SOURCE :- BBC NEWS

பூமியில் முதல் உயிர் தோன்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

‘முட்டையிலிருந்து கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?’, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எப்படி கடினமோ அதேபோல, பூமியில் முதல் உயிர் எப்படி தோன்றியது? என்பதற்கு பதில் சொல்வதும் சுலபமல்ல.

உயிர்களின் தோற்றம் குறித்த கேள்விக்கான அறிவியல்பூர்வமான பதில் இன்னும் தெளிவாக சொல்லப்படவில்லை அல்லது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், உயிர்களின் தோற்றத்திற்கு கார்பன் சார்ந்த மூலக்கூறுகள், திரவ நீர் மற்றும் ஒரு ஆற்றல் மூலத்தின் இருப்பு தேவைப்படுகிறது என்பது மட்டும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், சில மத நூல்களில் பூமியில் உயிர்கள் எப்படி உருவாயின என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சி மூலமாக புதிய பதில்கள் அல்லது பதிலின் ஒரு பகுதி கிடைக்கும் போது, மத நூல்களில் கூறப்பட்டுள்ள பதில்களோடு அதைப் பொருத்தி பார்ப்பதும் பொதுவான ஒன்று தான்.

அப்படியிருக்க, ‘பூமியில் உயிர்கள் எப்படி தோன்றின?’ என்ற கேள்வி மீண்டும் பிரபலமாக காரணம், ‘K2 18b‘ என்னும் வெளிக்கோளில் (Exoplanets- நமது சூரியமண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள்) உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதாக, அந்த கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது தான்.

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், NASA

டைமெத்தைல் சல்ஃபைடு (DMS), டைமெத்தைல் டைசல்ஃபைடு (DMDS)- இந்த இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் ‘K2 18b’ கோளின் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழுவின் முடிவுகளை உறுதி செய்ய இன்னும் அதிக தகவல்கள் தேவை.

‘ஏலியன்’ அல்லது வேற்றுகிரகவாசி எனும் வார்த்தையைக் கேட்டவுடன், நம் மனதிற்குள் ஒரு உருவம் தோன்றும். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, ‘ஏலியன்’ கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவான பல்வேறு திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அது. அவை உண்மையா அல்லது கற்பனையா என்ற விவாதங்கள் தொடர்கின்றன. அப்படியிருக்க, இந்த முடிவுகள் அந்த விவாதங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளன.

மதங்களும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும்

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், Getty Images

இப்போது மீண்டும் நமது கேள்விக்கு வருவோம், உயிரினங்களின் தோற்றம்- இதைப் பற்றி பேசும்போது நாம் சார்லஸ் டார்வினின் ‘பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை’ தவிர்க்க முடியாது.

ஏனென்றால் அதுவரை, கடவுள்தான் மனிதனை அல்லது உயிரினங்களைப் படைத்தார் என்று மதங்கள் சொல்லி வந்த கோட்பாடுகளையும், கருத்துகளையும் மறுதலிக்கக் கூடியதாக அவரது கோட்பாடு அமைந்தது.

உதாரணத்திற்கு, கிறித்தவ மதத்தின் புனித நூலான பைபிளில் ‘தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான் (ஆதியாகமம் 2:7)’ என்று உள்ளது.

அதேபோல, இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர்ஆனில், ‘உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் (குர்ஆன் 21:30)’ என்று உள்ளது.

ஜப்பானின் ஷின்டோ மதத்தின் புனித நூலான கோஜிகி (Kojiki), ‘சொர்க்கத்தின் மிதக்கும் பாலத்திலிருந்து, இசானகி மற்றும் இசானமி தெய்வங்கள் ரத்தின ஈட்டியால் கடலை அசைத்து, (ஜப்பானின்) முதல் நிலத்தை உருவாக்கினர். அதன் பிறகு கடவுள்களும், இயற்கையின் ஒரு பகுதியாக மனிதர்களும் உருவாகினர்’ என்று கூறுகிறது.

இந்து மதத்தைப் பொருத்தவரை, பிரபஞ்சம் கடவுள் பிரம்மாவால் உருவாக்கப்பட்டது, அவரே பிரபஞ்சத்தை உருவாக்கிய படைப்பாளர். பிரம்மா உலகைப் படைத்த பிறகு, உலகத்தையும் மனிதர்களையும் காப்பாற்றுவது விஷ்ணுவின் சக்திதான்.

யூத மதத்தின் புனித நூலின்படி (ஹீப்ரு பைபிள்) கடவுளே உலகத்தையும், உயிரினங்களையும் படைத்தார்.

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், Getty Images

அப்படியிருக்க, டார்வின் 1859-ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.

அனைத்து உயிரினங்களுமே ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து கிளைத்தவை, அதாவது, மனிதன், யானை, சிங்கம், மீன்கள், முதலைகள் என அனைத்துமே பொதுவான ஓர் உயிரில் இருந்து பரிணாம வளர்ச்சியின் விளைவாக வந்தவை என்பது டார்வினின் கோட்பாடு.

‘Survival of the fittest’- பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டு பொருத்திக் கொள்ளும் உயிரினமே தொடர்ந்து வாழும், இதுவும் அவரது கோட்பாட்டின் முக்கிய அம்சம். ஆனால், டார்வினின் கோட்பாட்டில் உலகில் முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது குறித்து சொல்லப்படவில்லை.

‘உயிர் உருவாக சூப்பர் பவர் தேவையில்லை’

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், NASA

“டார்வினின் கோட்பாடு வந்த பிறகும் கூட, முதல் உயிரை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியே உருவாக்கியது என்றும், அதன் பிறகே அது பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றும் நம்பப்பட்டது. அந்தக் கருத்தை மாற்றியவர் சோவியத் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஒபரின்” என்று கூறுகிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

தனது ஆராய்ச்சி மூலம், ஒரு உயிர் உருவாக இயற்கைக்கு மீறிய ‘சூப்பர் பவர்’ தேவையில்லை, இயற்கையின் போக்கிலேயே உயிர் உருவாகும் என முதன்முதலாக கண்டறிந்தவர் ஒபரின் தான் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

அலெக்ஸாண்டர் ஒபரின், 1924ஆம் ஆண்டு ‘ப்ரிமோர்டியல் சூப்‘ எனும் கோட்பாட்டை முன்வைத்தார். பூமியில் முதல் உயிரின் தோற்றம் பற்றிய மிகவும் நவீன மற்றும் இயற்கையான கோட்பாடாக இது அறியப்படுகிறது.

அதன்படி, ‘பில்லியன்கணக்கான வருடங்களுக்கு முன்பு (சுமார் 3.8 பில்லியன் வருடங்கள்), மனிதர்கள் இல்லை, தாவரங்கள் இல்லை, விலங்குகள் இல்லை. வெறும் கடல்கள், எரிமலைகள் மற்றும் விசித்திரமான வாயுக்கள் நிறைந்த வானம். அப்போது உலகில் உயிர் என்பது கடலில் இருந்து தொடங்கியது. அதாவது வாயுக்கள் மற்றும் நீரிலிருந்து, மின்னல் மற்றும் சூரியனின் ஆற்றலின் உதவியுடன் உருவான ஒரு வகையான ‘ரசாயன சூப்பில்’ (உயிரின் கட்டமைப்பிற்கு தேவையான அமினோ அமிலங்கள் போன்ற மூலக்கூறுகளின் கலவை) இருந்து. காலப்போக்கில், இந்த சூப் உலகின் முதல் சிறிய உயிர் வடிவங்களை உருவாக்கியது.’

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து மேலும் விளக்கிய முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “ஒரு உயிர் உருவாக தேவையான சிக்கல் மிகுந்த பருமூலக்கூறு புரதம் தான். உதாரணத்திற்கு உப்பு என்பதை எடுத்துக்கொண்டால் ‘NaCl’ போல, நீருக்கு ‘H2o’ எனது போல. ஆனால் புரதத்தில், பல அமினோ அமிலங்கள் சங்கிலித் தொடர்கள் போல பிணைந்திருக்கும். அந்த ஒவ்வொரு அமினோ அமிலமும் ஒரு மூலக்கூறு தான். இத்தகைய சிக்கலான அமைப்பு கொண்ட, உயிர்களின் தோற்றத்திற்கு தேவையான ‘புரதம்’ போன்ற ஒரு பருமூலக்கூறு இயற்கையாகவே உருவாக முடியுமா என்பது தான் கேள்வியாக இருந்தது. நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் ‘அமினோ அமிலங்கள்’ போன்ற சிக்கல் தன்மை மூலக்கூறுகள் பிரபஞ்ச வெளிகளில் உருவாவதை நாம் பார்க்கிறோம். இதன்மூலம் இயற்கையாகவே அவை உருவாக முடியும் என்பது நமக்கு புரிகிறது.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “மனித உயிரின் முக்கியமான கூறு என்பது டிஎன்ஏ, அதன் அம்சமே தன்னைப் போல மற்றொன்றை உருவாக்குவது தான். அப்படிதான், செல் பிரிதல் செயல்முறையில் ‘டிஎன்ஏ’ வேலை செய்கிறது. மனித உடலிலும் மட்டுமல்ல, பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிலும் இது நடக்கும். இந்த தானே படியெடுத்தல் (Self replication) எனும் வேதியியல் அமைப்புமுறை இயற்கையாகவே உருவாக முடியும் என்பது ஒரு கருத்து. இது பூமியில் உயிர் எப்படி உருவானது என்பதற்கு அடிப்படையாக இருக்கிறது” என்கிறார்.

பூமியில் உயிர்களின் தோற்றம் குறித்த புதிர்

பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், பூமியில் முதல் உயிர் தோன்றியதன் படிநிலை வளர்ச்சி குறித்த நமக்கு முழுமையான பதில்கள் அல்லது தகுந்த ஆதாரங்களுடன் கூடிய உறுதியான விளக்கங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இது குறித்து பேசிய த.வி.வெங்கடேஸ்வரன், “காரணம் நாம் பில்லியன்கணக்கான வருடங்களைப் பற்றி இங்கு பேசுகிறோம். அந்த காலத்தின் தடயங்கள் கிடைப்பது கடினம். இருப்பினும், தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு செல் உயிர் எப்படி பல செல் உயிரியாக மாறியது என்பதற்கு கூட அறிவியல் பதில்கள் கிடைத்துள்ளன. மனித இனம் உட்பட பல செல் உயிரிகள் தோன்றியது எப்படி என்பதற்கு இது அடிப்படையாக இருக்கும்.” என்கிறார்.

“ஏதோ ஒரு ‘சூப்பர் பவர்’ தான் உயிர்களை உருவாக்கியது என்ற கோட்பாட்டை மறுத்து, விஞ்ஞான வளர்ச்சியால் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இன்னும் பல புதிர்கள் உள்ளன, அவையும் அவிழ்க்கப்படும். பூமியில் முதல் உயிர் எப்படி தோன்றி, வளர்ந்தது என்பதற்கு பதில் கிடைக்கும்” என்று கூறுகிறார் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

சரி, பூமியில் உயிர் எப்படித் தொடங்கியது? (மீண்டும் மீண்டுமா என நினைக்க வேண்டாம், இதுவே இறுதி)

இதற்கு நாசாவின் இணையதளம் ஒரு பதிலைத் தருகிறது.

“நமக்குத் தெரியாது, ஆனால் அதற்கான விடையை அறிந்துகொள்ள முயற்சித்து வருகிறோம். காரணம், மனித இனத்தின் வரலாறு மற்றும் நமது சொந்த கிரகத்தின் கதையைச் சொல்ல அது மிகவும் அவசியம் என்பதால்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU