SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், யாமா பரிஸ்
- பதவி, பிபிசி உலக சேவை
-
21 ஏப்ரல் 2025, 08:14 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் அகதிகள் வெளியேற ஏப்ரல் 30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள நிலையில், இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளதாகவும், சுமார் 19,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.
இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய பாகிஸ்தான், ஆவணங்களற்ற ஆப்கானியர்களையும், நாட்டில் தங்குவதற்கு தற்காலிக அனுமதி பெற்றிருந்தவர்களையும் வெளியேற்றுவதற்கான முடிவை வேகப்படுத்தியுள்ளது.
தினமும் 700ல் இருந்து 800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில், வரும் மாதங்களில் சுமார் இருபது லட்சம் நபர்கள் வெளியேற்றப்படலாம் என்று தாலிபன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், தாலிபன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சனிக்கிழமை காபூல் பறந்து சென்றார். இப்படி ‘நாடு கடத்தப்படுபவர்கள்’ பற்றி ‘ஆழ்ந்த வருத்தத்தை’ ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர் கான் முத்தாகி வெளிப்படுத்தினார் .
எல்லையில் இருந்த நாடுகடத்தப்பட்ட ஆப்கானியர்களில் சிலர், தாங்கள் பாகிஸ்தானில்தான் பிறந்ததாகவும், தங்கள் குடும்பங்கள் பாகிஸ்தானில் குடியேறிய பிறகே தாங்கள் பிறந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
ஐநாவின் அகதிகள் செயலாண்மையின்படி, 2021-இல் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானுக்கு வந்த 7 லட்சம் பேரையும் சேர்த்து, 35 லட்சம் ஆஃப்கானியர்கள் பாகிஸ்தானில் வசிக்கிறார்கள். அதில் பாதி பேர் ஆவணமில்லாமல் இருப்பவர்கள் என்று ஐநா மதிப்பிடுகிறது.
கடந்த பல பத்தாண்டுகால போரின் போது ஆப்கானியர்கள் நாட்டுக்குள் வருவதை ஏற்றுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அகதிகளின் அதிக எண்ணிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பொது சேவைகளில் அழுத்தம் கொடுப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறது.
இரு தரப்புக்கு இடையே சமீபத்தில் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆயுதக்குழுவினர் மீது குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான். ஆனால் தாலிபானோ இதை நிராகரிக்கிறது.
”இரு தரப்புக்கும் பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும்’ சனிக்கிழமை காபூலில் நடைபெற்ற சந்திப்பில் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டோர்கம் எல்லைப் பகுதியில் பிபிசியிடம் பேசிய வெளியேற்றப்பட்ட ஆப்கானியர்களில் சிலர் தாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி சில பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்றோ அல்லது தாங்கள் அங்கு ஒருபோதும் வசித்ததே இல்லை என்றோ தெரிவித்தனர்.
‘என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் பாகிஸ்தானில்தான் வசித்திருக்கிறேன்,” என்கிறார் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை அகதியான சையது ரஹ்மான். ”எனக்கு அங்கேதான் திருமணமானது. இப்போது நான் என்ன செய்வது?”
மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான சாலே, தாலிபன் ஆட்சியின் கீழ் அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கவலை கொள்கிறார். “பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன் மகள்கள் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் எனவும், ஆப்கானிஸ்தானிலோ 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை” என்கிறார் அவர்.
‘என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலம் வீணாகக் கூடாது என்று விரும்புகிறேன், ” என்று கூறினார்.
”கல்விக்கான உரிமை அனைவருக்கும் உண்டு.”
”எங்கள் குழந்தைகள் ஆப்கானிஸ்தானைப் பார்த்ததே இல்லை. எனக்கும் கூட அது இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியாது. அங்கே சென்று குடியேறவும், வேலை தேடவும் ஒரு வருடமாவது ஆகிவிடும். நாங்கள் உதவியற்றவர்களாக உணர்கிறோம்.”

எல்லையில் இருந்து குடும்பங்களை, தற்காலிக முகாம்களுக்கு ராணுவ வாகனங்கள் அழைத்துச் சென்றன. தொலைதூர மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் வரை இந்த தற்காலிக முகாம்களிலேயே பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
வாயிலும், கண்களிலும் சுழன்று விழும் தூசியோடு, 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலிருந்து தப்ப பல குடும்பங்கள், கூடாரங்களின் கீழ் குழுமி இருக்கின்றன. வளங்கள் குறைவாக இருப்பதால் முகாம்களில் தங்குவது தொடர்பான விவாதங்கள் காத்திரமாக நடைபெறுகின்றன.
இந்த முகாம்களுக்காக தாலிபனால் நியமிக்கப்பட்ட பொருளாதாரக் குழுவின் உறுப்பினரான ஹிதயத்துல்லாஹ் யாத் ஷின்வாரியின் கூற்றுப்படி, நாடு திரும்பியவர்களுக்கு சுமார் 4,000 முதல் 10,000 ஆப்கானிகள் வரை (இந்திய மதிப்பில் 4,730 – 11830 ரூபாய் வரை) காபூல் அதிகாரிகளிடமிருந்து கொடுக்கப்படுகின்றன.
ஒரே நேரத்தில் மொத்தமாக மக்கள் நாடு கடத்தப்படுவது, ஆப்கானிஸ்தானின் வலிமையற்ற உள் கட்டமைப்புக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாலரை கோடியை நெருங்கும் அதன் மக்கள் தொகையால் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்.
”நாங்கள் நிறைய பிரச்னைகளை சரிசெய்துவிட்டோம். இருந்தாலும் இப்படி பெரும் எண்ணிக்கையில் மக்கள் வருவது இயல்பாகவே சிரமங்களை உருவாக்கும், ” என்று தாலிபனின் அகதிகள் விவகாரத் துறைத் தலைவர் பக்த் ஜமால் கோஹர் கூறுகிறார்.
”இந்த மக்கள் தங்கள் பொருட்கள், வீடு வாசலை விட்டு விட்டு பல தசாப்தங்களுக்கு முன்பே சென்றவர்கள். 20 ஆண்டு காலப் போரில் அவர்களில் பலரது வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன.” என்கிறார் அவர்.
தாங்கள் என்ன கொண்டு செல்லலாம் என்பதில் பல கட்டுப்பாடுகள் பாகிஸ்தானிய எல்லைக் காவலர்களால் விதிக்கப்பட்டதாக கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களுமே பிபிசியிடம் கூறின – இதே குற்றச்சாட்டை சில மனித உரிமைக் குழுக்களும் எதிரொலிக்கின்றன.
”ஆப்கானிய அகதிகள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று எந்தக் பாகிஸ்தானியக் கொள்கையும் இல்லை,” என்று இதற்கு பதிலளிக்கும் விதமாக (பாகிஸ்தானிய உள்துறை துணை அமைச்சர் தலால் சௌத்ரி )சௌத்ரி தெரிவித்தார்.
கொளுத்தும் வெயிலில் சாலையோரம் அமர்ந்திருந்த ஒரு மனிதர், தாங்கள் பாகிஸ்தானில் பிறந்ததால் அந்த நாட்டிலேயே வாழ விருப்பம் தெரிவித்து தன் குழந்தைகள் கெஞ்சியதாகக் கூறினார். அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது மார்ச்சில் காலாவதியாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
” இவ்வளவு மோசமாக நடத்தப்பட்ட பிறகு, இனி எப்போதும் நாங்கள் அங்கே திரும்பிச் செல்லப்போவதில்லை,” என்றார் அவர்.
– டேனியல் விட்டன்பெர்க், மல்லோரி மோயென்ச் வழங்கிய கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU