SOURCE :- BBC NEWS
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக வழங்கப்படவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்காக வழங்கப்படவுள்ள விருதுகளின் பரிந்துரைப் பட்டியல் இன்று (ஜன. 16) வெளியாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்புகளை மதிக்கும் விதமாகவும், விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களின் சாதனைகளையும் கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
பிபிசியின் இந்திய மொழி இணையதளங்கள் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில், இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகள் கொண்ட இறுதிப் பட்டியலைத் தொகுத்துள்ளது.
இந்தியா முழுவதிலும் இருந்து நம்பகமான விளையாட்டு செய்தியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் எழுத்தாளர்கள், இந்த நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில், சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளை பிபிசியின் நடுவர் குழு, கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதில் பொதுமக்களின் வாக்குகளை அதிகமாகப் பெறும் விளையாட்டு வீராங்கனை, 2024ஆம் ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையாக அறிவிக்கப்படுவார்.
பிபிசியின் இந்திய மொழித் தளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் விருது முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்திய நேரப்படி, பொதுமக்கள் தங்கள் வாக்குகளை 2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 11.30 மணி வரை (GMT நேரப்படி 18:00) செலுத்த முடியும்.
டெல்லியில், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, நடைபெறவுள்ள விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
அனைத்து விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தை நீங்கள் பார்வையிடலாம்.
மேலும் நடுவர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட பிற விளையாட்டு வீராங்கனைகள் மூவரையும் பிபிசி கௌரவிக்கும்.
அதன் விவரம் பின்வருமாறு,
- இளம் விளையாட்டு வீராங்கனையின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஒருவருக்கு பிபிசி இளம் விளையாட்டு வீராங்கனை விருது
- விளையாட்டுத் துறையில் இணையற்ற பங்களிப்பைச் செய்த வீராங்கனை ஒருவருக்கு, பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது
- பாரா விளையாட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கு பிபிசி பாரா விளையாட்டு வீராங்கனை விருது
விருது வழங்கும் விழா தவிர, விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகளை விளக்கும் ‘சாம்பியன்களின் சாம்பியன்கள்’ எனும் தலைப்பில் ஒரு சிறப்பு ஆவணப்படமும் வெளியிடப்படவுள்ளது.
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது, தற்போது ஐந்தாவது ஆண்டாக வழங்கப்படவுள்ளது.
இந்த விருது, இந்தியாவில் உள்ள பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் 2019இல் நிறுவப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அந்த ஆண்டுக்கான வெற்றியாளராக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பி அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றார்.
மேலும், வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தடகள வீராங்கனைகளான பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை ப்ரீதம் சிவாச் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளனர்.
கடந்த முறை, நடுவர்கள் குழுவின் பரிந்துரைக்குப் பின்னர், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, பிபிசியின் சிறந்த பாரா விளையாட்டு வீராங்கனை விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேலுக்கு இந்தப் பிரிவுக்கான முதல் விருது வழங்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU