SOURCE :- BBC NEWS

போதைப் பொருள் பயன்பாடு, கோவை, கல்லூரி மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

கோவையில் கல்லுாரி மாணவியுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் 2 கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டாக கோவையில் கொலை, திருட்டு, பாலியல் வழக்கு மற்றும் போதைப் பொருள் விற்பனை என பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏராளமான கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகக் கூறும் காவல்துறையினர், கல்லுாரி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியுமென்கின்றனர்.

ஆனால் தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் போதை ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக சுயநிதிக் கல்லுாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கைவிடப்பட்ட கட்டடத்தில் சடலம்

கோவை மாநகருக்கான ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் கட்டும் பணி, வெள்ளலுார் என்ற இடத்தில் 62 ஏக்கர் பரப்பில் நடந்து வந்தது.

இந்த பணி தற்போது முழுமையடையாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாடின்றிக் கிடக்கும் அந்த அரைகுறை கட்டடத்தில், கடந்த மே 11 ஆம் தேதியன்று, கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்துள்ளது.

போத்தனுார் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் உடல் என்பது தெரியவந்தது.

கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அவரை கொலை செய்தது தொடர்பாக

கார்த்திக் (வயது 20), நரேன் கார்த்திக் ( வயது 20), மாதேஸ் (வயது 21) மற்றும் முகம்மது ரஃபி (வயது 21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சந்தேகத்திற்குரிய மரணமாக பதியப்பட்ட வழக்கு, அதன்பின் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

”சூர்யாவுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்திக்கின் பெண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்ட விவகாரத்தில்தான் மோதல் உருவாகியுள்ளது. கார்த்திக்கும், அவருடைய நண்பர்களும் சூர்யாவை குடிப்பதற்கு அழைத்து வந்து, அவர் போதையில் இருந்தபோது, அவருக்கு மயக்க மருந்து ஊசியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் போத்தனுார் காவல் ஆய்வாளர் ரவி.

இநத மயக்க ஊசியை போதைக்காக மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறார் அவர்.

”இவர்களில் கார்த்திக், நரேன் கார்த்திக் இருவரும் கல்லுாரி மாணவர்கள். மாதேஸ் கன்சல்டிங் நடத்தி வந்துள்ளார். முகம்மது ரஃபி டூ வீலர் வாங்கி விற்கும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு சிறு வயதிலேயே மது குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற போதைப் பழக்கங்கள் இருந்ததாகத் தெரிகிறது அதில்தான் இவர்களுக்குள் நட்பும் இருந்துள்ளது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நீள்கிறது கைதாகும் கல்லுாரி மாணவர்களின் பட்டியல்!

கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் பல்வேறு குற்றங்களில் கல்லுாரி மாணவர்கள் சிக்கி வரும் நிலையில், தற்போது கொலை வழக்கில் கல்லுாரி மாணவர்கள் இருவர் கைதாகியிருப்பது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் சிக்குவது அடிக்கடி வரும் செய்தியாகவுள்ளது.

* சென்ற பிப்ரவரியில் கோவை கல்லுாரியில் படிக்கும் மாணவர் ஒருவர், தனது சொந்த ஊரான உதகையில் கஞ்சா விற்கும் போது போலீசாரிடம் சிக்கி சிறை சென்றார்.

* அதே மாதத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த 3 கல்லுாரிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

* அடுத்த சில நாட்களில் கோவையில் வாடகைக்கு வசித்து வந்த வீட்டில் கஞ்சா செடியை வைத்து வளர்த்து வந்த கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைதாகி சிறைக்குச் சென்றனர்.

* கடந்த மார்ச் மாதத்தில் 69 கிராம் மெத்தபெட்டமின், எல்எஸ்டி போன்ற சிந்தெடிக் டிரக் எனப்படும் போதை மருந்துகளை வைத்திருந்தது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதில் 6 பேர் கல்லுாரி மாணவர்கள்.

* ஏப்ரல் மாதத்தில் போதையில் சீனியர் மாணவர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக, 6 கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 13 பேர் கல்லுாரியிலிருந்து நீக்கப்பட்டனர்.

* கடந்த ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கல்லுாரி மாணவர்கள் 7 பேர் கைதாயினர்.

* அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லுாரி மாணவர்கள் 6 பேரை குனியமுத்துார் போலீசார் கைது செய்தனர்.

* கடந்த மே 7 ஆம் தேதியன்று, நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்ற ரயில் வழித்தடத்தில் கான்கிரீட் கல் வைத்தது தொடர்பாக ரயில்வே போலீசாரால் கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘குற்றவியல் சம்பவங்களுக்கு போதையே காரணம்’

இவை சில உதாரணங்கள் மட்டுமே. குழு மோதல், சங்கிலி பறிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, தனித்தனியாக நிறைய கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பெரும் பட்டியல் தருகின்றனர்.

அதேபோன்று கடந்த ஓராண்டில் கோவை மாநகர காவல் எல்லையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் பலர், இங்குள்ள கல்லுாரிகளில் படித்து முன்னாள் மாணவர்கள் என்ற தகவலையும் பிபிசி தமிழிடம் போலீஸ் அதிகாரிகள் பகிர்ந்தனர். குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களில் பெரும்பாலானோர், போதையில்தான் இதைச் செய்வதாகக் கூறுகின்றனர்.

வெளியூர் மாணவர்களை குறிவைத்து போதை வர்த்தகம்!

கோவை நகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் 8 பல்கலைக்கழகங்கள், 207 கல்லுாரிகள், 76 பொறியியல் கல்லுாரிகள், 6 மருத்துவக் கல்லுாரிகள், 36 மேலாண்மைக் கல்லுாரிகள் மற்றும் 20 ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் உள்ளன. இவற்றில் உள்ளூர் மாணவர்களைத் தவிர்த்து, 2 லட்சம் வெளியூர் மாணவர்கள், வெளியில் தங்கிப் படித்து வருவதாகவும், இவர்களைக் குறி வைத்தே போதைப் பொருட்கள் புழக்கத்தில் விடப்படுவதாகவும் மாநகர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்லுாரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதுதான், குற்றவியல் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமென்று அரசியல்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கோவையில் 17 வயது சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தலில், போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர்கள் கைதான போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர், கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கல்லுாரிகளில் போதைப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை இரண்டின் சார்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கோவை மாநகர காவல்துறை சார்பில் ‘மிஷன் கல்லுாரி’ என்ற திட்டத்தில் ‘போதைப் பொருட்கள் இல்லாத கோவை’ என்ற பெயரில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பிருந்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர், கல்லுாரி நிர்வாகங்களை அழைத்துப் பேசினர். அப்போது இருவரும் ஒருமித்து ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினர்.

”கல்லுாரிக்கு வெளியே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பவர்களைத் தடுப்பதற்கு காவல்துறை தீவிரமான முயற்சி எடுக்கிறது. ஆனால் கல்லுாரி மாணவர்களே இதை விற்கும்போது, அவர்களைக் கண்டறிவது காவல்துறைக்கு பெரும் சவாலாகவுள்ளது. இந்த விஷயத்தில் கல்லுாரி நிர்வாகங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கல்லுாரி மாணவர்களிடம் போதை புழக்கத்தைத் தடுக்க முடியும்.” என்று இருவரும் தெரிவித்தனர்.

அப்போது அறிவுரை: இப்போது அதிரடி சோதனை!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர்

ஆனால் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனை செய்த ஏராளமானவர்களை, கோவை மாநகர காவல் துறை கைது செய்து, அவர்களில் பலரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ரவுடிகள் பலரும் அடையாளம் கண்டு துரத்தப்பட்டு இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.

”கடந்த ஆண்டில் ஜனவரி–ஏப்ரல் 4 மாதங்களில் மாநகரில் 549 குற்றங்கள் நடந்திருந்தன. இந்த ஆண்டில் அதே 4 மாதங்களில் 293 குற்றங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டை விட 256 குற்றங்கள் குறைந்துள்ளன. நகரிலிருந்து 139 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதே 4 மாதங்களில் 84 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ” என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.

நகரை விட்டு வெளியேற்றப்பட்ட ரவுடிகள், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பலர், போதை கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். கஞ்சா விற்றவர்களை அதிகம் பிடித்து சிறையில் அடைத்திருப்பதால், தற்போது போதை மாத்திரை, மெத்த பெட்டமைன் போன்ற சிந்தெடிக் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் முயற்சி அதிகரித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆணையர் சரவணசுந்தர் தகவல் பகிர்ந்தார். மாவட்டப் பகுதிகளிலும் போதை மாத்திரை, மேஜிக் மஸ்ரூம் போன்றவற்றைப் பிடித்துள்ளதையும், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதையும் மாவட்ட காவல் கண்காணிப்பார் கார்த்திகேயன் சுட்டிக்காட்டுகிறார்.

முன்பிருந்த காவல் அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, அவர்களிடம் மாணவர்களைக் கண்காணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் இப்போதுள்ள அதிகாரிகள், மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் திடீர் சோதனை, வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை என நடவடிக்கைகளை மாற்றியுள்ளனர். அதற்கு பலனும் கிடைத்துள்ளதாகக் கூறும் காவல்துறை அதிகாரிகள், இத்தகைய சோதனைகளில்தான், வீட்டுக்குள்ளே கஞ்சா செடி வளர்த்ததையும், நிறைய போதை மாத்திரைகளையும் பிடித்ததாகவும் கூறினர்.

கல்லுாரி நிர்வாகங்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்கின்றனவா?

அஜித்லால் மோகன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு சுயநிதிக் கல்லுாரிகள் சங்கம்

பட மூலாதாரம், Handout

ஆனால் கோவையில் கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் வருந்துகின்றனர். இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், ”கோவையில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கல்லுாரிகளில் போதைப் புழக்கம் மிக அதிகமாகவுள்ளது. அதற்கான ஆதாரமும் எங்களுக்குக் கிடைத்தது. அந்த கல்லுாரி நிர்வாகங்களை அழைத்து 3 முறை பேசியும் அவர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்தவும், குற்றம் செய்யும் மாணவர்களை வெளியேற்றவும் தயாராக இல்லை. ” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கல்லுாரி மாணவர்களிடம் போதைப்பழக்கம், புழக்கம் என்பது நீண்டகாலமாகவே இருப்பதுதான் என்றாலும் இப்போது போதையின் வடிவம் மாறியுள்ளதுதான் அச்சத்தை அதிகரிப்பதாகச் சொல்கிறார், சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் லோகநாதன். போதைக்காக செயின் பறிப்பு என்பதெல்லாம் இப்போதுதான் நடக்கிறது என்கிறார் அவர்.

போதைப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கல்லுாரி நிர்வாகங்கள் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை, தமிழ்நாடு சுயநிதிக் கல்லுாரிகள் சங்கம் மறுத்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அஜித்லால் மோகன், ”கோவையிலுள்ள பெரும்பாலான கல்லுாரிகளில் ‘டிரக் கிளப்’ அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எங்கள் அமைப்பின் சார்பில், போதைக்கு எதிராக கோவை உட்பட பல நகரங்களில் கல்லுாரி மாணவர்களைக் கொண்டு ஒட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லுாரியிலும் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. காவல்துறை நடவடிக்கைக்கு சுயநிதி கல்லுாரிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.” என்றார்.

போதைக் குற்றம் சார்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பெற்றோரை அழைத்துப் பேசிய பின்பும், மாற்றமில்லாதபட்சத்தில் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அஜித்லால் மோகன் தெரிவித்தார். காவல்துறை நடவடிக்கைக்கு கல்லுாரி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டை அவர் ஒட்டுமொத்தமாக மறுத்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC