SOURCE :- BBC NEWS

போப்பாண்டவர் பிரான்சிஸ் மக்களை சந்திக்கப் பயன்படுத்திய வாகனம்

பட மூலாதாரம், Getty Images

இறந்த பின்னும் குழந்தைகளுக்கு உதவும் பேரன்பு கொண்டவர் போப்பாண்டவர் என்று கூறும் வாடிகன், அண்மையில் மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் மக்களை சந்திக்கப் பயன்படுத்திய வாகனம் (popemobile) ஒன்று, காஸாவில் துன்பப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்கான நடமாடும் சுகாதார மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸின் வேண்டுகோளின்படி, 2014 ஆம் ஆண்டு அவர் தனது பெத்லகேம் பயணத்தின்போது பயன்படுத்திய வாகனம், போர் மண்டலத்தில் சுகாதார பராமரிப்புக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக, கரிட்டாஸ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொண்டு நிறுவனம், போப்பின் வாகன புனரமைப்புப் பணியை மேற்பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“துரிதமான மருத்துவப் பரிசோதனைகள், காயத்திற்கு தையலிடும் கருவிகள், சிரிஞ்சுகள், ஆக்ஸிஜன் பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை சேமிப்பதற்கான சிறிய குளிர்சாதன பெட்டி ஆகியவை கொண்டதாக வாகனம் புனரமைக்கப்படுகிறது” என்று கரிட்டாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது “காஸாவின் குழந்தைகளுக்கான போப்பின் இறுதி விருப்பம்” என்று வாடிகன் தெரிவித்துள்ளது. தற்போது பெத்லகேமில் உள்ள இந்த வாகனம், இஸ்ரேல் மனிதாபிமான வழித்தடத்தைத் (humanitarian corridor) திறந்தால் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும்.

2023 அக்டோபரில் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் மூண்டதில் இருந்து 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக காஸா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருகிறது, இதனால் காஸாவில் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்துகளின் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதுடன், “குடும்பங்கள் உயிர்வாழ போராடும்” நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உதவி வழித்தடத்தை மீண்டும் திறக்கும் வரை போப்பின் வாகனத்தை காஸாவிற்கு கொண்டு செல்வதற்காக கரிட்டாஸ் தொண்டு நிறுவனம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றபோதிலும், எப்போது வேண்டுமானாலும் வழித்தடம் திறக்கலாம் என அந்த அமைப்பு காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

போப்பாண்டவர் பிரான்சிஸ் மக்களை சந்திக்கப் பயன்படுத்திய வாகனம்

பட மூலாதாரம், Caritas Jerusalem

“தற்போது சுகாதாரப் பராமரிப்பு கிடைக்காத குழந்தைகளையும், காயமடைந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளையும் இந்த வாகனத்தின் மூலம் சுலபமாக சென்றடையலாம்” என்று கரிட்டாஸ் ஸ்வீடனின் பொதுச் செயலாளர் பீட்டர் புரூன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் கிளினிக்கை நடத்தும் மருத்துவர்கள் குழு நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சையளிக்கத் தேவையான அனைத்து திறன்களையும் கொண்டதாக இருக்கும். இந்த வாகனத்தை இயக்குவதற்காக பிரத்யேக ஓட்டுநர் இருப்பார். குண்டுவெடிப்புகளிலிருந்து வாகனத்தை பாதுகாப்பாக மாற்றுவது எவ்வாறு என்பது போன்ற சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக புரூன் பிபிசியிடம் கூறினார்.

“இது வெறும் வாகனம் அல்ல, காஸாவில் உள்ள குழந்தைகளை உலகம் மறக்கவில்லை என்பதற்கான செய்தி இது” என்று அவர் கூறினார்.

போப் பிரான்சிஸ், தனது பதவிக் காலத்தில் காஸாவில் நடந்த போர் குறித்து உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்கள் பலவற்றை தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நிலைமையையும் “வெட்கக்கேடானது” என்று விளித்த போப், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று ஆற்றிய தனது இறுதி உரையின் போது, “போர் புரியும் தரப்புகள்” அனைத்தும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் துன்பங்களைப் பற்றியும் போப் பேசியுள்ளார்.

18 மாதப் போரின் போது, காஸாவில் உள்ள திருச்சபை உறுப்பினர்களை இரவு நேரங்களில் அழைத்து பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்த போப் பிரான்சிஸ், மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரிப்பார் என்றும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்வார். மேலும், காஸாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை இனப்படுகொலை என்று வகைப்படுத்த வேண்டுமா என்பதை சர்வதேச சமூகம் ஆராய வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ‘இனப் படுகொலை’ என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் கடுமையாக மறுத்துள்ளது.

போப்மொபைல் (popemobile) என்பது, போப் அதிகாரப்பூர்வமாக ஒரு இடத்திற்கு வரும்போது, பலரையும் சந்திக்க ஏதுவாக அவர் பயணிக்கும் சிறப்பு வாகனங்களில் ஒன்றாகும். பாதுகாவலர்கள் சூழ அந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அவர் நின்றும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனம் அது. மேலும், போப்பை பார்க்க வருபவர்கள், அவரை பார்க்க உதவும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

1981ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் மீது நடந்த கொலை முயற்சிக்குப் பிறகு, போப்மொபைல்கள், குண்டு துளைக்காத வாகனங்களாக மாற்றப்பட்டன. ஆனால் மக்களிடமிருந்து தன்னைப் பிரித்த கண்ணாடி “மீன் டப்பா” வடிவமைப்பு தனக்குப் பிடிக்கவில்லை என்று போப் பிரான்சிஸ் 2014 இல் ஸ்பானிஷ் ஊடகங்களிடம் பேசுகையில் தெரிவித்திருந்தார்.

காஸாவில் துன்பப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்கான நடமாடும் சுகாதார மருத்துவமனையாக மாற்றப்படும் போப்பின் வாகனம்

பட மூலாதாரம், Reuters

2023 அக்டோபர் ஏழாம் தேதியன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் மேற்கொண்ட எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸை அழிக்கும் போரைத் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். ஹமாஸின் பிடியில் தற்போதும் 59 பணயக்கைதிகள் உள்ளனர்.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 52,243 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை மீண்டும் வழங்குவதற்கான திட்டத்திற்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை திங்களன்று கொள்கையளவில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாக இருக்கும் என்று கூறும் ஐ.நா மற்றும் பிற உதவி நிறுவனங்கள், இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU