SOURCE :- BBC NEWS

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அளவிலான கடன் கொடுக்க ஒப்புதல் அளித்தது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழங்கப்படும் இந்த கடனை பாகிஸ்தானுக்கு வழங்க இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான ராணுவ மோதல்கள்களால் பதற்றம் நிலவிய சூழலில் இந்தக் கடன் அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு வழிவகுத்த வலுவான திட்டட்டங்களை அமல்படுத்துவதை பாகிஸ்தான் நிரூபித்ததாக கூறிய சர்வதேச நாணய நிதியம், இந்தியாவின் எதிர்ப்புகளையும் மீறி, ஏழு பில்லியன் கடனின் இரண்டாவது தவணையை அங்கீகரித்தது.

“காலநிலை பாதிப்புகள் மற்றும் இயற்கை பேரழிவுகள்” ஏற்படுத்திய தாக்கத்தினால் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த நிதி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறிய சர்வதேச நாணய நிதியம், எதிர்காலத்தில் சுமார் 1.4 பில்லியன் டாலர் நிதியை வழங்கவிருப்பதாகவும் கூறியது.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்த இந்தியா, இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி தனது எதிர்ப்பை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்தியது.

25 உறுப்பினர்களைக் கொண்ட IMF வாரியத்தில் இந்தியாவின் செல்வாக்கு

சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பாகிஸ்தானின் “மோசமான கடந்த கால பதிவை” கருத்தில் கொண்டு, இத்தகைய கடனுதவிகளின் “செயல்திறன்” குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பணம் “அரசால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு” பயன்படுத்தப்படுவதாக இந்தியா கூறுகிறது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

மேலும், சர்வதேச நாணய நிதியம், தன்னையும் தனது நன்கொடையாளர்களையும் “நற்பெயர் சார்ந்த அபாயங்களுக்கு” ஆளாக்கி வருவதாகவும், “உலகளாவிய மதிப்புகளை தீவிரமாக கருத்தில் கொள்ளவில்லை எனவும் இந்தியா தெரிவித்தது.

இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பிபிசியின் கேள்விகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பதிலளிக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பாகிஸ்தான் நிபுணர்களின் கருத்து

இந்தியாவின் முதல் வாதத்தில் ஓரளவி நியாயம் இருப்பதாக பாகிஸ்தான் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

பொது நிர்வாகத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்பதும், 1958ஆம் ஆண்டு முதல் 24 முறை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“IMF-க்குச் செல்வது என்பது ICU-வுக்கு (தீவிர சிகிச்சைப் பிரிவு) செல்வது போன்றது. ஒரு நோயாளி 24 அல்லது 25 முறை ICU-வுக்குச் சென்றால், கட்டமைப்பு ரீதியான சவால்களும் பிரச்னைகளும் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டும். இந்த சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி பிபிசியிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் “எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கான வெகுமதியை அளிக்கிறது” என்ற ஆபத்தான செய்தியை இந்தியா உலக சமூகத்திற்கு அனுப்புகிறது, இது மிகவும் சிக்கலானது என்று அவர் கூறுகிறார். அத்துடன் இந்த விஷயத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்பதையும் அவர் விளக்குகிறார்.

பாகிஸ்தான் அடுத்த கடன் தொகையை பெறுவதைத் தடுக்க இந்தியா எடுத்த முயற்சி எந்தவொரு உறுதியான விளைவையும் எதிர்பாராமல், வெற்று எதிர்ப்பு காட்டுவதாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கடன் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்தத் தொகையை செலவு செய்வதில் குறிப்பிட்ட வரையறைகளும், சம்பிரதாயங்களும் இருப்பதை இந்தியா உணர்ந்திருந்திருந்தது.

ஸ்ரீநகரில் இந்திய துணை ராணுவ வீரர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் 25 உறுப்பினர்களில் ஒன்றான இந்தியாவிற்கு, இந்த நிதி விவகாரத்தில் தலையிடுவதற்கான செல்வாக்கு இல்லை.

இலங்கை, வங்கதேசம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நான்கு நாடுகளைக் கொண்ட குழுவில் இந்தியா வருகிறது. பாகிஸ்தான் இதில் இல்லை. இரான் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய ஆசியக் குழுவில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடக்கூடியது.

ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஒரு நாடு – ஒரு வாக்கு’ முறையைப் போலன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமைகளானது, ஒரு நாட்டின் பொருளாதார அளவு மற்றும் அதன் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.

வாக்களிக்கும் உரிமையில் பாகுபாடு இருப்பதாகவும், வளரும் பொருளாதாரங்களை விட பணக்கார மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பரவலான விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியம் எதிர்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, அமெரிக்காவுக்கு அதிக வாக்குகள் உண்டு. அமெரிக்காவின் வாக்கு சதவிகதம் 16.49% என்றால், இந்தியாவுக்கு வெறும் 2.6% மட்டுமே உள்ளது.

அதுமட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி, எந்தவொரு திட்டத்திற்கு எதிராகவும் வாக்களிக்க முடியாது. முன்வைக்கப்படும் திட்டதிற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம் என்பதும், ஒருமித்த கருத்துடன் முடிவுகள் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் G20 தலைமை

“சக்திவாய்ந்த நாடுகளின் சுயநலமானது முடிவுகளை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பொருளாதார நிபுணர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

2023 ஆம் ஆண்டு G20 மாநாட்டில் இந்தியா தலைமை வகித்தபோது சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற பலதரப்பு கடன் வழங்குநர்களுக்காக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களில் இந்த ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வது ஒரு முக்கிய திட்டமாக முன்வைக்கப்பட்டது.

“உலகளாவிய வடக்கு” மற்றும் “உலகளாவிய தெற்கு” இரண்டிற்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் வாக்களிக்கும் உரிமைகளுக்கும் நிதி பங்களிப்புகளுக்கும் இடையிலான தொடர்பை அகற்ற வேண்டும் என்றும் முன்னாள் இந்திய அரசு அதிகாரி என்.கே சிங் மற்றும் முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் லாரன்ஸ் சம்மர்ஸ் ஆகியோர் தங்கள் அறிக்கையில் பரிந்துரை செய்தனர். ஆனால் இந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இதைத் தவிர, மோதலில் உள்ள நாடுகளுக்கு நிதியளிப்பது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் சொந்த விதிகளின் அண்மை மாற்றங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது.

2023ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம் யுக்ரேனுக்கு $15.6 பில்லியன் கடன் வழங்கியது. போரில் ஈடுபட்டுள்ள நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“யுக்ரேனுக்கு பெரிய கடன் தொகுப்பை வழங்குவதற்காக கடன் தொடர்பான சொந்த விதிகளை வளைத்தது – அப்படியென்றால் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கடனை கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்ல முடியாது” என்று டெல்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை எனும் சிந்தனைக் குழுவின் மிஹிர் சர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியா உண்மையிலேயே தனது குறைகளைத் தீர்க்க விரும்பினால், அவற்றை முன்வைப்பதற்கான சரியான மன்றம் ஐக்கிய நாடுகளின் FATF (நிதி நடவடிக்கை பணிக்குழு) தான் என்று ஹக்கானி கூறுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கண்காணிக்கும் FATF அமைப்புதான், சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறுவதைத் தடுக்கும் விதமாக குறிப்பிட்ட நாடுகளை, சாம்பல் அல்லது கருப்புப் பட்டியலில் வைப்பது தொடர்பாக முடிவு செய்கிறது.

“சர்வதேச நாணய நிதியத்தில் வீறுகொண்டு பேசுவது பலனளிக்காது, இதுவரை அது பலனளிக்கவும் இல்லை” என்று கூறும் ஹுசைன் ஹக்கானி, “ஒரு நாடு FATF பட்டியலில் இடம்பெற்றுவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவது சிக்கலாகும். முன்பு பாகிஸ்தான் எதிர்கொண்டது போல” என்கிறார்.

இப்போது நிலைமை மாறாமல் பழையபடியே தொடர்ந்தாலும், இன்றைய நிலவரப்படி, பாகிஸ்தான் FATF சாம்பல் பட்டியல் 2022 லிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுவிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி செயல்முறைகள் மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இருக்கு சிறப்பு அதிகாரங்களை மாற்றியமைக்க இந்தியா அழைப்பு விடுப்பது இரட்டை முனைகள் கொண்ட வாளாக மாறலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய சீர்திருத்தங்கள் “இந்தியாவிற்கு பதிலாக சீனாவிற்கு அதிக அதிகாரத்தை வழங்கும்” என்று மிஹிர் சர்மா கருதுகிறார்.

“உலக மன்றங்களில் இருதரப்பு மோதல்களை” பயன்படுத்துவதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் ஹக்கானி, கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவின் முயற்சிகளை சீனா தடுத்தது என்கிறார்.

அருணாச்சல பிரதேச மேம்பாட்டிற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா கடன் கோரியிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, வடகிழக்கு பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, கடன் வழங்குவதைத் தடுத்தது என்கிறார் மிஹிர் சர்மா.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU