SOURCE :- BBC NEWS

டிரம்ப், ஜெலென்ஸ்கி, புதின், ரஷ்யா, அமெரிக்கா, யுக்ரேன்

பட மூலாதாரம், Andriy Yermak/Telegram

வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தொடர்ந்து ‘யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் விருப்பம்’ குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ரோமில் இருந்து கிளம்பிய பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்ட டிரம்ப், “இந்த வார தொடக்கத்தில் யுக்ரேனின் கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்ட பிறகு, புதின் என்னை தவறாக வழிநடத்துகிறாரோ என்று அஞ்சுகிறேன். மேலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு புதினுக்கு எந்த காரணமும் இல்லை” என்றும் கூறினார்.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சற்று முன்பு, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் டிரம்பும் ஸெலென்ஸ்கியும் ஒரு தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஸெலென்ஸ்கியுடனான 15 நிமிட சந்திப்பு ‘மிகவும் பயனுள்ளதாக இருந்தது’ என வெள்ளை மாளிகை விவரித்தது.

யுக்ரேன் அதிபர், ‘இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக மாறும் சாத்தியம்’ இருப்பதாகக் கூறினார்.

கடந்த பிப்ரவரியில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கடுமையான வார்த்தை மோதலுக்குப் பிறகு, யுக்ரேன் அதிபருடனான டிரம்பின் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும்.

தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், “யுக்ரேன் நகரங்கள் மீதான ரஷ்யயாவின் தாக்குதல்களைப் பார்த்தால், ‘ஒருவேளை அவர் (புதின்) போரை நிறுத்த விரும்பவில்லை என்றும், அவர் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் எனக்குத் தோன்றுகிறது. தற்போது அவரை ‘நிதிரீதியாக’ அல்லது ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ மூலம் வேறுமாதிரியாக கையாள வேண்டுமா?” என்று தெரிவித்துள்ளார்.

யுக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை

டிரம்ப், ஜெலென்ஸ்கி, புதின், ரஷ்யா, அமெரிக்கா, யுக்ரேன்

பட மூலாதாரம், Andriy Yermak/Telegram

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய அதிபர் இடையே நடந்த மூன்று மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ‘ரஷ்யாவும் யுக்ரேனும் ‘ஒரு ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக’ இருப்பதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ‘முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் யுக்ரேனுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக, புதின் விட்காஃப்பிடம் உறுதிப்படுத்தியதாக’ ரஷ்ய அதிபர் அலுவலகம் சனிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று தெரிவித்துள்ளது.

கடந்த முறை நடந்த சந்திப்பின்போது, டிரம்ப் ஸெலென்ஸ்கியிடம் ‘உங்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை’ என்று கூறியதுடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸெலென்ஸ்கியால் வெற்றிபெற முடியாது எனவும் கூறினார்.

இந்த வாரம் அவர் அந்த செய்தியை மீண்டும் கூறினார், “யுக்ரேன் தலைவரிடம் வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.”

யுக்ரேன்தான் போரைத் தொடங்கியதாக டிரம்ப் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஸெலென்ஸ்கி ஒரு தடையாக இருப்பதாக பலமுறை கூறியிருந்தார்.

ஆனால் சனிக்கிழமை நடந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை மிகவும் நேர்மறையான தொனியை வெளிப்படுத்தியது, அதே நேரத்தில் ஸெலென்ஸ்கி இந்த சந்திப்பை “நம்மால் கூட்டு முடிவுகளை அடைய முடிந்தால், இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக மாறும்” என்று விவரித்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் அமெரிக்கத் தலைவர் நீல நிற ‘சூட்’ உடையிலும், யுக்ரேன் அதிபர் கருப்பு நிற மேல் சட்டை மற்றும் கால்சட்டையிலும், ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து தீவிர உரையாடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது.

யுக்ரேனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவும் இந்த சந்திப்பின் படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, அதில் “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் முக்கியத்துவத்தை விவரிக்க வார்த்தைகள் தேவையில்லை. செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமைதிக்காக உழைக்கும் இரண்டு தலைவர்கள்” என்ற தலைப்புடன் பதிவிட்டார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைவர்களை சந்தித்த ஸெலென்ஸ்கி

டிரம்ப், ஜெலென்ஸ்கி, புதின், ரஷ்யா, அமெரிக்கா, யுக்ரேன்

பட மூலாதாரம், PA Media

யுக்ரேனிய தூதுக்குழுவால் வெளியிடப்பட்ட மற்றொரு படம், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்சின் மக்ரோங் ஆகியோருடன், டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி நிற்பதைக் காட்டியது.

பிரிட்டன் பிரதமரும் பிரெஞ்சு அதிபரும், டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியை ஒன்றிணைக்க உதவியதாக இதன் உட்குறிப்பு இருந்தது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, டிரம்பும் ஸெலென்ஸ்கியும் பசிலிக்காவின் படிகளில் இறங்கி, இறுதிச் சடங்கு நடக்கும் பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கு ஸெலென்ஸ்கியின் வருகை கூட்டத்தினரின் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது. பிறகு இரு தலைவர்களும் முன் வரிசையில் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர்.

தனது மறையுரையில், போப் பிரான்சிஸின் அமைதிக்கான இடைவிடாத அழைப்புகளைப் பற்றி கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே பேசினார். “‘சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுங்கள்’ என்பது போப் பிரான்சிஸ் பலமுறை திரும்பத் திரும்பச் சொன்ன அறிவுரை” என்று கார்டினல் கூறினார்.

டிரம்ப், ஜெலென்ஸ்கி, புதின், ரஷ்யா, அமெரிக்கா, யுக்ரேன்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் அதிகாரிகள், இரு தலைவர்கள் மீண்டும் சந்திப்பது சாத்தியம் என்று பேசியிருந்தனர். ஆனால் டிரம்பின் வாகன அணிவகுப்பு உடனடியாக செயின்ட் பீட்டர்ஸிலிருந்து புறப்பட்டது, சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது விமானம் ரோமில் இருந்து புறப்பட்டது.

இருப்பினும், ஸெலென்ஸ்கி, வாடிகனுக்கான (Holy See) பிரெஞ்சு தூதரகம் அமைந்துள்ள ‘வில்லா போனபார்ட்டின்’ தோட்டத்தில் பிரான்சின் அதிபர் மக்ரோங்கை சந்தித்தார்.

பின்னர் அவர் பிரிட்டன் தூதரின் இல்லமான ‘வில்லா வோல்கோன்ஸ்கியில்’ பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரைச் சந்தித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU