SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
முன்னதாக, 12 இந்திய டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதே சமயம், ‘புதன்கிழமை இரவு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பல இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக’ இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் ‘பல இடங்களில்’ உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களை குறிவைத்து அழித்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு அறிக்கையையும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.
’25 இந்திய டிரோன்களை அழித்தோம்- பாகிஸ்தான்’

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 12 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி முன்னர் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. அதில் புதன்கிழமை இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியா கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 07, 2025 அன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் பதிலடி ‘தெளிவான இலக்கோடு, அளவோடு மற்றும் பதற்றத்தை அதிகரிக்காத வகையில் நடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி தரப்படும் என்பதும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், நேற்றிரவு, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைந்த ‘கவுண்டர் UAS (ஆளில்லா விமான அமைப்பு) கிரிட்’ மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் டிரோன்களின் சிதைந்த பாகங்கள் இப்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும், இது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது என்பதை நிரூபிக்கிறது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், வியாழக்கிழமை காலை பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை இந்திய ராணுவம் குறிவைத்ததாக இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. “நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சகம் கூறியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இதனால் பாகிஸ்தானின் மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதலை நிறுத்த மற்றும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
‘பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம்’

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுடனான ‘நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்’ இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் ‘மிகவும் உறுதியான பதிலடி’ வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் வருகை தந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன.
“ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்,” என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
“ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்” என்று ஜெய்சங்கர், இரானிய வெளியுறவு அமைச்சரிடம் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU