SOURCE :- BBC NEWS

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் 2025 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் முடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் 8 போட்டிகளில் சேஸிங்கில் தோற்ற ராஜஸ்தான் அணி கடைசி முயற்சியாக நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் 7 முறை ராஜஸ்தான் அணி டாஸ் வென்றபோதும் அதில் 7 முறையும் சேஸிங் செய்யவே முயன்றது. ஆனால், 6 முறை தோற்றாலும் மனதை தளரவிடாத கேப்டன் சாம்ஸன் நேற்றும் நம்பிக்கையுடன் சேஸிங்கை தேர்வு செய்து முடிவில் அதில் வெற்றியும் பெற்றார்.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 14வயது பேட்டர் சூர்யவம்சி(57), ஜெய்ஸ்வாலின்(36) அதிரடி தொடக்கம் முக்கியக் காரணமாக இருந்தாலும், பந்துவீச்சில் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய ஆகாஷ் மத்வால் முக்கிய காரணமாகும்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

மாத்ரே, பிரெவிஸ் சிறப்பான ஆட்டம்

இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு தலைவலியாகவும், தோல்விக்கு காரணமாகவும் இருந்தது பேட்டர்களும், பேட்டிங்கும்தான்.அது நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளையும், 7.4 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நடுப்பகுதி பேட்டர்களுக்குத்தான் அழுத்தம் கொடுத்தது. சுதந்திரமாக ஆடவேண்டிய நடுப்பகுதி பேட்டர்களுக்கு அழுத்தம், நெருக்கடி கொடுத்தால் எவ்வாறு பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியும் என்பது தெரியவில்லை.

சிஎஸ்கே அணியில் நேற்று அதிகபட்ச ஸ்கோர் தொடக்க ஆட்டக்காரர் மாத்ரே(43), பிரெவிஸ்(42) துபே(39) ஆகியோர் மட்டும்தான். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது எனத் தெரிந்தவின் சிறந்தகலவை வீரர்களைக் கண்டறியும் பணியில் 2ம் பகுதி சுற்றில் இறங்கியது. ஆனாலும், இன்னும் அந்த அணியால் சிறந்த பேட்டிங் கலவையை தேர்ந்தெடுக்கமுடியவில்லை.

சிஎஸ்கேயின் நடுவரிசைக்கு ரெய்னா, ராயுடு சென்றபின் யாரைக் கொண்டுவருவது என இதுவரை தேடியும் கிடைக்கவில்லை. ஜடேஜாவையும், அஸ்வினையும் நேற்று நடுவரிசையில் களமிறக்கி கையைச்சுட்டுக்கொண்டனர். அஸ்வினை 4வது வரிசையில் களமிறக்கும் அளவுக்கு டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டரா எனத் தெரியவில்லை. இந்த சீசன் முழுவதும் ஜடேஜாவின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

கடைசிக் கட்டத்தில் தோனி சொதப்பல்

பிரெவிஸ், துபே களத்தில் இருந்தவரை சிஎஸ்கே அணி 200 ரன்களுக்குமேல் சேர்த்துவிடும் என்று உணரப்பட்டது. ஆனால், இருவரும் சென்றபின் தோனியால் இவ்வளவுதான் பேட் செய்ய முடியும் என்பது நேற்று ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். 200 ரன்களுக்கு மேல் உயர வேண்டிய ஸ்கோரை இழுத்துப்பிடித்து 188 ரன்களோடு நிறுத்திவிட்டனர்.

தோனி களத்துக்கு வந்தவுடனே ஹசரங்கா, ரியான் பராக் இருவரையும் அழைத்து சாம்ஸன் சுழற்பந்துவீசச் செய்து தோனியைக் கட்டிப்போட்டார். தோனியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்து 16 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். டெத் ஓவர்களில் மத்வால், துஷார் தேஷ்பாண்டே இருவரும் சிஎஸ்கே பேட்டர்களை திணறவிட்டனர் இருவரும் சேர்ந்து வைடு யார்கர்களையும், யார்கர்களையும் வீசி, சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவை திணறவிட்ட ஜெய்ஸ்வால்

188 ரன்களை சேஸ் செய்யப் போகிறோம் என்ற பதற்றமோ கடைசி ஆட்டம்தானே என்ற அலட்சியமோ ராஜஸ்தான் அணியிடம் இல்லை. ஜெய்ஸ்வால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து எவ்வாறு அதிரடியாக பேட் செய்தாரோ அதேபாணியை மாற்றாமல் பொறுப்பாகவும், அதிரடியாகவும் தொடங்கினார். 13-வது முறையாக முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினார்.

கலீல் அகமதுவின் முதல் ஓவரில் சற்று திணறிய ஜெய்ஸ்வால் 3வது ஓவரிலிருந்து ஃபார்முக்குத் திரும்பி சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். ஆனால், கம்போஜ் பந்துவீச்சில் பந்து லேசாக ஸ்விங் ஆகாததை கணிக்காமல் ஜெய்ஸ்வால் ஆடியதால் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகி 19 பந்துகளில் 36 ரன்களில் வெளியேறினார்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

சீனியர்களை மிரட்டிய சூர்யவம்சி

அடுத்துவந்த சாம்ஸன், சூர்யவம்சியுடன் சேர்ந்தார். 14 வயது சிறுவன் சூர்யவம்சிக்கு ஒரு திசையில் மட்டும் ஷாட் அடிக்கத் தெரியும், பெரிய ஷாட்களைத் தவிர பொறுமையாக ஆடத் தெரியாது என்ற விமர்சனங்களுக்கு நேற்று சூர்யவம்சி பதில் அளித்தார். அதிரடியாகவும் அதேநேரத்தில் களத்தில் நிலைத்தும் விளையாடுவது எப்படி என்று சிஎஸ்கே வீரர்களுக்கு பாடம் எடுப்பது போல் அவரது ஆட்டம் இருந்தது.

தன்னால் நிதானமாகவும் பேட் செய்ய முடியும், டிபென்ஸ் செய்து ரன்களைச் சேர்க்க முடியும் என்பதை சூர்யவம்சி வெளிப்படுத்தினார். இருப்பினும் அவ்வப்போது தனது அதிரடி ஆட்டத்தால் சிக்ஸர் பவுண்டரிகளை விளாச சூர்யவம்சி தவறவில்லை. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது.

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது இவர்கள் யாருடைய பந்துவீச்சுக்கும் சூர்யவம்சி அஞ்சவில்லை. ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர், பவுண்டரி அடித்து ஓரம்கட்டினார். அஸ்வின் பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து பிரமிப்பூட்டினார் சூர்யவம்சி. நூர் அகமது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை துவைத்து எடுத்தார் சூர்யவம்சி.

14வயது சிறுவன் தங்கள் பந்துவீச்சை இந்தமாதிரி அடித்து நொறுக்கிறாரானே என மனதிற்குள் புலம்பிக்கொண்டே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனாலும் சூர்யவம்சியின் அதிரடிக்கு பிரேக்போட முடியவில்லை. 27 பந்துகளில் சூர்யவம்சி தனது 2வது அரைசதத்தை இந்த சீசனில் பதிவு செய்தார். இதில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கும்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் திருப்புமுனை

சூர்யவம்சியை தட்டிக்கொடுத்து, ஒத்துழைத்து கேப்டன் சாம்ஸனும் பேட் செய்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றனர். இருவரும் களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் வெற்றி எளிதாகவிடும் என்று நம்பப்பட்டது.

ஆனால், அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் சாம்ஸன்(41), சூர்யவம்சி(57) இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் சிஎஸ்கே கரங்களுக்கு மாறுகிறதா என எண்ணத் தோன்றியது. ரியான் பராக் 3 ரன்னில் விரைவாக வெளியேறினார்.

ஜூரெல் அதிரடி ஆட்டம்

துருவ் ஜூரெல், ஹெட்மெயர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.அதிரடியாக ஆடிய ஜூரெல் அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர்களும், நூர் அகமது, ஜடேஜா ஓவர்களில் சில பவுண்டரிகளும் அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். ஹெட்மெயரும் கேமியோ ஆடவே ராஜஸ்தான் எளிதாக வென்றது. ஜூரெல் 12 பந்துகளில் 31 ரன்களும், ஹெட்மெயர் 5 பந்துகளில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் சுழற்பந்து எடுபடவில்லையா?

இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின் நேற்றைய பந்துவீச்சு சொதப்பலாக இருந்தது. அதிலும் சிறுவன் சூர்யவம்சி அஸ்வின் பந்துவீச்சை வெளுத்துவிட்டார்.

இந்த ஆட்டத்தில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரின் எக்னாமி ரேட்டை பார்த்தால் படுமோசமாக உள்ளது. 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவரின் ஓவரில் 6 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசப்பட்டன.

கேரம் பால், நக்குல் பால் என அஸ்வின் வீசவதையெல்லாம் பேட்டர்கள் எளிதாக ஆடக் கற்றுக்கொண்டுவிட்டனர். அஸ்வின் பாரம்பரிய ஆஃப் ஸ்பின் வீசியிருந்தாலே ரன்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள்

சிறந்த கேப்டன் என அறியப்பட்ட தோனி நேற்று கேப்டன்ஷியில் பல தவறுகளைச் செய்தார். நடுவரிசையில் ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்காமல் அஸ்வினை ஏன் களமிறக்கினால் என்பது தெரியவில்லை. விக்கெட் சரிந்துவரும்போது, நிலைத்து ஆடக்கூடிய பிரெவிஸ், அல்லது ஜடேஜா, துபேயை முன்கூட்டியே களமிறக்கி இருக்காலம். அதைவிடுத்து, பிரெவிஸை ஏன் 6வது பேட்டராக களமிறக்கினார் எனத் தெரியவில்லை.

அதேபோல பதிரணாவுக்கு தொடக்கத்தில் ஓவர் அளித்தார் அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார், தொடர்ந்து பதிராணாவுக்கு ஓவர் வழங்கியிருக்கலாம் ஆனால், பந்துவீச வாய்ப்புத் தராமல் கடைசி நேரத்தில்வாய்ப்பு வழங்கினார். பதிராணா நேற்று 2.1 ஓவர்கள் மட்டுமே வீச வாய்ப்புக் கிடைத்தது. சூர்யவம்சி, ஜெய்ஸ்வால் அதிரடியால் பதற்றமடைந்த தோனி எந்த பந்துவீச்சாளரை பந்துவீச வைப்பது எனத் தெரியாமல் நேற்று சற்று தடுமாறியதைக் காண முடிந்தது.

கேப்டன் கூல் என்ற பெயரெடுத்த தோனியின் முகத்தில் பதற்றத்தின் தடங்கள் தெளிவாகத் தெரிந்தது. அந்த பதற்றம்தான் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன் கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற முடியாமல் தடுமாற்றத்தை தோனியால் தடுமாற்றத்தை சந்திக்க முடிந்தது.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

இதுவே பழைய தோனியாகஇருந்திருந்தால் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பைக் கூட வெற்றியாக மாற்ற முயற்சி எடுத்து முடிவை எந்த சூழலிலும் மாற்றியிருப்பார். ஆனால், செட்டில் பேட்டர்கள் சாம்ஸன், சூர்யவம்சி இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்துமே அந்த தருணத்தை வெற்றியாக தோனியால் மாற்ற முடியவில்லை ஏனோ தெரியவில்லை.

பேட்டிங்கிலும் தோனி நேற்று ஜொலிக்கவில்லை. தோனி களமிறங்கும் போது மீதம் 6 ஓவர்கள் இருந்தது, ஸ்கோர் 138 ஆக இருந்தது. தோனி நல்ல ஃபினிஷிங் அளி்த்திருந்தால் ஸ்கோர் நிச்சயமாக 200 ரன்களைக் கடந்திருக்கும். தோனி களத்துக்கு வந்து மந்தமாக ஆடத் தொடங்கியபின் ரன்ரேட் சரிந்தது.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் ” சிறந்த ஸ்கோர்தான். பிரெவிஸ் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன் ரேட்டை உயர்த்தும் அளவு பேட் செய்திருக்க வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். கம்போஜ் பந்துவீச்சு நன்றாக இருந்தது, நன்றாக ஸ்விங் செய்கிறார். பவர்ப்ளேயில் அவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

இளம் வீரர்கள் நிலைத்தன்மையைக் கொண்டுவர உழைக்க வேண்டும். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் போது நிலைத்தன்மையை கொண்டுவருவது கடினம்தான். ஆனாலும் எந்த நேரத்திலும் சிக்ஸர் அடிக்கும் திறனை வளர்க்க வேண்டும். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது சீனியர் வீரர்களிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும். அனைத்து இளம் வீரர்களுக்கும் இது எனது அறிவுரை” எனத் தெரிவித்தார்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவுக்கு இது மோசமான சாதனை

இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும், தோல்வியால் சிஎஸ்கே அணிக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மற்ற அணிகள் மீதும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் முடித்தது.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் அதில் வென்றாலும்கூட நிகரரன்ரேட்டில் மோசமாக இருப்பதால் 10-வது இடத்தில்தான் முடிக்க முடியும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு 2025 ஐபிஎல் சீசன் வரலாற்றில் மிகமோசமான கருப்பு சீசனாக என்றென்றும் இருக்கும். இதுநாள்வரை சிஎஸ்கே வரலாற்றில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அடைந்து தொடரை முடித்தது இல்லை. அந்த மோசமான சாதனையோடு சிஎஸ்கேயின் சீசன் முடியப்போகிறது.

ஆட்டங்களின் விவரம்

மும்பை vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் – மே 21

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம், Getty Images

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)

ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 559 (14 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU