SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், screengrab/Pakistan PM’s office
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை ஒரு சர்வதேச அரங்கில் சந்தித்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘அமைதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வழிகள்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஷாபாஸ் ஷெரீப் துர்க்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்காபத்துக்குச் சென்றிருந்தார்.
இந்த சர்வதேச மன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரான், ரஷ்யா மற்றும் துருக்கி தவிர, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்த பிற தலைவர்களில் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் அதிபர்களும் அடங்குவர் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது ஷாபாஸ் ஷெரீப்புக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து தான்.
இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இருதரப்பு சந்திப்பு எதுவும் இல்லை, ஆனால் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட காணொளியில் ஷாபாஸ் ஷெரீப்பும் விளாதிமிர் புதினும் கைகுலுக்கி பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
அதிபர் புதினுடனான சந்திப்பின் போது என்ன நடந்தது?
பட மூலாதாரம், AFP via Getty Images
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கும் அதிபர் புதினுக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை என்று பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ரஷ்ய ஊடகமான ஆர்டி இந்தியா (RT India) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டது. அது சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்வினைகளைப் பெற்றது.
இருப்பினும், அந்த காணொளி பின்னர் நீக்கப்பட்டது. ஆர்டி இந்தியா மற்றொரு பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், விளாதிமிர் புதினை சந்திக்க காத்திருப்பது குறித்த முந்தைய பதிவை நாங்கள் நீக்கிவிட்டோம். அந்தப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் தவறாக இருந்திருக்கலாம்.” என்று கூறியது.
எக்ஸ் தளத்தில் ஆர்டி இந்தியா வெளியிட்ட 14 வினாடி காணொளியில், ஷாபாஸ் ஷெரீஃப் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் அதன் பின்னால் பாகிஸ்தான் கொடி இருப்பதையும் காணலாம். அதே சமயம், அவருக்கு பக்கத்தில் ரஷ்யக் கொடியுடன் கூடிய நாற்காலி காலியாகக் இருக்கிறது.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் ஆகியோரையும் இந்த காணொளியில் காணலாம்.
ரஷ்ய ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது?
பட மூலாதாரம், X
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடங்கள் காத்திருந்ததாகவும், பின்னர் எழுந்து நேராக, துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவானுடன் புதின் பேசிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றதாகவும் ஆர்டி இந்தியா கூறியிருந்தது.
இந்த விஷயம் குறித்து விளக்கம் பெற பிபிசி உருது, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது. அப்போது, இது ஒரு ‘தவறான புரிதல்’ என்றும் ‘ஆர்டி இந்தியா அந்தப் பதிவை நீக்கிவிட்டது’ என்றும் பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.
மறுபுறம், ஆர்டி இந்தியாவும் தனது பதிவை நீக்கிவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் கிரெம்ளினும் சில ரஷ்ய ஊடகங்களும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கும் அதிபர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு குறித்த சுருக்கமான விவரத்தை வெளியிட்டுள்ளன.
துருக்கி அதிபர் எர்துவான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்புக்குப் பிறகு கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் யுக்ரேன் பிரச்னை மற்றும் பிற பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாகக்’ கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் கடைசி வரி, ‘பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் பின்னர் அந்தச் சந்திப்பில் இணைந்தார்’ என்று கூறியது.

இந்த சம்பவம் குறித்து ரஷ்ய செய்தித்தாள் கொமர்சன்ட் (Kommersant), “புதினுடனான எர்துவானின் சந்திப்பு அதிக நேரம் நீடித்தது, இதனால் அடுத்த அறையில் அரை மணி நேரம் தனியாக காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சலிப்படைந்தார். இறுதியாக, அவர் எழுந்து சென்று விளாதிமிர் புதினுக்கும் எர்துவானுக்கும் இடையிலான சந்திப்பில் இணைந்தார்.” என்று கூறியது.
மற்றொரு ரஷ்ய செய்தித்தாளான எம்கேஆர்யூ (MKRU), இந்த சந்திப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, துருக்கி மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டதாகவும், பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் மத்தியஸ்தராக துருக்கியின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறியது.
இருப்பினும், இந்த கூட்டுச் சந்திப்பிற்குப் பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள்
பட மூலாதாரம், X
ஷாபாஸ்-புதின்-எர்துவான் சந்திப்பு சமூக ஊடகங்களில் கணிசமான விவாதங்களை எழுப்பி வருகிறது. ஒருபுறம், சமூக ஊடக பயனர்கள் ‘பாகிஸ்தான் பிரதமரை புதின் காத்திருக்க வைத்ததற்காக’ கேலி செய்கிறார்கள், அதே நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் தலைவரை ‘உலகளாவிய தலைவர்களை ஈர்க்கக்கூடியவர்’ என்று விவரிக்கிறார்கள்.
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை புதின் காத்திருக்க வைத்ததாகக் பதிவிட்ட நசீம் அப்பாஸ் என்ற சமூக ஊடக பயனர், “இந்த சம்பவம் ஒரு சர்வதேச தளத்தில் நடந்தது, உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பார்த்து சிரிக்கின்றன,” என்றும் அதில் தெரிவித்தார்.
மற்றொரு பயனர், “ஷாபாஸ் ஷெரீப் புதினுக்காக 40 நிமிடங்கள் காத்திருந்தார், ஆனால் புதின் வரவில்லை. ராஜதந்திர ரீதியில் ஷெரீப்பின் இருப்பு போதுமானதாக இல்லாதது, சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்புகிறது.” என்று தெரிவித்தார்.
இருப்பினும், பாகிஸ்தான் பிரதமரின் சர்வதேச ஊடக செய்தித் தொடர்பாளர் முஷாரஃப் ஜைதி, “ஷாபாஸ் ஷெரீப் துர்க்மெனிஸ்தானில் உள்ள மற்ற தலைவர்களுடன் ‘ஆக்கபூர்வமான சந்திப்புகளை’ நடத்தியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“பொதுவாக சர்வதேச உறவுகளில் நிலவும் நல்லுறவு தொடர்ந்தது. பாகிஸ்தான் பிரதமர் அன்றைய தினத்தை அதிபர் எர்துவான், அதிபர் புதின் மற்றும் பிற முக்கிய உலகத் தலைவர்களுடன் கழித்தார்,” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC







