SOURCE :- BBC NEWS

பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள், தை, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 14 ஜனவரி 2025, 03:08 GMT

    புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, பழங்காலத்தில் கொண்டாடப்பட்டதா? என்ன பெயரில் கொண்டாடப்பட்டது?

தமிழ்நாட்டில் சாதி, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் திருநாள் இருந்துவருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

ஆனால், தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, தமிழ் இலக்கியத்தில் இதே பெயரில் குறிப்பிடப்படுவதற்கான ஆதாரங்கள் வெகு குறைவாகவே இருக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொங்கலை பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்?

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான நா. வானமாமலை, பொங்கல் என்பது அறுவடை நாளாகவே கொண்டாடப்பட்டதாகச் சொல்கிறார்.

தன்னுடைய ‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிடும் அவர், புறநானூறு காலத்திலிருந்தே இந்த விழாக் கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக, குறுங்கோழியூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலைச் சுட்டிக்காட்டுகிறார் வானமாமலை.

“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த/ஆய் கரும்பின் கொடிக் கூரை/சாறு கொண்ட களம் போல/வேறு வேறு பொலிவு தோன்ற (நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ் சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன.)” என்ற வரியில் பொங்கல் கொண்டாட்டமே குறிப்பிடப்படுகிறது என்கிறார் வானமாமலை.

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, 1954ஆம் ஆண்டு வெளிவந்த சக்தி இதழில், பொங்கல் குறித்த சில செய்திகளைத் தருகிறார். அதாவது, “தை மாதப் பிறப்பன்று, சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கிறான். இதனால் மகர ஸங்கிராந்தி என்று இதற்குப் பெயர். உத்தராயணமும் தொடங்குகிறது. ஆகவே தை மாதப் பிறப்பு பல நூறாண்டுகளாக நமது விசேஷ தினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது” என்று சொல்லும் வையாபுரிப் பிள்ளை, ஐங்குறுநூறு உள்ளிட்ட பல இலக்கியங்களில் இடம்பெறும் தை நீராட்டும் அதை ஒட்டியே நடப்பதாகச் சொல்கிறார்.

பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள், தை, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அதனை பொங்கல் வைத்து ஒரு விழாவாகக் கொண்டாடும் பழக்கம் பிற்காலத்தில் வந்ததாக இருக்க வேண்டும் என்கிறார் வையாபுரிப்பிள்ளை.

“இங்கனமாக சங்க காலம் தொட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது தை மாதப் பிறப்பு. இதில் பொங்கலிட்டு உத்தராயணப் புதுமை கொண்டாடும் வழக்கம், பிற்காலத்தில் தோன்றியதாக இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனும் சங்கப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் தற்போது கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் கொண்டாடப்பட்டது குறித்த பதிவுகள் கிடையாது என்கிறார்.

மகர சங்கராந்தி பற்றிய குறிப்புகள்

பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள், தை, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குறித்து திருஞானசம்பர் பாடிய திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பொங்கல் குறித்து வருகிறது.

“மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் / கைப் பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்/ நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் /தைப்பூசும் காணாதே போதியோ பூம்பாவாய்” என்கிறது அந்தப் பாடல்.

அதாவது, கபாலீச்சரம் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.

“மயிலாப்பூர் ஞானசம்பந்தர் பதிகத்தில், பொங்கல் குறித்து வருகிறது. ஆனால், அது தைப்பூசத்திற்கு பொங்கலிடுவதைக் குறிக்கிறது” என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். கிருஷ்ண தேவராயர் காலத்தில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்.

ஆனால், பேராசிரியர் தொ. பரமசிவனைப் பொறுத்தவரை, பொங்கல் பண்டிகை நாள் மாறிக் கொண்டாடப்படுவதாகவும் தைப்பூச நாளே பொங்கலாக இருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார். “சமய வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்” என்ற கட்டுரையில் இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறார் பரமசிவன்.

பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள், தை, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

தற்போது பொங்கல் திருநாள் வட இந்தியாவில் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இது சூரியனை மையமாகக் கொண்ட காலக் கணக்கின்படி நடக்கிறது.

ஆனால், திராவிடர்கள் அல்லது பழந்தமிழர்கள் சந்திரக் கணக்கு நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள் என்றும் பக்தி இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு, ஆரிய நாகரிகத்தின் தாக்கம் காரணமாக தமிழர்கள் சில நேரம் சூரியக் கணக்கு முறையையும் சில நேரம் சந்திரக் கணக்கு முறையினையும் பின்பற்றத் தொடங்கினார்கள் என்கிறார் அவர்.

பழந்தமிழர்கள் முழு நிலவு நாளை, அதாவது பௌர்ணமி தினத்தையே மாதத்தின் முதல் நாளாக வைத்திருந்தார்கள் எனவும் இதனால்தான் ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாட்டில், “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று குறிப்பிட்டு, மார்கழி மாத பௌர்ணமி தினத்தன்று பாவை நோன்பைத் தொடங்கியதாகக் கூறுகிறார் பரமசிவன்.

இப்படியாக மார்கழி மாத பௌர்ணமி தினத்தன்று தொடங்கிய பாவை நோன்பு, தை மாத பௌர்ணமிக்கு முதல் நாள் நிறைவடைகிறது. மறு நாள் பௌர்ணமியாகிய தைப்பூசமாகும். அன்றுதான் ஆண்டாளின் கூற்றுப்படி, “பாற்சோறு மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக் கூடியிருந்து” குளிர்கின்ற நாள் என்கிறார் அவர். இதுதான் பழந்தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் என்கிறார் பரமசிவன்.

‘பொங்கல் – தீட்டு அணுகாத திருவிழா’

பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள், தை, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

ஆனால், மாட்டுப் பொங்கல் என்ற ஆய்வு நூலை எழுதிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் நாட்டுப்புற ஆய்வறிஞருமான ஆறு. ராமநாதன், தற்போது கொண்டாடப்படுவதைப் போல பழங்காலத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகக் குறைவு என்கிறார்.

“தற்போது கொண்டாடப்படுவது போன்ற பொங்கல் சங்க காலத்திலோ அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலோ கொண்டாடப்பட்டதற்கான வலுவான சான்றுகள் ஏதும் கிடையாது. தை நீராடல் என வரும் குறிப்புகள் எல்லாம் வலிந்து பொங்கல் பண்டிகையோடு இணைக்கப்படுகின்றன” என்கிறார் அவர்.

இருந்தாலும், பொங்கல் பண்டிகை வேறு எந்த பண்டிகைகளையும்விட தனித்துவம் மிக்கது என்கிறார் பரமசிவன்.

“முதலாவதாக, இது ஒரு தேசிய இனத் திருவிழா. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுகள் கிடையாது. பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் வழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது” என தனது தமிழ்ப் புத்தாண்டு கட்டுரையில் குறிப்பிடுகிறார் தொ. பரமசிவன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU