SOURCE :- BBC NEWS

மோதி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மேலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், இந்திய பிரதமருடன் சந்திப்புகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பௌத்தர்களின் புனிதத் தலமாக போற்றப்படும் அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் மோதி கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் மோதி கலந்துகொள்ள உள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த பயணத்தின் போது கையெழுத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை இந்தியாவால் வழங்க முடியுமென இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில், 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக, தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது.

எனினும், இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை, அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அதனை முழுமையாக அமல்படுத்த இலங்கை மத்திய அரசாங்கம் மறுத்து வருகின்றது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், தமிழர்களுக்கான தீர்வாக 13வது திருத்தத்தையேனும் முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையக தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

மேலும், பௌத்த மத முன்னேற்றத்துக்காக இந்தியா பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கையில் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 2014ல் மோதி முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தற்போதுவரை மூன்று முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோதி முதல் தடவையாக 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Getty Images

இந்தநிலையில், மோதி நான்காவது தடவையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் புதிய அரசாங்கம் இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர், உலக அரசத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது.

மோதியின் இம்முறை பயணத்தை இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?

தமிழ் அரசியல் கட்சிகளின் பார்வை

மோதி இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம்.

இந்தியாவினால் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோதியிடம் தாம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

மனோகணேசன்

”இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பிரதானமான காரணம் பொருளாதார வீழ்ச்சி. அதிலிருந்து எழுந்து விடவில்லை. இன்னும் இரண்டு வருடங்களிலே மீள் திருத்தப்பட்ட கடன்களை கட்ட வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஐ.எம்.எஃப் பிரதான செயற்பாட்டில் அது பிரதானமான அங்கமாக இருக்கின்றது. ஆகவே, இந்தியா முன்னேறுகின்றது என்றால், பக்கத்தில் இருக்கின்ற நாமும் அவர்களோடு சேர்ந்து முன்னேற வேண்டும். தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையின் அதிகாரப் பகிர்வு என்பது தேவையான விடயமாக இருக்கின்றது.” என்கிறார் அவர்.

தற்போது ஆளும் கூட்டணியின் முதன்மையாக அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம், அதிகார பகிர்வு, மாகாண சபை ஆகியவற்றுக்கு எதிராக முன்னர் போராடியதாக அவர் கூறுகிறார்.

“மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டாலும் கூட மாகாண சபைக்கு எதிராக அநுர குமாரவையும் மீறி, அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முரணான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றார். உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம்தான் எங்களுக்கு இருக்கின்றது.” என்கிறார் அவர்.

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்.

‘ஓ.சி.ஐ முறையை இலகுப்படுத்துக’

“எங்களுடைய அரசியல் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைக்க விரும்பவில்லை. அரசாங்கம், எதிர்க்கட்சிகளிடம் அந்த கோரிக்கைகளை வைப்போம். ஏனெனில், இந்தியாவிடம் அக்கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் அவை நடக்காது என்று எங்களுக்கு தெரியும். ” என்றும் கூறுகிறார் மனோ.

இந்தியாவிடம் அவர் முன்வைக்க உள்ள சில பொதுவான கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

  • பெருந்தோட்ட மலையக மக்களுக்கான பொருளாதார உதவிகள்
  • கல்வி உதவிகளை வழமை போன்று இந்தியா அதனை அதிகரிக்க வேண்டும்.
  • இந்திய நாட்டிலே ஓ.சி.ஐ என்ற முறை இருக்கின்றது. இந்திய வம்சாவளி மக்களுக்கு, கடல் கடந்த பிரதிகள் என்ற அந்தஸ்தை வழங்கினார்கள். அந்த அந்தஸ்து இலங்கைக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சமீப காலத்தில் அதனை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஓ.சி.ஐ அந்தஸ்தை வழங்க வேண்டும்.
ஸ்ரீதரன்

கூட்டாட்சி தீர்வு

சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதற்கான ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஈழத் தமிழர்களுக்கு காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

”இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஈழத் தமிழர் சார்பான தரப்பாக இந்தியாவே அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது, அந்த ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தமிழர் தரப்புக்கு முழுமையாக இதுவரை தெரிய வந்ததில்லை.” என கூறுகிறார் ஸ்ரீதரன்.

குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்கள், இலங்கையின் இறையாண்மை, இந்தியாவின் இறையாண்மை தொடர்பாகவே அதில் அதிகமாக பேசப்பட்டிருப்பதாக கூறப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

“இந்திய பிரதமரின் வருகையால் தங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு அல்லது அரசியல் எதிர்காலம், நிரந்தரமான அரசியல் வாழ்வு கிடைக்கும் என்ற ஈழத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் பிரதமரின் வருகை அமையும் என நம்புகின்றோம்.” என்கிறார் அவர்.

” 2015ம் ஆண்டில் பாரத பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சமஷ்டி (கூட்டாட்சி) முறை பற்றி கூறியிருந்தார். சமஷ்டி அரசியல் தீர்வுதான் தமிழர்களுக்கு பொருத்தமானது. அந்த வகையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்,” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

செந்தில் தொண்டமான்

மலையக மக்களுக்கு இந்தியா இதுவரை பெரும் உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதே உதவிகளை தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

”இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அரசியலையும் தாண்டிய ஒரு கலாசார உறவு காணப்படுகின்றது. இரண்டு பேரும் சகோதரர்கள். இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இலங்கையுடன் முதன்முதலில் இருந்தது இந்தியா. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக இந்தியா பெரும் உதவிகளை வழங்கியது.” என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்திய பிரதமர் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தருகின்றார்.

“உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த வகையில் இலங்கை பயணிக்கும் போது பொருளாதார ரீதியில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இந்தியா அரசாங்கம் மலையக மக்களுக்காக பெரும் உதவிகளை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இந்தியா அதிக உதவிகளை வழங்கியுள்ளது. அதே உதவிகளையே நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்” என செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

சீன விவகாரம், அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், தமிழர் பிரச்னை, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை பயணத்தின் போது கவனம் செலுத்தப்படக்கூடும் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

சிவராஜா

பட மூலாதாரம், SIVARAJA

”இந்திய பிரதமரின் வருகையானது, மிக முக்கியத்துவமான காலக் கட்டத்தில் நடைபெறுகின்றது. இந்த அரசாங்கம் சீன சார்பான அரசாங்கம் என்ற ஒரு முத்திரை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனது ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக அதன் பிரதமரே நேரடியாக வருகின்றார் என்பது இந்த அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும்.” என்கிறார் அவர்.

“அதானி காற்றாலை திட்டம் கிடப்பில் இருக்கின்றது. எனவே, அது புத்துணர்ச்சி பெறுமா? அதேபோன்று, பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை இந்தியா செய்யவுள்ளதாக ஒரு தகவல் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பதை பொருத்து இந்த பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரியும். தமிழர்கள் திட்டத்தில் இந்தியா நிச்சயம் வலியுறுத்தும். பிரதமர் மோதி இந்த விஜயத்தில் அதனை சொல்வார் என நான் நினைக்கின்றேன்.” என்றார் அவர்.

13வது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அது நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

“ஆனால், இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் தமிழர் பிரச்னை குறித்து நிச்சயம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றபோது கூட, இது தொடர்பான விடயத்தை இந்தியா பேசவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. எனவே, இந்த பயணத்தில் மோதி அதனை வலியுறுத்துவார் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது,” என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU