SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Images
19 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்கிறதோ, அப்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் அவற்றின் அணு ஆயுதங்கள் மீதே உள்ளன.
எனினும், அணு ஆயுதங்கள் தொடர்பான இந்த நாடுகளின் கொள்கைகள் வித்தியாசமானவை. தங்கள் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாகக் கருதினால், அணு ஆயுதங்களை முதலில் உபயோகிப்போம் என்பது பாகிஸ்தானின் கொள்கையாக உள்ளது. ‘முதலில் உபயோகிப்போம்’ (‘First Use Policy’) என அக்கொள்கை அழைக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இங்கே காணலாம்.
பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டத்தின் வரலாறு

பட மூலாதாரம், Pictorial Parade/Hulton Archive/Getty Images
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (FAS – Federation of American Scientists) எனும் அமெரிக்க சிந்தனை மையத்தின் படி, பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டம் ஸுல்ஃபிகர் அலி பூட்டோவால் 1972ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அவர் பாகிஸ்தானின் அதிபராகவும் இருந்தார்.
1974ம் ஆண்டில் இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஸுல்ஃபிகர் அலி பூட்டோ உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய துணைக் கண்டம் இனியும் பாதுகாப்பானது அல்ல என்றும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடாக மாற வேண்டும் என்றும் கூறினார்.
அதேசமயம், “இந்தியா அணுகுண்டு தயாரித்தால், நாங்கள் புல் அல்லது இலைகளை சாப்பிட்டாலும், பசியுடன் உறங்கி, எங்களுடைய சொந்த அணுகுண்டை தயாரிப்போம்,” என அவர் கூறிய கருத்து மிகவும் பிரபலமானது.
இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் புதிய உந்துதலை பெற்றது.
முனைவர் அப்துல் காதீர் கானின் வருகை

பட மூலாதாரம், Robert Nickelsberg/Getty Images
பிரிவினைக்கு முன்பு இந்தியாவின் போபாலில் 1935ம் ஆண்டில் பிறந்த முனைவர் அப்துல் காதீர் கான், கராச்சி பல்கலைக்கழகத்தில் 1960ம் ஆண்டில் உலோகவியல் படித்தார். அதன்பின், மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவற்றுக்கு பயணித்து, அணுக்கரு பொறியியல் தொடர்பாக உயர்கல்வி படித்தார்.
1972ம் ஆண்டில் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள இயற்பியல் இயக்கவியல் ஆய்வகத்தில் (பிடிஆர்எல்) அவருக்கு வேலை கிடைத்தது. இது சிறிய நிறுவனமாக இருந்தபோதும், யுரென்கோ (Urenco) என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து அதற்கு ஒப்பந்தம் கிடைத்தது. பின்னர், அணுக்கரு தொழில்நுட்பம் மற்றும் உளவு வலையமைப்பு உலகில் இந்த வேலை கானுக்கு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.
1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியபோது, முனைவர் கான் பிடிஆர்எல் ஆய்வகத்தில் தான் பணியாற்றினார்.
2018ம் ஆண்டில் அமெரிக்க இதழான ஃபாரீன் அஃபேர்ஸ்-யில் வெளியான கட்டுரையில், “இந்த நிகழ்வு, கானுக்குள் இருந்த நாட்டுப்பற்றை அசைத்துப் பார்த்தது. இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானை கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள அவர் தொடங்கினார்.” என எழுதப்பட்டுள்ளது.
அதே ஆண்டில், பாகிஸ்தானிய உளவு முகமைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த அவர் தொடங்கினார். ஃபாரீன் அஃபேர்ஸ் இதழ் கட்டுரையின் படி, அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ மற்றும் டச்சு உளவு முகமை ஆகியவை கானை கண்காணிக்கத் தொடங்கின. எனினும், அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, அவரை உளவு பார்ப்பதன் மூலம் பாகிஸ்தானின் அணுசக்தி முயற்சிகள் மற்றும் சாத்தியமான வலையமைப்பை தெரிந்துகொள்ள பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த இதழில் வெளியான கட்டுரையில், “தான் உளவு பார்க்கப்படுகிறோம் என்பது முனைவர் கானுக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், 1975ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஹாலந்தில் இருந்து திடீரென தன் குடும்பத்துடன் வெளியேறி பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு சென்றதும், ஜெர்மானிய வடிவமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு சென்ட்ரிஃபியூஜ் இயந்திரத்தை வடிவமைத்தார். அதற்காக பாகங்களை ஏற்பாடு செய்ய ஐரோப்பிய நிறுவனங்கள் சிலவற்றை அவர் தொடர்புகொண்டார். அந்த சமயத்தில், தன்னுடைய பணியின் பின்னணியில் எந்தவொரு ராணுவ நோக்கமும் இல்லை என அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
1998ம் ஆண்டில் நடைபெற்ற அணு ஆயுத சோதனை

பட மூலாதாரம், BANARAS KHAN/AFP via Getty Images
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் படி (FAS), 1985ம் ஆண்டில் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் அளவுக்கான யுரேனியம் உற்பத்தியை பாகிஸ்தான் எட்டியது. 1986ம் ஆண்டில், அணுகுண்டை தயாரிக்கும் அளவுக்கு போதுமான அணுக்கருப் பிளவுக்கான பொருட்களை கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
1998ம் ஆண்டு மே 28 அன்று, ஐந்து வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகளை நடத்தியதாக, பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்தது. பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின்படி, இந்த சோதனை ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவுக்கு நில அதிர்வை ஏற்படுத்தியது.
மேலும், அந்த சோதனையின் போது 40 கிலோ டன்கள் அளவுக்கு ஆற்றல் வெளிப்பட்டது.
“இந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுள் ஒன்று, அணு இணைவு எரிபொருளை சிறிதளவில் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒருவகை அணுகுண்டான ‘பூஸ்டட் ஃபிஷன் டிவைஸ்’ (boosted fission device) பயன்படுத்தப்பட்டதாக முனைவர் அப்துல் காதீர் கான் தெரிவித்தார். மற்ற நான்கும் ஒரு கிலோ டன்னுக்கும் குறைவான (sub-kiloton) ஆற்றலை பயன்படுத்தும் அணு ஆயுதங்களாகும்.
அதன் தொடர்ச்சியாக, 1998ம் ஆண்டு மே 30ம் தேதி பாகிஸ்தான் மற்றொரு அணு ஆயுத சோதனையை நடத்தியது, அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் 12 கிலோ டன் என மதிப்பிடப்பட்டது. அனைத்து சோதனைகளும் பலூசிஸ்தான் பிராந்தியத்திலேயே மேற்கொள்ளப்பட்டன, இதன் காரணமாக பாகிஸ்தான் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
காதீர் கானை சுற்றிவரும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், PRESS INFORMATION DEPARTMENT/AFP via Getty Images
பாகிஸ்தான் தற்போது அதிகாரபூர்வமாக அணுசக்தி நாடாக திகழ்கிறது, ஆனால் 2004ம் ஆண்டில் முனைவர் அப்துல் காதீர் கான், அணு ஆயுதப் பரவல் தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சையின் மையமாக இருந்தார்.
மற்ற நாடுகளுக்கு அணு ஆயுத மூலப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் அப்போதைய ராணுவ தலைவருமான பர்வேஸ் முஷாரஃப்-ம் அவரை நோக்கிக் கைகாட்டினார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியில், இரான், வட கொரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை விற்றதில் தான் பங்காற்றியதாக கான் ஒப்புக்கொண்டார்.
எனினும், இந்த கருத்தை அவர் பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டார். அழுத்தத்தின் காரணமாக தான் அவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘தி கார்டியனுக்கு’ 2008ம் ஆண்டில் வழங்கிய பேட்டியில், ‘அதிபர் பர்வேஸ் முஷாரஃபிடமிருந்து தான் அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் அதனால் தான் அணுசக்தி தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டதாகவும்’ கான் தெரிவித்தார்.
தன்னுடைய பேட்டியில், ‘தன்னுடைய விருப்பப்படி தான் எதுவும் கூறவில்லை என்றும் அழுத்தத்தின் காரணமாகவே அவ்வாறு கருத்து தெரிவித்ததாகவும்’ கூறினார். மேலும், அணு ஆயுதப் பரவல் தொடர்பான சர்வதேச அணுசக்தி முகமையின் விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் மறுத்துவிட்டார்.

எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?
பாகிஸ்தானிடம் தற்போதுள்ள அணு ஆயுதங்கள் குறித்துப் பேசினால், அதுதொடர்பான அதிகாரபூர்வ எண்ணிக்கை இல்லை. எனினும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு ஆகியவை தங்களுடைய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
2024ம் ஆண்டில் சிப்ரி வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன.
வெறும் எண்ணிக்கை சார்ந்து மட்டுமே இந்த கேள்வி எழவில்லை எனும் ஆய்வாளர்கள், ஆனால் அதன் நம்பகத்தன்மை மற்றும் அந்த எண்ணிக்கை தொடர்பான வியூக முக்கியத்துவம் சார்ந்ததும் தான் என்கின்றனர். அணு ஆயுதங்களை பொறுத்தவரையில், எண்ணிக்கையை சார்ந்து மட்டுமே ஒரு நாட்டின் பலத்தை மதிப்பிட முடியுமா?
பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம், அமைதி மற்றும் நெருக்கடி ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் முனைவர் முனீர் அகமது கூறுகையில், “அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் உள்ளன. ஆனால், யதார்த்தத்தில் அணு ஆயுதங்கள் தொடர்பான விவாதத்தில் எண்னிக்கை ஒருபொருட்டல்ல. அதை பயன்படுத்தினால், மிகச் சிறியளவிலான அணு ஆயுதங்களும் பேரழிவை ஏற்படுத்தும்,” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத கொள்கை
பாகிஸ்தானிடம் எழுத்துபூர்வமாகவோ அல்லது வெளிப்படையான அணு ஆயுதக் கொள்கை இல்லை. இந்தியாவின் ‘ராணுவ மேலாதிக்கத்தை’ நிறுத்த பாகிஸ்தான் விரும்புவதே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் நம்புகிண்றனர்.
பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா, மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தில் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான விவகாரங்களில் நிபுணரான ராஜிவ் நயனிடம் பேசினார்.
“‘முதலில் பயன்படுத்துவோம்’ என்ற முடிவை உடைய எந்தவொரு நாட்டின் அணு ஆயுதக் கொள்கையிலும் அதிக தெளிவின்மை நிலவுகிறது” என ராஜிவ் நயன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எந்த சூழலில் அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்பது குறித்து பெரிதளவில் தெளிவின்மை இருக்கிறது. நாங்கள் அணுகுண்டை பயன்படுத்துவோம் என பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், அவற்றை பயன்படுத்துவதற்கான எல்லை என்பது என்ன என்பது குறித்து பாகிஸ்தான் தெளிவுபடுத்தவில்லை.
எந்த விதமான அணு ஆயுதத்திலிருந்து தாக்குதலை தொடங்கும் என்பதும் தெளிவாக இல்லை. சிறிய ஆயுதம் பயன்படுத்தப்படுமா அல்லது வியூக ரீதியிலான ஆயுதம் பயன்படுத்தப்படுமா?” என அவர் தெரிவித்தார்.
யார் கட்டளை இடுவார்?

பட மூலாதாரம், Getty Images
தேசிய கட்டளை ஆணையம் (NCA) தான் பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கும் அமைப்புகள் முதன்மை இடத்தில் உள்ளது. அதன் கட்டமைப்பு கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்றே உள்ளது.
இதன் தலைவராக பிரதமர் உள்ளார். அந்த ஆணையத்தில் நாட்டின் அதிபர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் (CJCSC), ராணுவம், வான் படை மற்றும் கடற்படையின் தலைவர்கள், மூலோபாயத் திட்டப் பிரிவின் (Strategic Plans Division) இயக்குனர் ஜெனரல் ஆகியோர் உள்ளனர்.
மூலோபாயத் திட்டப் பிரிவு என்.சி.ஏவின் கீழ் செயல்படுகிறது. அணு ஆயுத சொத்துக்களை பராமரிப்பது மற்றும் என்.சி.ஏவுக்கு செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குவது இதன் வேலையாகும்.
CJCSC-யின் கீழ் செயல்படும் மூலோபாயப் படைகளுக்கான (Strategic Forces Command) கட்டளையகத்தின் வேலை, அணு ஆயுதங்களை ஏவுவதாகும்.
ஷாஹீன் மற்றும் நாஸ்ர் (Nasr) போன்ற அணு ஆயுத ஏவுகணைகளை பராமரிப்பது இதன் வேலையாகும். மேலும், என்.சி.ஏவின் உத்தரவுக்கு ஏற்ப இது அணு ஆயுதங்களை ஏவுகிறது.
இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் என்.சி.ஏ கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகின. எனினும், இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அத்தகைய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்பட்டது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU