SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான போப் ஆண்டவர் குறித்து கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகள் என்ன சொல்கின்றன?
உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தின் பல பிரிவுகளில் ஒன்று, கத்தோலிக்கம்.
இந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவரின் மரணம், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவது ஆகியவை உலகம் முழுவதும் கவனிக்கப்படுகின்றன.
ஆனால், கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவினர் போப் ஆண்டவர் குறித்து என்ன கருதுகிறார்கள்? அவரைத் தங்கள் தலைவராக அவர்கள் ஏற்காதது ஏன்?
உலகில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் போப் ஆண்டவரே தலைவரா?
இல்லை. கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன.
எல்லா பிரிவினரும் போப் ஆண்டவரைத் தலைவராக ஏற்பதில்லை. கிறிஸ்தவத்திலேயே மிகப்பெரிய பிரிவான கத்தோலிக்கத்தைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே போப் ஆண்டவர் தலைவராக இருக்கிறார்.
கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய பிரிவு, கத்தோலிக்க கிறிஸ்தவம் எனக் குறிப்பிடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கிறிஸ்துவுக்கு பிந்தைய முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவின் போதனைகள் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்து, அது ஒரு மதமாக உருவெடுக்க ஆரம்பித்தது.
ரோமை சுற்றியுள்ள பல மொழிகள், பல பண்பாடுகள் உள்ள பகுதிகளிலும் இந்த மதம் பரவிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிறிஸ்தவ திருச்சபையை, கத்தோலிக்கத் திருச்சபை என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்.
கிரேக்க வார்த்தையான ‘கத்தோலிக்’ என்பதற்கு, ‘எல்லோருக்குமான’ (Universal) என்று அர்த்தம். பல பண்பாடு, மொழிகளைப் பேசுவோருக்கான பொதுவான திருச்சபை என்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
“கிறிஸ்துவுக்குப் பிந்தைய முதல் நான்கு நூற்றாண்டுகளில்தான் கிறிஸ்தவ மதம் மெல்ல மெல்ல ஒரு நிறுவனமயமான மதமாக உருவெடுத்தது. இந்தக் கட்டத்தில்தான் போப் ஆண்டவரின் அதிகாரம் அதிகரிக்கத் தொடங்கியது” என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.
“நான்காம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசராக இருந்த நான்காம் கான்ஸ்டைன்டீன் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினார். அப்போது போப்பாக இருந்த முதலாம் சில்வெஸ்டர் ஞானஸ்நானம் செய்து வைத்ததாக கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர். இது கிறிஸ்தவ மதத்திற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் ஆண்டவரின் அதிகாரம் அதிகரித்தது. ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவம் பரவிய இடங்களில் அரசருக்கு மேலான இடத்தில் போப் ஆண்டவர்கள் இருந்தனர்” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு போப் ஆண்டவர்களே தலைவர்களாக இருந்தனர். ஆனால், இப்போது அப்படி அல்ல.
ஏன் எல்லோரும் போப் ஆண்டவரை தங்கள் தலைவராக ஏற்பதில்லை?

கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளே இதற்குக் காரணம்.
கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்பட்ட முதல் மிகப்பெரிய பிளவு, ஜெர்மானிய மதகுருவான மார்ட்டின் லூதரால் ஏற்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் sale of indulgences எனப்படும் பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனை கத்தோலிக்க மதத்தில் பரவலாக இருந்தது. இதுபோல பல குற்றச்சாட்டுகளை கத்தோலிக்கத் திருச்சபை மீது மார்ட்டின் லூதர் முன்வைத்தார்.
கடந்த 1517ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் The Ninety-Five Theses என்ற பெயரில் அவர் 95 குற்றச்சாட்டுகளைத் தொகுத்து திருச்சபை மீது முன்வைத்தார். இதற்குப் பிறகு, அவரும் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சேர்ந்து புதிய திருச்சபையை உருவாக்கினர்.
இந்தச் சபை, மார்ட்டின் லூத்தரன் திருச்சபை என்று குறிப்பிடப்பட்டது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் முதலடியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இவர்கள் போப்பை தங்கள் தலைவராக ஏற்பதில்லை.
இதற்கு அடுத்த மிகப்பெரிய பிளவு இங்கிலாந்து திருச்சபை, போப்பின் மேலாதிக்கத்தில் இருந்து விலகியதுதான். இங்கிலாந்தின் மன்னராக எட்டாம் ஹென்றி இருந்தபோது, போப் ஆண்டவராக இருந்த ஏழாவது க்ளெமன்டுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.
எட்டாம் ஹென்றியின் மனைவியாக இருந்தவர் கேத்தரீன். அவரிடம் இருந்து மணவிலக்கு பெற ஹென்றி விரும்பினார். ஆனால், அதை போப் ஏற்கவில்லை.

இதையடுத்து, போப்பின் தலைமைத்துவத்தில் இருந்து இங்கிலாந்து திருச்சபையை விலக்கிக்கொண்டார். தன்னையே இங்கிலாந்து திருச்சபையின் தலைவராகவும் எட்டாம் ஹென்றி அறிவித்தார். மேரி அரசியானபோது மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபைக்கு திரும்பினாலும், முதலாம் எலிசபெத் அரசியானதும், மீண்டும் அதிலிருந்து இங்கிலாந்து திருச்சபை விலகியது.
இதுவும் ஒரு சீர்திருத்த கிறிஸ்தவம் என்றாலும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவமாக இது உலகம் முழுவதும் பரவியது. இதன் உச்சபட்ச மதகுருவாக, இங்கிலாந்தில் உள்ள காண்டர்பரி தேவாலயத்தின் பேராயர் இருப்பார்.
கத்தோலிக்கத் திருச்சபை உருவாகி வந்த முதல் நூற்றாண்டிலேயே அதிலிருந்து மரபுவழித் திருச்சபைகளும் (Orthodox Church) செயல்பட்டு வந்தன.
இவர்கள், தங்களிடம் இருந்துதான் கத்தோலிக்கத் திருச்சபை பிரிந்ததாகக் கருதுகின்றனர். ரஷ்யா, க்ரீஸ், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திருச்சபைகள் செல்வாக்குடன் இருக்கின்றன. இவற்றின் தலைவர்கள் ‘கிரில்’ (Kirill) என அழைக்கப்படுவார்கள்.
இவை தவிர மெதடிஸ்டுகள், பெந்தகோஸ்துகள் என மேலும் சில சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளும் செயல்பட்டு வருகின்றன.
கத்தோலிக்கம், சீர்திருத்த கிறிஸ்தவம், மரபுவழித் திருச்சபை போன்ற எதிலும் சாராமல் அட்வெந்து திருச்சபைகளும் இயங்கி வருகின்றன. இவர்களும் போப்பின் தலைமைத்துவத்தை ஏற்பதில்லை.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவிர மற்ற கிறிஸ்தவர்கள் போப்பை எப்படி பார்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
சீர்திருத்த கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், மரபுவழித் திருச்சபைகள் போன்றவை போப் ஆண்டவரைத் தங்கள் தலைவராக ஏற்பதில்லை.
மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஏற்பதில்லை என்றாலும் அவரை கிறிஸ்தவத்தின் மிக மிக முக்கியமான மதகுருவாக, மதிக்கத்தக்கவராகப் பார்க்கிறார்கள்.
சீர்திருத்த கிறிஸ்தவத்தின் சில பிரிவுகளின் தலைவர்களும், முக்கிய விவகாரங்களில் போப்பின் கருத்துகளை அறிய விரும்புவார்கள்.
கிறிஸ்தவத்தில் உள்ள இந்தப் பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்துள்ளதா?
இதற்கான முயற்சிகள் பல முறை நடந்துள்ளன. இந்த முயற்சிகள் Ecumenism, அதாவது ‘கிறிஸ்தவ ஒன்றிப்பு’ எனக் குறிப்பிடப்படுகின்றன. 1960களில் ஆறாவது பால் போப் ஆண்டவராக இருந்தபோது சில முயற்சிகள் நடந்தன.
“இரண்டாம் ஜான் பால் போப்பாக இருந்தபோது இதற்காகச் சில முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். தற்போது காலமான போப் பிரான்சிஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பில் மிகத் தீவிரமாக இருந்தார்.
மரபுவழித் திருச்சபையின் தலைவரான கிரிலை நேரில் சந்தித்தார். இதுபோன்ற முயற்சிகளை இதற்கு முன்னர் யாரும் செய்ததில்லை,” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU