SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
1972 ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா பரபரப்பாக இருந்தது, சிம்லாவின் மீது உலகத்தின் கவனம் குவிந்திருந்தது.
பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்திடம் சரணடைந்திருந்த அந்த சமயத்தில் 45,000 ராணுவ மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் உட்பட ஏறக்குறைய 73,000 போர்க் கைதிகள் இந்தியாவின் காவலில் இருந்ததாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்ல, மேற்கு பாகிஸ்தானின் சுமார் 5,000 சதுர மைல்களை இந்தியா கைப்பற்றியிருந்தது.
இந்தப் பின்னணியில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ இடையிலான பேச்சுவார்த்தை சிம்லாவில் நடைபெற்றது.
இரு நாடுகளிடையிலான பேச்சுவார்த்தையின் இறுதியில் இங்கு எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்கு ‘சிம்லா ஒப்பந்தம்’ என்று பெயரிடப்பட்டது.
சிம்லா ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திடப்பட்ட நாள் ஜூலை 2, 1972 எனப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்த ஆவணம் ஜூலை 3 ஆம் தேதி காலையில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உருவானது.
போருக்குப் பின், இந்தியாவும் பாகிஸ்தானும் வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது பரஸ்பர ஒப்புதலின் மூலமாகவோ தீர்க்க ஒப்புக்கொண்டன.
போரில் தோற்று கிழக்கு பாகிஸ்தானில் சரணடைந்த பிறகு, பாகிஸ்தான் ராணுவத்திற்குள் குழப்பம் ஏற்பட்டது.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. இதனால், பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ, ரஷ்யாவின் உதவியை நாடினார். தனது ‘பழைய’ நண்பர் ரஷ்யா மூலம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியா மீது அழுத்தம் கொடுக்க அவர் ரஷ்யாவுக்குச் சென்றார். அவரின் பல்வேறு ராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திரா காந்தி ஒப்புக்கொண்டார்.

வெற்றி கொடுத்த சங்கடம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் தொடங்கின.
இரு தரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள்.
பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடக்க, ஆரம்ப கட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அது ஒரு முறையான ஒப்பந்தத்தின் வடிவத்தை எடுக்கும் வகையில், இரு நாட்டின் உயர் தலைவர்கள் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
எனவே, பாகிஸ்தான் ஜனாதிபதி பூட்டோ இந்தியாவுக்கு வருவதாக முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை தொடங்கும்போது, இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. இந்திய தூதர் ஒருவரின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தையின் போது, வெற்றி பெற்ற நாடு ‘சங்கடப்பட்டதாக’ தோன்றிய ஒரு கட்டம் வந்தது.
இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அதிகாரியான கே.என். பக்ஷி, 2007 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், போருக்கு பின் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்த நிலையில், சர்வதேச நாடுகளின் ஆதரவும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது என்று கூறினார். “இருந்தபோதிலும் நம்மால் அதிகம் சாதிக்க முடியவில்லை. போரின் வெற்றி எங்களுக்கு பயனளிக்கவில்லை… சமரசம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் நாங்கள் பாகிஸ்தானுக்கு தலைவணங்கிவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்திய அரசியல் அறிவியல் பேராசிரியர் உதய் பாலகிருஷ்ணன், 2019 நவம்பர் 20 அன்று இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தி இந்து பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்திரா காந்தியைப் பாராட்டியிருந்தாலும், 1972 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம், இந்திராவின் ‘அரசியல் தவறு’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
“1971 போரில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்குப் பிறகு இந்தியாவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் பாதகமான ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் ஏற்படுத்த இந்திராகாந்தியை நிர்பந்தித்த சூழ்நிலைகள் யாவை என்பது நமக்கு ஒருபோதும் தெரியவராது. சிம்லா ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட டெல்லி ஒப்பந்தமும் பாகிஸ்தானுக்கு சாதகமானதாகவும், அந்நாடு கேட்டதை எல்லாம் கொடுப்பதுமாகவே இருந்தது.”
”இந்திய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளும் திருப்பிக் கொடுப்பது மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அனைவரும் எந்தவித விசாரணையும் இல்லாமல், கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசத்தில்) இருந்து பாகிஸ்தானுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவது ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம்” என பேராசிரியர் உதய் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘சாமர்த்தியமான பேச்சுவார்த்தை உத்தி’
”அதுவும் எந்த சூழ்நிலையில் இவையெல்லாம் நடந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளில், எப்போதையும்விட இந்தியாவின் செல்வாக்கு மேம்பட்டிருந்த காலம் அது. இந்தியா, தனது வலிமையால், பாகிஸ்தானின் 5 ஆயிரம் சதுர மைல் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்த தருணம் என்பதுடன், பாகிஸ்தான் ராணுவத்தின் சுமார் கால் பகுதியினர் இந்தியாவின் போர்க் கைதிகளாக இருந்தனர்…”
“இந்தியா ஏன் ஆக்ரமித்த பகுதிகளையும் போர்க்கைதிகளையும் இவ்வளவு எளிதாக திருப்பி அனுப்பியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று என்று டாக்டர் பாலகிருஷ்ணன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் பாலகிருஷ்ணனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி சஷாங்க் பானர்ஜி, போர்க் கைதிகளை திருப்பி அனுப்பும் முடிவு, ஷேக் முஜிபுர் ரஹ்மானை உயிருடன் மற்றும் நலமுடன் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்.
ஆனால் ஷஷாங்க் பானர்ஜியின் பதிலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பாலகிருஷ்ணன், “ஷஷாங்க் பானர்ஜியின் கருத்து சரியல்ல. போர்க் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான முடிவு 1973 டெல்லி ஒப்பந்தத்திற்குப் பிறகு நடந்தது, ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு முன்பே, அதாவது 1972 ஜனவரியிலேயே ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசம் சென்றுவிட்டார்.” என எழுதியுள்ளார்.
முதல் உலகப்போருக்கு பிறகு ஏற்பட்ட ‘வசயே ஒப்பந்தம்’ ஏற்படுத்திய தாக்கமே, பாகிஸ்தான் தோல்வியடைந்த பிறகு, எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட இந்திரா காந்தி விரும்பாததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
வசயே ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த அவமதிக்கும் வார்த்தைகளே, ஜெர்மனியில் பழிவாங்கும் உணர்வைத் தூண்டின என்றும், அதன் விளைவாகவே ஜெர்மனியில் நாஜி தலைமை உயர்ந்தது என்றும் நம்பப்பட்டது.
சிம்லாவில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் இறுதி கட்டங்கள் தொடர்பான சில விஷயங்களை 2007 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் கே.என். பக்ஷி கூறினார்.
இந்தியாவின் ராணுவ வெற்றிக்குப் பிறகு, சிம்லா ஒப்பந்தத்தில் இந்தியா ராஜதந்திர மட்டத்தில் ‘தோல்வியடைந்ததற்கு’ காரணம் ‘வசாய் அச்சம்’ மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிகர் அலி பூட்டோவின் பேச்சுவார்த்தைகளின் ‘சாமர்த்தியமான உத்தி’ என்று அவர் கூறுகிறார்.
சிம்லா ஒப்பந்தமும் அதன் பின்னணியும்

பட மூலாதாரம், Getty Images
கே.என். பக்ஷி மேலும் கூறுகையில், ”சிம்லா ஒப்பந்தத்தை உருவாக்கும்போது, சில முக்கிய விஷயங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். பூட்டோ நம்பகமானவர் அல்ல, நாம் அவர்களை நம்ப முடியாது என்பதையும் உணர்ந்திருந்தோம். பூட்டோவின் தாய்கூட அவரை முழுமையாக நம்பமாட்டார் என்றும் நாங்கள் பேசிக் கொள்வோம்.
சர்வதேச அரங்கில், இந்தியாவிற்கு எதிராக “ஆயிரம் ஆண்டுகளுக்கு போர் நடத்துவோம்” என்று முழங்கிய சுல்பிகர் அலி பூட்டோ, இப்போது வாயில் தேனூற பேசினார், அவர் இரு நாடுகளின் அமைதி மற்றும் வளமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இவையெல்லாம் கேட்க நன்றாகவே இருந்தது (நாங்கள் அதை நம்பினோம்).
நமது இரு நாட்டு மக்களும் அமைதி வழியில் மட்டுமே முன்னேற முடியும். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலையும் போரையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். என்னை நம்புங்கள், நாம் முன்னேற இதுவே ஒரே வழி என்பதை உணர்ந்திருப்பதால் தான் இப்படி சொல்கிறேன் என்று பூட்டோ கூறினார்.” என்றார்
”இது போன்ற பல விஷயங்களை பொதுவிலும் தனிப்பட்ட முறையிலும் பூட்டோ தொடர்ந்து கூறிவந்தார். புதிய போர்நிறுத்தக் கோடு ‘அமைதிக் கோடாக’ இருக்க வேண்டும் என்று அவர் இந்திய பத்திரிகையாளர்களிடம் கூறினார். நீண்ட கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு பாகிஸ்தானின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக, தனது ஜனநாயக அந்தஸ்தை பூட்டோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.(ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவி தேவைப்படுவதாக மறைமுகமாகக் கூறினர்).
ஏனென்றால் ஒரு ஜனநாயக அரசாங்கத்தால் மட்டுமே அமைதி போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் முடிவெடுக்க முடியும். எனவே மக்களிடையே எடுபடக்கூடிய ஒரு ஒப்பந்தம் அவருக்குத் தேவைப்பட்டது. இது அவரது சாமர்த்தியமான நடிப்பின் முக்கியமான அம்சமாக இருந்தது.
இந்த விஷயத்தில் (ராஜதந்திர நாடகத்தில்), அஜீஸ் அகமது இரண்டாவது கதாபாத்திரமாக இருந்தார். அவர் சிக்கலானவராக இருந்தார், அதாவது வழக்கமாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவை எப்படி மோசமாக நடத்துவார்களோ அதையே அஜீஸ் அகமது எதிரொலித்தார். .
அஜீஸ் அகமது குறைவாகவே பேசினார் என்றாலும், வெவ்வேறு வழிகளில் ஒரே விஷயத்திற்கே அழுத்தம் கொடுத்தார். அது, ஜம்மு-காஷ்மீர் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்தது.” என்கிறார் கே.என். பக்ஷி.
(இஸ்லாமாபாத்தில் உள்ள ‘தைனிக் மசாவத்’ பத்திரிகையின் அப்போதைய நிருபர் அகமது ஹசன் ஆல்வி சிம்லா தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பத்திரிகையாளர் நண்பர்களிடம் சுல்பிகர் அலி பூட்டோவின் ‘ராஜதந்திர நாடகம்’ பற்றி கூறினார். எப்படி புன்னகைக்க வேண்டும் என்பது முதல் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் பெனாசிர் பூட்டோ எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சுல்பிகர் அலி பூட்டோ அறிவுறுத்தியிருந்தார் உட்பட பல விஷயங்களை அவர் தெரிவித்தார். யார் என்ன பேசவேண்டும் என்பதற்கான சூழலை உருவாக்க பூட்டோ விரும்பினார் என்றும், இந்த நாடகம் அரங்கேறிய மேடை ஒரு அரங்கம் அல்ல, பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சிம்லாவில் உள்ள பங்களா என்றும் கே.என். பக்ஷி கூறிய வார்த்தைகளை அகமது ஹசன் ஆல்வியின் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.)

பட மூலாதாரம், Getty Images
சிம்லா வந்த சுல்பிகர் அலி பூட்டோ, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், உளவுத்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 84 பேர் கொண்ட குழுவை தன்னுடன் அழைத்து வந்தார்.
இந்தியாவில் பலரின் நண்பராக இருந்த தேசிய அவாமி கட்சியின் வாலி கானும் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.
இவரைத் தவிர அப்போதைய பாகிஸ்தான் பஞ்சாபின் தலைமைச் செயலாளரும் இந்தியா வந்திருந்தார். அவர் ஒரு காஷ்மீரி என்பதும், பல இந்திய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
”நாம், வரவேற்கும் இடத்தில் இருந்தோம், நம்மிடம் பலர் இருந்தனர். தனது எண்ணத்தை செயல்படுத்த ஏதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவினருடன் சிம்லாவுக்கு வந்திருந்த சுல்பிகர் அலி பூட்டோ சரியாக திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, தன்னுடன் வந்திருந்த நபர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தார். பூட்டோ மற்றும் அவருடன் வந்திருந்த குழுவினர், அனைவருடனும் இயல்பாக பேசினார்கள், அவர்களுடன் பேசிய எல்லோருடனும் தன்மையாக உரையாடினார்கள்.” என்கிறார் கே.என். பக்ஷி
ஒப்பந்தத்தில் இருதரப்பு விதிமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். பக்ஷி, ”பொதுவான விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து ஷரத்துக்களுக்கும் பாகிஸ்தான் தரப்பு உடன்பட்டது. ஆனால் சிம்லா ஒப்பந்தத்தைப் பார்த்தால், அது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக தோன்றும். ஒன்று உறுதியான ஒப்பந்தம், மற்றொன்று அதன் புலப்படும் வடிவம்.
எங்களது கருத்துப்படி, பூட்டோ பொய் சொல்லவில்லை. அதாவது, நீடித்த அமைதியை விரும்புகிறோம் அல்லது ஒருவருக்கொருவர் விரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் அல்லது அனைத்துப் பிரச்னைகளையும் அமைதியாகத் தீர்த்துக் கொள்வோம் என இந்தியத் தரப்பு முன்வைத்த விஷயங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் கலாசாரத் துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும், உறவுகளை இயல்பாக்குவோம் என்று நாங்கள் சொன்னவற்றை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்” என்கிறார்

பட மூலாதாரம், Getty Images
சிம்லா ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் சில விதிகளை இணைத்தது. அதில், முதல் பத்தி எண் 1.1இன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் விதிகள் மற்றும் நோக்கங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் தன்மையையும் பேச்சுவார்த்தைகளின் திசையையும் தீர்மானிக்கும்.
இரண்டாவதாக, பத்தி 1.5 (6)யின்படி, ஐ.நா. சாசனத்தின்படி, அவர்கள் பலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆபத்திலிருந்து விலகி இருப்பார்கள்.
அனைத்திலும் மிகவும் முக்கியமான விஷயம் பத்தி எண் 4.1 இல் உள்ளது. இது 1971 டிசம்பர் 17, போர் நிறுத்தத்தின் விளைவாக, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த நிலைப்பாட்டிற்கும் பாரபட்சமின்றி, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) இரு தரப்பினராலும் மதிக்கப்படும் என்று கூறுகிறது.
இந்த ஷரத்துகள், பிரதமர் இந்திரா காந்திக்கும், சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையின் போது கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த பக்ஷி, ”எல்லைக் கோடு மாற்றப்படும் என்பது உண்மைதான். ஆனால் பூட்டோ காஷ்மீர் மீதான தனது உரிமைக்கோரலை கைவிட மாட்டார் என்று கூறியிருந்தார்.”
பூட்டோ, இந்த நிலையைத் தக்க வைத்துக் கொண்டார். மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வர்த்தகம், பயணம், தகவல் தொடர்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை பணிகளை மீண்டும் திறப்பதற்கான வேறு எந்த ஏற்பாடுகளுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முப்பது நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தினால் இரு தரப்பினருக்கும் கிடைத்தது என்ன?
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் உட்ரோ வில்சன் பள்ளியின் சர்வதேச விவகாரப் பேராசிரியரான கேரி ஜே. பாஸ், “இந்தியாவைப் பொறுத்தவரை, போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தான் வீரர்களை விசாரிப்பதை விட, காஷ்மீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பது மிக முக்கியமானது. ஆனாலும்கூட, பாகிஸ்தான் ராணுவம் குறித்த பூட்டோவின் கவலைகளை பயன்படுத்தி வங்கதேசத்திற்கு அங்கீகாரம் பெறவே இந்திரா காந்தி முயன்றார்.” என ‘இண்டர்நேஷனல் செக்யூரிடி’ என்ற பத்திரிகையில் எழுதியுள்ளார்.
”ஜூலை 12 அன்று இந்திரா காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, ’போர்க் கைதிகளின் விஷயத்தைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் மூன்றாவது நாடும் அதாவது வங்கதேசம் ஆழமாக சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, வங்கதேசத்தையும் பேச்சுவார்த்தையில் சேர்க்காவிட்டால் (அதாவது, பாகிஸ்தான் வங்கதேசத்தை அங்கீகரிக்காவிட்டால்) பிரச்னையை தீர்க்கமுடியாது’ என்று பூட்டோவிடம் கூறினார்” என்கிறார் கேரி ஜே. பாஸ்
பாகிஸ்தான் வீரர்களை விசாரணைக்காக வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைத்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் அசாத்தியமாகிவிடும் என்ற பூட்டோவின் கூற்று குறித்தும் இந்திரா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் வங்கதேசம் தொடர்பாக பதிலளித்த இந்திரா காந்தி, “கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கூட்டுப் படையின் முன் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததால், இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது… எனவே, என்ன நடக்க வேண்டும் என்பதை வங்கதேச அரசுதான் முடிவு செய்ய வேண்டும், மேலும், போர்க்குற்றங்களை விசாரிப்பது ஜெனீவா உடன்படிக்கைக்கு எதிரானது அல்ல” என்று கூறினார்.
மறுபுறம், இந்தியாவின் விருப்பத்திற்கு மாறான விளைவுகளைத் தந்த சிம்லா உச்சிமாநாடும், அதில் எட்டப்பட்ட ஒப்பந்தமும், பாகிஸ்தானுக்கு, அந்நாடு எதிர்பார்த்ததைவிட அதிக நன்மை பயப்பதாக இருந்தது.
சிம்லா ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தானின் 5 ஆயிரம் சதுர மைல் நிலங்கள், அந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தானிடம் திருப்பித் தரப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தந்தையிடம் கேள்வி கேட்ட பெனாசிர் பூட்டோ
‘டாட்டர் ஆஃப் த ஈஸ்ட்’ என்ற புத்தகத்தில், சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பூட்டோ தனது அறைக்குள் நுழைந்தபோது என்ன நடந்தது என்பதை பெனாசிர் விவரிக்கிறார்.
போர்க் கைதிகளை திரும்பக் கோருவதற்குப் பதிலாக போரில் இழந்த பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கு பூட்டோ ஏன் முன்னுரிமை அளித்தார் என பெனசீர் ஆச்சரியப்பட்டார்.
போர்க்கைதிகள் எப்போது திரும்ப வருவார்கள் என்று அவர்களுடைய குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பூட்டோ ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று பெனசீர் கேள்வி எழுப்பினார். பெனசீரின் கேள்விக்கு பதிலளித்த சுல்பிகர் அலி பூட்டோ, போர்க் கைதிகள் அல்லது கைப்பற்றிய பிராந்தியங்கள் என இரண்டில் ஏதேனும் ஒன்றை திருப்பித் தர இந்தியப் பிரதமர் முன்வந்தார் என்று கூறினார்.
போர்க் கைதிகள் என்பது ஒரு மனிதாபிமானப் பிரச்னை என்பதால், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைதான் கோரியதாக பூட்டோ கூறினார். ஏனென்றால், போர்க்கைதிகளை இந்தியா எப்போதும் தங்களிடம் வைத்திருக்க முடியாது. அவர்களை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்ப சர்வதேச சமூகம் இந்தியாவைக் கட்டாயப்படுத்தும். மறுபுறம், நிலம் என்பது ஒரு மனிதாபிமானப் பிரச்னை அல்ல, அதை இப்போது கேட்டுப் பெறுவதே புத்திசாலித்தனம் என்று பூட்டோ கூறினார்.
காஷ்மீர் மற்றும் சிம்லா ஒப்பந்தத்தின் புதிய அரசியலமைப்பு அந்தஸ்து
பூட்டோவின் ராஜதந்திரத்தால் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன நன்மைகள் கிடைத்தது, இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இந்திரா காந்தி இன்றுவரை விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன் என்பதுதான் கேள்வி.
பாகிஸ்தான் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சிம்லா ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் விதிகளின்படி அமைதியான வழிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்பு மோதல்களைத் தீர்க்க இரு நாடுகளையும் கட்டாயப்படுத்துகிறது.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் சச்சரவுகளைத் தீர்ப்பதை சிம்லா ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதில் வேறு எந்த தரப்புக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கூட எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா கருதுகிறது என பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தியாவின் கருத்துக்கு மாறாக, சிம்லா ஒப்பந்தத்தின் அதே பிரிவை விளக்கும் ஆய்வாளர்கள், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும், அவற்றின்படியே சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.
மேலும், இருதரப்புகளுக்கும் இடையிலான தகராறில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கை நீக்க முடியாது என்று சிம்லா ஒப்பந்தம் வலியுறுத்துவதாக பாகிஸ்தான் நம்புகிறது.
இருப்பினும், சில ஆய்வாளர்கள் இப்போது சிம்லா ஒப்பந்தம் ஒரு ‘பயனற்ற ஆவணம்’ என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய மக்களவையில் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்தபோது, அவர் பாகிஸ்தானை மிகவும் கருணையுடன் நடத்தியதாக புகார் கூறினார்கள். அதற்கு பதிலளித்த இந்திரா காந்தி, ”இந்தியா, பாகிஸ்தானுடன் சிம்லா ஒப்பந்தத்தை மேற்கொண்டதுபோல், ஐரோப்பிய நாடுகள் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியை கையாண்டிருந்தால், ஹிட்லர் உருவாகியிருக்கமாட்டார், இரண்டாம் உலகப் போர் நடந்திருக்காது” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU