SOURCE :- BBC NEWS

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Palanivel Thiaga Rajan/Facebook

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 23 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அந்த கேள்வியில், “எனது தொகுதியான கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான நிறுவனங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அந்தப் பகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஒரு சிறிய பங்கு, எல்காட் மட்டும்தான் தங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது எனக்கூறிய அமைச்சர், பாக்கியுள்ள டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது என்றார்.

“அது அசாதாரணமான சூழலாக இருந்தாலும் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” என்றார். அவரது இந்த பதில் ஆளும்கட்சியின் உறுப்பினர்களை அதிரவைத்தது.

இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “உறுப்பினர் கோரிக்கையாக கேட்கிறார். அமைச்சர் இதையெல்லாம் உள்ளுக்குள்ளே முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாகப் பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்” என்றார்.

தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. இந்த நிலையில்தான், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கும் வருத்தத்துக்கும் பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதிக் கட்சியின் தலைவருமாக இருந்தவரும் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி. ராஜன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. “திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு” என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுப் பேசினார்.

பி.டி. ராஜன், நீதிக் கட்சி, திராவிட இயக்கம், மத்திய அரசு குறித்தெல்லாம் பேசிய முதலமைச்சர், தனது பேச்சை நிறைவுசெய்வதற்கு முன்பாக, பழனிவேல் தியாகராஜனின் முந்தைய நாள் பேச்சுக்கு பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Palanivel Thiaga Rajan/Facebook

ஸ்டாலின் வழங்கிய அறிவுரை

“நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். ” என்றார்.

நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக்கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள் எனக்கூறிய முதலமைச்சர், அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க. தலைவராக மட்டுமல்லாமல், உங்கள் மீது அக்கறை கொண்டவனாகவும் அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என, பி.டி.ஆருக்கு அறிவுறுத்தினார்.

“என் சொல்லைத் தட்டாத பி.டி.ஆர். என்னுடைய அறிவுரையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

சர்ச்சைகள் புதிதல்ல

இதன் மூலம் இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இதுபோல பேசி சலசலப்பில் சிக்குவது முதன்முறை இல்லை. 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராவதற்கு முன்பாக, அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துவந்த கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பெரிய சர்ச்சையாக மாறவில்லை. அவர் நிதியமைச்சரான பிறகு, தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனையே எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்து அதிரவைத்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Palanivel Thiaga Rajan/Facebook

இருந்தபோதும், அவர் நிதியமைச்சராகப் பதவியேற்றதும் மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன, பாராட்டுதல்களையும் பெற்றன. மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் 2023ஆம் ஆண்டில் முதலமைச்சரின் குடும்பத்தினர் குறித்து இவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். ஆடியோ வெளியானதன் தொடர்ச்சியாகவே முக்கியத்துவம் இல்லாத துறைக்கு அவர் மாற்றப்பட்டதாக பேசப்பட்டது.

இருந்தபோதும் தொடர்ந்து செயல்பட்டுவந்த பழனிவேல் தியாகராஜன், தேசிய அளவிலான விவகாரங்களைத் தி.மு.க. கையில் எடுக்கும்போது, ஆங்கில ஊடகங்களில் தி.மு.கவின் கருத்துகளை வலுவாக முன்வைப்பதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துவந்தார். இந்த நிலையில்தான் சட்டமன்றத்தில் அவர் சமீபத்தில் பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிஆர் பேச்சு பெரிதுபடுத்தப்படுகிறதா?

“பி.டி.ஆர். பேசிய பேச்சு இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பெரிதுபடுத்தப்படுகிறது. அவர் இந்தத் துறைக்கு வந்த பிறகு பல முறை தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயன்.

அவர் சொல்வதைப்போல, தனது துறைக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு இருப்பது குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசுவது இதுவே முதல் முறையல்ல. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதேபோல கேள்வி நேரத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், பிற மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் அந்தத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார். ”

தமிழ்நாட்டில் 30 இடங்களில் ‘ஐடி பார்க்’ அமைக்க கோரிக்கை வந்துள்ளது எனக்கூறிய அமைச்சர், ஆனால், இந்த நிதியாண்டில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 119 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இதை வைத்து ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் என்றார்.

“கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிளின் மொத்த பட்ஜெட் தமிழ்நாட்டைவிட குறைவாக இருந்தாலும் இந்தத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் ஐடி துறைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தெலங்கானாவில் 776 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம், TNDIPR

“இப்போதும் அதைத்தான் சொன்னார். ஆனால், இந்த முறை விவகாரம் பெரிதாகிவிட்டது. கூடுதலாக நிதி ஒதுக்கீடு இருக்கக்கூடிய துறை தனக்கு இருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் இந்தப் பேச்சைப் பார்க்கலாம்” என்கிறார் கார்த்திகேயன்.

வெளிப்படையாக பேசியிருக்க வேண்டுமா?

ஆனால், பி.டி.ஆர். இவ்வளவு வெளிப்படையாக இதனைப் பேசியிருக்க வேண்டியதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

“ஐ.டி. துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர் நிதியமைச்சராக இருக்கும்போதும் இதுபோலத்தானே நிதி ஒதுக்கப்பட்டது? அப்போது இருந்தவர்கள் இப்படிப் பேசவில்லையே? ஒன்று, இது தனது துறைக்கான கேள்வியில்லை எனச் சொல்லியிருக்கலாம், அல்லது மென்மையாக மறுத்திருக்கலாம். இதுபோல பேசுவது முதலமைச்சருக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்தும்” என்கிறார் குபேந்திரன்.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களைப் (IT Parks) பொறுத்தவரை, தொழில்துறையின் கீழ் உள்ள டிட்கோவும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள எல்காட்டும் இணைந்தும் தனித்தனியாகவும் கட்டிவருகின்றன. சென்னையில் உள்ள டைடல் பார்க், டிட்கோ – எல்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. ஆனால், முதலீட்டின் பெரும்பகுதி டிட்கோவினுடையது என்பதால், அந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மதுரை போன்ற இடங்களில் எல்காட் நிறுவனமே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU