SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Rafale
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
29 ஏப்ரல் 2025, 13:30 GMT
புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன.
இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது.
இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் , பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் பல வழிகளில் முக்கியமானது.
இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான 26 ரஃபேல்-எம் (கடல்) ஒப்பந்தம் குறித்த தகவல்களை பிஐபி வழங்கியுள்ளது.
பிஐபி தகவலின் படி, இந்த 26 போர் விமானங்களில், 22 ஒற்றை இருக்கை கொண்டதாகவும், நான்கு இரட்டை இருக்கை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த விமானங்களின் விநியோகமும் 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் ரஃபேல் விமானங்களின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விமானங்களைப் பராமரித்தல் போன்ற பல விஷயங்களும் அடங்கும்.
இது அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அரசு நம்புகிறது.
ரஃபேல்-எம் போர் விமானங்களின் அம்சங்கள்

பட மூலாதாரம், ANI
இந்திய விமானப்படையிடம் ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன, இப்போது ரஃபேல்-எம் விமானத்தை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இது விமானம் தாங்கி கப்பல்களின் உதவியுடன் கடலில் இயங்கக்கூடிய விமானம் ஆகும்.
“இன்றைய காலகட்டத்தில், உலகின் பல நாடுகளும் ட்ரோன்களின் உதவியுடன் தாக்குகின்றன.
ஆனால் துல்லியமாக குறி வைத்து, நீண்ட தூரத்தைத் தாக்கும் திறனின் அடிப்படையில், போர் விமானங்கள் முக்கியமானவை” என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“ரஃபேல் ஒரு நவீன போர் விமானம், பிரான்ஸ் ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, சீனாவுக்கு எதிராகவும் இந்தியா தனது பலத்தைக் காட்ட முடியும்” என்கிறார் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா.
எந்தவொரு போர் விமானமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அதன் சென்சார் திறன் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்தது.
அதாவது, ஒரு போர் விமானத்தால் எவ்வளவு தூரத்தில் உள்ள எதிரியை கண்டறிய முடிகிறது, எவ்வளவு துல்லியமாக, எவ்வளவு தூரத்தில் இருந்து தாக்க முடிகிறது என்பதே போர் விமானத்தின் சக்தியைக் குறிக்கிறது.
இந்தியா முன்னதாக 1997-98 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து சுகோய் விமானங்களை வாங்கியது.
சுகோய்க்குப் பிறகு, போர் விமானங்களின் தொழில்நுட்பம் மாறிவிட்டது, அந்த அடிப்படையில், ரஃபேல் மிகவும் நவீன போர் விமானமாக உள்ளது.
ஆசியா டைம்ஸின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான இம்மானுவேல் ஸ்கெமியா, தேசிய ஆர்வம் எனும் இதழில்,
“அணு ஆயுதம் ஏந்திய ரஃபேல் விமானத்தால் 150 கிலோமீட்டர் வரை வானிலிருந்து ஏவுகணைகளை ஏவ முடியும் மற்றும் 300 கிலோமீட்டர் வரை வானிலிருந்து தரைக்கு செல்லும் வரம்பைக் கொண்டுள்ளது. சில இந்திய ஆய்வாளர்கள் ரஃபேல் பாகிஸ்தானின் எப் -16 ஐ விட அதிக திறன் கொண்டது என்று நம்புகிறார்கள்” என குறிப்பிட்டார்,

இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும்
ரஃபேல் விமானத்தின் வருகை இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்குமா? சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதற்றமான சூழ்நிலைகளில் ரஃபேல் திறம்பட செயல்படுமா? போன்ற கேள்விகளுக்கு
“உலகின் பல நாடுகள் ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவை சக்தி வாய்ந்ததாகக் காண விரும்புகின்றன.
இந்த பிராந்தியத்தில் வெற்றிகரமான ஜனநாயக நிர்வாக அமைப்பு உள்ளதன் காரணமாக அவர்கள் இந்தியாவை நம்புகிறார்கள், அதேசமயம் சீனாவின் அணுகுமுறை அதன் விரிவாக்கத்தை முன்னிறுத்தி அமைந்துள்ளது ” என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா பதிலளித்தார்.
“எனவே, அதன் சக்தியை வலுப்படுத்த, இந்தியா ரஃபேல் போன்ற போர் விமானங்களை வைத்திருப்பது முக்கியம். இது பாகிஸ்தான் மற்றும் சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்கும், மேலும் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்தியா இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.”
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் தனது பதவிக் காலத்தில் பிரான்சுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதினார்.
ரஃபேல் விமானத்தின் வருகையால், பாகிஸ்தான் வான் படையின் திறனை இந்தியா முறியடிக்கும் என்று பாரிக்கர் ஒருமுறை கூறியிருந்தார்.
“அதன் இலக்கு துல்லியமாக இருக்கும். ரஃபேல் விமானம் மேலும் கீழும், பக்கவாட்டாக, அதாவது ஒவ்வொரு திசையிலும் கண்காணிக்கும் திறன் கொண்டது.
அதாவது அதன் தெரிவுநிலை 360 டிகிரியாக இருக்கும். விமானி எதிரியைப் பார்த்து பொத்தானை அழுத்தினால் போதும், மற்றதை கணினி செய்யும். அதில் விமானிக்கு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய ஒரு தலைக்கவசமும் இருக்கும்” என்று பாரிக்கர் கூறியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பலம்

பட மூலாதாரம், Getty Images
இந்த போர் விமானத்தால் இந்தியா பாகிஸ்தானை வெல்ல முடியுமா?
எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தியா தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது.
அதேசமயம் பாகிஸ்தானிடம் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் கூட இல்லை. இந்தியா சீனாவை மனதில் கொண்டுள்ளது. சீனாவை மனதில் கொண்டு விமானப்படை இதற்கு முன்பு ரஃபேல் விமானங்களையும் நிறுத்தியுள்ளது” என்றார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எத்தனை போர் விமானங்கள் தேவை? என்ற கேள்விக்கான பதில் என்னவென்றால், உங்களிடம் எத்தனை அதிகமான போர் விமானங்கள் இருக்கிறதோ, அவற்றைக் கொண்டு அதற்கு ஏற்ப அதிக இடங்களில் போரிட முடியும்.
அதாவது, இந்த சூழலில் எண்ணிக்கை மிகவும் முக்கியம்.
“ரஃபேல் விமானத்தின் வருகை இந்திய கடற்படைக்கு மிகுந்த பலத்தை அளிக்கும், ஆனால் 26 விமானங்கள் இதற்குப் போதுமானதாக இல்லை. இந்தியாவிடம் உள்ள இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களில் 60 முதல் 70 போர் விமானங்களை நிறுத்த முடியும்” என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது சீனா மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது, மேலும் இரண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் 12-13 விமானம் தாங்கிக் கப்பல்களும், ரஷ்யாவில் ஐந்து அல்லது ஆறு கப்பல்களும் உள்ளன.” என்றார்.
பாகிஸ்தானுடனான தற்போதைய பதற்றமான சூழ்நிலையில் இந்தியாவிற்கு ரஃபேல் ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது? எனும் கேள்விக்கு, “ஆசியாவின் இந்தப் பகுதியில், சீனா மற்றும் தாய்லாந்து தவிர வேறு எந்த நாட்டிலும் விமானம் தாங்கிக் கப்பல்கள் இல்லை” என்று கூறுகிறார் ராகுல் பேடி.
அதாவது இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை.
ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவும் சூழ்நிலையில், ரஃபேல்-எம் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம்?
ராகுல் பேடியின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்தியாவிடம் உள்ள மிக் விமானங்கள் மிகவும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றுக்கும் பல சிக்கல்கள் உள்ளன.
இருப்பினும், ராகுல் பேடி கூறுகையில், “புதிய ரஃபேல் ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பகுதி இந்தியா எப்போது அந்த விமானங்களைப் பெறும் என்பது தான். முதல் ரஃபேல் விமானம் தோராயமாக 36 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும்.
இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ரஃபேல் விமானத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும், அதற்கும் அதிக நேரம் எடுக்கும்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU