்பூர் முகாம் இந்தியாவால் குறிவைக்கப்பட்டது. இந்த இடம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முகாம் ஆக செயல்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பிம்பர் என்கிற நகரம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வந்த பர்னாலா முகாம் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐஈடி வெடியை கையாள்வதான பயிற்சியும் காட்டில் பிழைப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU