SOURCE :- BBC NEWS

புதிய போப்-ஐ தேர்வு செய்ய புகையின் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Reuters

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, ஈஸ்டர் திங்களன்று காலமானார். இந்நிலையில், அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்வதற்கான செயல்முறை விரைவில் தொடங்கிவிடும்.

அந்தச் செயல்முறையின் முக்கியமான அங்கமாக இருப்பது, புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் புகை. ஆம், அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடக்கும் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் புகை மூலமாகத்தான் தேர்தலின் முடிவு அறிவிக்கப்படும்.

இதுவொரு பழங்காலச் சடங்கு. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் அறிவிக்கப்படும் முடிவைப் பின்பற்றுகிறார்கள்.

அவர்கள் அனைவரும் தேவாலயத்தின் புகைப்போக்கியில் இருந்து எப்போது வெள்ளைப் புகை வெளியேறும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில், அதுதான் ஒரு புதிய போப் கிடைத்துவிட்டார் என்பதற்கான அடையாளம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

சிஸ்டைன் தேவாலயத்தின் புகைப்போக்கியில் வெள்ளைப் புகை வெளியேறினால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று பொருள். அதுவே, கருப்புப் புகை வெளியேறினால் மறுவாக்கெடுப்பு நடத்தப்படும் எனப் பொருள்.

இந்தப் பழங்காலச் செயல்முறையின் பின்னால், வியக்கத்தக்க வேதியியல் ரகசியம் ஒன்று உள்ளது.

புகைப்போக்கியில் இருந்து வெளியே வருவது கருப்பு அல்லது வெள்ளை நிறப் புகைதான் என்பதை உறுதி செய்ய, இந்த மாநாட்டில் சிறிய அளவிலான புகைக் குண்டுகளைத் தயாரிக்கும் வழிமுறை பின்பற்றப்படுகிறது.

புதிய போப்-ஐ தீர்மானிக்கும் புகை எப்படி உருவாக்கப்படுகிறது?

புதிய போப்-ஐ தேர்வு செய்ய புகையின் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன?

சுமார் 1800களின் முற்பகுதியில் தொடங்கி, கார்டினல்கள் பயன்படுத்திய வாக்குச்சீட்டுகள், தேர்தலுக்கான ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதைக் குறிக்கும் ஒரு வழியாக ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும் எரிக்கப்பட்டன.

மறுபுறம், புகை இல்லாமல் இருந்தால், அது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறித்தது.

கடந்த 1914ஆம் ஆண்டு முதல், இந்த நடைமுறை மேம்படுத்தப்பட்டது. அதன்படி, கருப்புப் புகை என்பது ஒரு புதிய போப்பை தேர்வு செய்வதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஒருமித்த கருத்தை இன்னும் கார்டினல்கள் எட்டவில்லை என்பதைக் குறிக்கிறது. அதுவே, புதிய போப் தேர்வு செய்யப்பட்டுவிட்ட தருணம் வரும்போது, புகை வெள்ளை நிறத்தில் வெளிவரும்.

ஒரு தனித்துவமான அடுப்பில் வாக்குச் சீட்டுகளை எரிப்பதன் மூலம் புகை உருவாகிறது.

இருப்பினும், புகைக்கு கருப்பு, வெள்ளை நிறங்களைக் கொடுக்க, சில ரசாயன சேர்க்கைகள் பயன்படுத்தப்பட்டு இரண்டாவது அடுப்பில் எரிக்கப்படுகின்றன. கடந்த காலத்தில், வாடிகன் எளிமையான முறைகளைப் பயன்படுத்தியது.

அதாவது, ஈரமான வைக்கோல் வெள்ளைப் புகையை உருவாக்கியது. எண்ணெய்க் கரிக்கசடு கருப்புப் புகையை உருவாக்கியது.

புதிய போப்-ஐ தேர்வு செய்ய புகையின் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன?

கேம்ப்ஃபயர் நெருப்பு மூட்டிய எவருக்கும், ஈரமான புல் தெளிவான புகையை உருவாக்கும் என்றும் பழைய டயர்களை நெருப்பில் வீசினால் அடர்த்தியான, நச்சுத்தன்மை வாய்ந்த கருப்புப் புகை உருவாகும் என்றும் தெரியும். அது தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கரிமத் துகள்களைக் கொண்டிருக்கும்.

இருப்பினும், இத்தகைய சுற்றுச்சூழல் கவலைகளால் உந்தப்பட்டு வாடிகன் இந்த முறையிலிருந்து மாறவில்லை. பிரச்னை வேறாக இருந்தது. முந்தைய மாநாடுகளில், புகை சாம்பல் நிறமாகவும் தெளிவற்றதாகவும் வெளிவந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. எனவே, 2005 முதல் ரசாயன சேர்மங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவும் துல்லியமான நுட்பத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

வாடிகன் சமீபத்தில் இதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த தகவல்களை வெளியிட்டது. அதன்படி,

  • கருப்புப் புகை பொட்டாசியம் பெர்குளோரேட், ஆந்த்ராசீன் மற்றும் கந்தகத்தின் கலவையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
  • வெள்ளைப் புகை, பொட்டாசியம் குளோரேட், லாக்டோஸ் (பால் சர்க்கரை) மற்றும் ரோசின் எனப்படும் ஊசியிலையில் உள்ள பிசின் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. இது இசைக்கலைஞர்களால் வயலின் வில்லில் உராய்வை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நடைமுறையில், அவர்கள் வழக்கமான புகைக் குண்டுகளின் எளிய பதிப்புகளை உருவாக்குகிறார்கள். இந்தக் குண்டுகள் சர்க்கரை போன்ற கரிமம் நிறைந்த பொருளை, ஒரு ஆக்சிஜனேற்ற ஏஜென்டுடன் இணைப்பதன் மூலம் செயல்படுகின்றன. இது புகைக் குண்டை எரிவதற்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.

புதிய போப்-ஐ தேர்வு செய்ய புகையின் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பெர்குளோரேட் மற்றும் பொட்டாசியம் குளோரேட் மிகவும் பொதுவான ஆக்சிஜனேற்றிகளாகும். ஆந்த்ராசீன், லாக்டோஸ் மற்றும் பிசினில் இருந்து கார்பன் வருகிறது.

நிலக்கரி தாரில் காணப்படும் ஆந்த்ராசீன், அடர்த்தியான கருப்புப் புகையை உருவாக்குவதற்குச் சிறந்த ஒன்று. ஆனால், அது புற்றுநோயை உண்டாக்கும் என்பதால் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. நன்கு எரியும் கந்தகம், துப்பாக்கிப் பொடியின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. மேலும், வாடிகனின் கருப்புப் புகைக் கலவை இந்தப் பழைய சூத்திரத்தை மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால், சால்ட்பீட்டருக்கு பதிலாக பெர்குளோரேட் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளைப் புகைக்கு, ராணுவப் பயன்பாடுகளில், துத்தநாக தூசி மற்றும் ஹெக்ஸாகுளோரோஈத்தேன் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவொரு நச்சு கரைப்பான். இது பயனுள்ளதாக இருந்தாலும், கல்லீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே, வாடிகன் பாதுகாப்பான வழியைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை.

புகையை வெளியிடும் கட்டமைப்பு இன்று மிகவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார ஹீட்டர்கள், மின்விசிறிகள் ஆகியவை புகை ஆற்றலுடன் வெளியேறுவதை உறுதி செய்கின்றன. மேலும், கருப்புப் புகை சிறிய துகள்களாக உடைந்து வெண்மையாகத் தோன்றுவதைத் தடுக்க இந்தச் செயல்முறை உதவுவது சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU