SOURCE :- BBC NEWS

பொதுத்தேர்வுக்கு பயிற்சி எடுக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் ரைட்டர்ஸ் கிராம்ப் - தீர்வு தரும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images

“ஒரு நாள் சைக்கிள் டெஸ்ட் எழுதும்போது, அரை மணிநேரத்துக்கு மேல் எழுதவே முடியவில்லை. தாங்கவே முடியாத அளவுக்குக் கடுமையான கை வலி ஏற்பட்டது. மீண்டும் பேனாவை பிடிக்க முடியாமல் நான் அழுதுவிட்டேன். நல்ல வேளையாக இறுதித் தேர்வுக்கு முன்பாக மருத்துவரைச் சந்தித்து, உரிய பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவுக்கு அச்சமின்றித் தேர்வு எழுத முடிந்தது.”

கோவையிலுள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழிடம் பகிர்ந்த அனுபவம் இது.

”குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான எழுத்து வேலைகளைக் கொடுக்கின்றனர். நமது காலத்தில் எல்லாம் இவ்வளவு எழுத வைத்ததே இல்லை. இப்படித்தான் எனது மகளுக்கும் தொடர்ச்சியாக எழுத்து வேலை கொடுத்து வந்தனர். அவளுக்கு பொதுத் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு கை வலி, நடுக்கம் வர ஆரம்பித்துவிட்டது. சிகிச்சை, பயிற்சிக்குப் பின்புதான் சரியானது.”

மருத்துவமனைக்குத் தனது மகளை சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்த ஒரு மாணவியின் தாயார் பிபிசி தமிழிடம் கூறிய தகவல் இது.

ஒவ்வோர் ஆண்டும் தேர்வுக் காலங்களில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எழுத்துப் பணிகளை அதிகமாக மேற்கொள்வோருக்கு ஏற்படும் எழுத்தாளருக்கான வலது கை தசைப்பிடிப்பு (Simple Writer’s cramp), பள்ளிக் குழந்தைகளை இப்போது அதிகம் பாதிப்பதாகக் கூறும் மருத்துவர்கள், உணவு, ஓய்வு, பயிற்சியால் இதற்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர்.

3 மாதங்களில் மட்டுமே வரும் பாதிப்பு

சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களே, பள்ளி மேல்நிலை வகுப்புகளுக்கும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதற்கும் முக்கியக் காரணமாக உள்ளன. இதன் காரணமாக, இந்த இரு பொதுத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு, மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர், பள்ளிகளை நடத்துவோர் எனப் பலரும் பலவிதமான தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாகவே, பொதுத்தேர்வுகளுக்கு முன்பாக, பள்ளி மாணவ, மாணவியருக்குப் பல முறை சுழற்சி முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு முன்பாக, ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்திற்குள் பலமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அளவுக்கு அதிகமான, இடைவிடாது கொடுக்கப்படும் எழுத்துப் பணிகளால் வலது கைகளில் வலி ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவியர், ‘சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்’ எனப்படும் தசைப்பிடிப்புக்கு ஆளாகி உள்ளாகி வருகின்றனர்.

”அளவுக்கு அதிகமான எழுத்துப் பணியால் ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்துக்குள் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் ‘சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்’ பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சைக்கு வருகின்றனர். மார்ச் மாதத்தில் இது அதிகமாகிறது. இந்த வலி மெதுவாக விரல்களில் துவங்கி, படிப்படியாக மணிக்கட்டு, கை வழியாக முதுகு வரை பரவிவிடும். சில குழந்தைகள், கைகளில் ஏதாவது ஓர் இடத்தைத் தொட்டாலே துடிக்கும் அளவுக்கு வலியால் அவதிப்படுவார்கள்” என்கிறார் கோவையைச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் கார்த்திக்.

எழுத்தாளருக்கான தசைப்பிடிப்பு, அதாவது ‘சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்’ என்ற பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகளை பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், ”அளவுக்கு அதிகமான எழுத்து வேலை கொடுக்கும்போது, அதைத் தாங்கும் பலம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படுவதுதான் இந்தத் தசைப்பிடிப்பு பாதிப்பு. ஒரே வயதுள்ள இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கைகள் சிறுத்தும், மற்றொரு குழந்தைக்கு தடிமனாகவும் இருக்கும். மணிக்கட்டு மிகவும் குறுகலாகவுள்ள குழந்தைகளுக்கே இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும்” என்கிறார்.

தேர்வு பயம், பதற்றத்தாலும் வலி வரும்

சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்

பட மூலாதாரம், Getty Images

பேனாவை பிடித்து எழுதும் முறையும், அந்த பேனாவின் அளவும், ஓய்வின்றித் தொடர்ச்சியாக எழுத்துப் பணியைக் கொடுப்பதும்தான் இந்தத் தசைப்பிடிப்பு பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறும் மருத்துவர் கார்த்திக், இவற்றைத் தவிர்த்து, ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் கால்ஷியம், புரோட்டின் மற்றும் வைட்டமின் ‘டி’ குறைபாடும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார். சிகிச்சைக்கு வரும் பல குழந்தைகள், தேர்வுக்கு மறுநாளே கை வலி இல்லையென்று கூறுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

தேர்வுகள் மீதான குழந்தைகளின் அச்சத்தால் ஏற்படுத்தும் பதற்றமும், குழந்தைகளுக்குக் கை வலியுடன், தலை வலி, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். ஒவ்வொரு குழந்தைக்கும் சுயமாகவே இருக்கும் அறிவு, ஞாபகத் திறன், தனித்திறன் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது இந்த உணர்வுகள் ஏற்படுவதாகச் சொல்கிறார் அவர்.

”பல குழந்தைகளுக்கு தேர்வு நேரத்தில் பயம் மற்றும் பதற்ற உணர்வே (anxiety) அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு சமூகத்தில் நிலவும் போட்டி மட்டுமின்றி, பள்ளி நிர்வாகங்கள் தரும் அழுத்தம் மற்றும் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், நிர்ப்பந்தமும் காரணமாகிறது. இதற்கு மருந்துகள் தேவையில்லை. பெற்றோர், குழந்தைகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தாலே போதும். ஆரோக்கியமான உணவு, யோகா, தியானம் போன்றவையும் நல்ல பலன் தரும்” என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.

‘சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்’ எனப்படும் தசைப்பிடிப்பு பாதிப்பு எளிதில் சரி செய்யக்கூடியதுதான் என்றாலும், உரிய சிகிச்சையையும், தேவையான மாற்றங்களையும் செய்து கொள்ளாவிடில் அது அடுத்த கட்டமாக Focal dystonia எனப்படும் நரம்பியல் பாதிப்பை உருவாக்கி விடும் என்கிறார் மருத்துவர் கார்த்திக். அதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் என்பதால், துவக்க நிலையிலேயே இதைச் சரி செய்து கொள்வது நல்லது என்கிறார் அவர்.

மீண்டு வர தீர்வு என்ன?

பொதுத்தேர்வுக்கு பயிற்சி எடுக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் ரைட்டர்ஸ் கிராம்ப் - தீர்வு தரும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் கார்த்திக் கீழ்க்கண்ட வழிகளை எடுத்துறைக்கிறார்.

  • குழந்தைகளின் கைகளைப் பலப்படுத்துவதே இதில் முக்கியம். அதற்கு அதிகமாக புரதம் தேவை. ஒரு நாட்டுக்கோழி முட்டையில் 5 கிராம் மட்டுமே புரதம் உள்ளது. ஆனால் 100 கிராம் பாசிப்பயறில் 25 கிராம் புரதம் உள்ளது. எனவே குழந்தைகளின் உணவில் அதிகமாக பாசிப்பயறு சேர்க்கலாம். பள்ளிகளில் தரப்படும் காலை உணவில் இதைச் சேர்ப்பது குழந்தைகளுக்கு நல்ல பயன் தரும். 10 பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து, காலையில் தோலை உரித்துத் தருவதும் கைகளுக்கு வலு சேர்க்கும்.
  • பெரும்பாலான உணவுகளை நேரடியாகப் பொறித்துத் தருவதே இப்போது வழக்கமாகவுள்ளது. ஆனால், அவித்த உணவில்தான் கால்சியம் அதிகமாகக் கிடைக்கும். ஆகவே, கூடுமானவரை அவித்த உணவுகளைத் தருவது நல்லது.
  • இளங்காலை வெயிலும், மாலை நேரத்து மஞ்சள் வெயிலும்தான் வைட்டமின் ‘டி’யை அள்ளித் தரும் இயற்கையின் வரம். குழந்தைகளைக் கூடுமான வரை, இந்த வெயிலில் 10 நிமிடங்களாவது நிற்க வைத்து அல்லது சிறிது நேரம் விளையாட வைத்து, சூரிய ஒளியை உள்வாங்கச் செய்வது, அவர்களின் தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும். இவை அனைத்தும் பெற்றோர் தரப்பில் செய்ய வேண்டியது.
  • பள்ளிகளைப் பொறுத்தவரை, எழுத்துப் பணிகளில் குழந்தைகளுக்குத் தேவையான ஓய்வு தரவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளின் கைகளுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் தலா ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி இந்தப் பயிற்சியை தினமும் வழங்குவது நல்லது. இத்தகைய பயிற்சிகளைத் தருவதற்கென்றே உள்ள சிறப்புப் பயிற்சியாளர்களை (ergonomics) பயன்படுத்தலாம்.
  • பேனாவை 3 விரல்களில் பிடித்து எழுதுவதுதான் சரியான முறை. கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் மூன்றையும் குவித்து, பேனாவை சாய்வாக வைத்து எழுத வேண்டும். பல குழந்தைகள், இரண்டு விரல்களில் பிடித்து, செங்குத்தாக பேனாவை வைத்து எழுதுகின்றனர். சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் பலரை எழுத வைத்துப் பார்த்ததில் இந்த வித்தியாசம் தெரிய வந்தது.
பொதுத்தேர்வுக்கு பயிற்சி எடுக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் ரைட்டர்ஸ் கிராம்ப் - தீர்வு தரும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images

  • மூன்று விரல்களில் பிடிக்கும் அளவுக்கு சுற்றளவு அதிகமாகவுள்ள பேனாவை பயன்படுத்துவதே நல்லது. கழுத்துப் பகுதி மிகவும் சிறிதாகவுள்ள பேனாவை இரண்டு விரல்களில்தான் பிடிக்க முடியும் என்பதோடு, இந்த பேனாக்களால் இரு விரல்களுக்குமான அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாகப் பல மணிநேரம் எழுதும்போது, இரு விரல்களிலும் உள்ள எலும்புகளின் வழியாக வலி உருவாகிப் பரவிவிடும். எந்த பேனாவில் எழுதினாலும் குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வும், பயிற்சியும் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
  • சற்று கடினமாகவுள்ள ஸ்மைலி பந்தை 3 விரல்களையும் வைத்து வெவ்வேறு விதமாக 5 விநாடி நேரத்துக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி எடுக்க வேண்டும். இந்த ‘சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்’ பாதிப்புள்ள குழந்தைகள் இந்தப் பந்தை 3 விரல்களால் பிடிக்கவே சிரமப்படுவார்கள். அதுதான் அந்தப் பாதிப்பிற்கான அளவுகோல். ஆனால் தொடர் பயிற்சி எடுத்தால் இதை எளிதில் சரி செய்துவிட முடியும்.

”ஆரோக்கியமான உணவு, கைகளுக்கு ஓய்வு மற்றும் பயிற்சி கொடுத்த பின்னும் வலி இருந்தால் சில நேரங்களில் மருந்துகள் கை கொடுக்கலாம். ஆனால் அதற்குப் பிறகும் வலி தீராவிட்டால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். சில குழந்தைகளுக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதால் நரம்பியல் ரீதியான சிகிச்சைகள் தேவைப்படலாம்” என்கிறார் மருத்துவர் கார்த்திக்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC