SOURCE :- BBC NEWS

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த போது, சீன பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் அந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றத்தைக் கண்டன .

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது . இவற்றில் ஒன்று ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான கார்ப்பரேஷன்.

“இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த ஜே-10சி போர் விமானத்தைப் பயன்படுத்தினோம்” என்று பாகிஸ்தான் கூறியிருந்ததும் இந்த பங்கு அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இந்த கூற்றை முன்வைத்தார். பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்தவொரு தெளிவான பதிலையும் அளிக்காத இந்தியா, ரஃபேல் போர் விமானத்தை இழந்ததாக ஏற்கவும் இல்லை.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் பாகிஸ்தானின் கூற்று குறித்து கேட்ட போது, அது குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

சீனா இதை மறுத்திருக்கலாம். ஆனால் மோதலின் போது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக அதன் ஆயுதங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை சீனா உன்னிப்பாக கவனித்திருக்கும்.

“உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மிக நவீன சீன ஆயுதங்களில் பெரும்பாலானவை இன்னும் போர்ச் சூழலில் களப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தனது பெரும்பாலான ஆயுதங்களை சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது, எனவே அவற்றை களப் பரிசோதனை செய்வது அவர்களின் ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகும்” என்று ப்ளூம்பெர்க் புலனாய்வின் பாதுகாப்பு ஆய்வாளர் எரிக் ஜு கூறினார்.

ஆயுதங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம், Getty Images

கடந்த நாற்பது ஆண்டுகளாக சீனா எந்தவொரு பெரிய போரிலும் பங்கேற்கவில்லை. ஆனால் அதிபர் ஜின்பிங்கின் தலைமையின் கீழ், சீனா தனது ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், அதிநவீன ஆயுதங்களை உருவாக்குவதிலும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்கும் சீனா வழங்கியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-24), பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவைச் சேர்ந்தவை.

2015-19 முதல் 2020-24 வரை பாகிஸ்தான் ஆயுத இறக்குமதியை 61 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெறும் ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவுக்கும் பங்கு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன அல்லது சீன தொழில்நுட்பம் அவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவைப் பற்றி நாம் பேசினால், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடு. இருப்பினும், 2015-19 மற்றும் 2020-24 க்கு இடையில் அதன் இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ஆயுத இறக்குமதியில் மிகப்பெரிய பங்கு (36 சதவீதம்) ரஷ்யாவிலிருந்து வந்தது, இது 2015-19 (55 சதவீதம்) மற்றும் 2010-14 (72 சதவீதம்) ஐ விட மிகக் குறைந்த பங்காகும். இந்தியாவுக்கான பிரெஞ்சு ஆயுத ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (28 சதவீதம்) மிகப்பெரிய பங்கைப் பெற்றுள்ளது.

“ஆசியா மற்றும் ஓசியானியா 2020-24-ம் ஆண்டு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி பிராந்தியமாக இருந்தது, 1990 களின் முற்பகுதியில் இருந்து எப்போதும் இதே நிலை தான் உள்ளது” என்று SIPRI மூத்த ஆய்வாளர் சைமன் வெஸ்மேன் கூறுகிறார். “பெரும்பாலான கொள்முதல் சீனா தொடர்பான அச்சுறுத்தல் உணர்வுகளால் செய்யப்படுகிறது.” என்றார் அவர்.

பாகிஸ்தானிடம் உள்ள சீன ஆயுதங்கள்

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம், Getty Images

1965 இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதத் தடைகள் பாகிஸ்தானை சீனாவை நோக்கித் தள்ளிய போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. சீனா போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால உறவுக்கு அடித்தளம் அமைத்தது.

பனிப்போருக்குப் பின்னர் இந்த உறவு ஆழமடைந்தது, அமெரிக்காவிற்கு பதிலாக சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கும் முதன்மை நாடாக மாறியது.

இரு நாடுகளும் 1963 ஆம் ஆண்டின் சீன-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது எல்லை தகராறுகளைத் தீர்த்தது. 1966 -ல் ராணுவ ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானிடம் இப்போது ஏராளமான சீன ஆயுதங்கள் உள்ளன.

போர் விமானங்கள்: சீனாவின் ஜே -10 சி மற்றும் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஜே -10 சி சீன நிறுவனமான செங்டு ஏர்கிராஃப்ட் கார்பரேஷனால் தயாரிக்கப்படுகிறது, ஜேஎஃப் -17 தண்டர் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம், Getty Images

ஏவுகணை: திங்களன்று, இந்திய இராணுவம் தனது செய்தியாளர் சந்திப்பில் பி.எல் -15 ஏவுகணையின் எச்சங்களைக் காட்டியது . அது இலக்கை நெருங்கும் முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் கூறியது. பிஎல்-15 என்பது பாகிஸ்தானால் பயன்படுத்தப்படும் சீன ஏவுகணை ஆகும். சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்பரேஷன் (AVIC) உருவாக்கிய PL-15 என்பது நீண்ட தூர ரேடார் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணை ஆகும்.

டிரோன்கள்: பாதுகாப்புத் துறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, சீனா மற்றும் துருக்கியிடமிருந்து நவீன ட்ரோன்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது . இவற்றில் சீனாவின் CH-4 மற்றும் விங் லூங் II ட்ரோன்கள், துருக்கியின் Bayraktar TB2 மற்றும் Akinci டிரோன்கள் அடங்கும்.

வான் பாதுகாப்பு அமைப்பு: பாகிஸ்தானில் சீனாவால் தயாரிக்கப்பட்ட HQ-9, HQ-16 மற்றும் FN-16 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இவற்றில், HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுதங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது ரஷ்யாவின் எஸ்-300 க்கு இணையானதாக கருதப்படுகிறது.

இது தவிர, ஹேங்கோர் வகுப்பின் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் 2015 இல் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது . இது தவிர, இருநாடுகளும் கூட்டாக அல்-காலித் டாங்கியையும் உருவாக்கியுள்ளனர்.

பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி கூறுகையில், “சீனா-பாகிஸ்தான் உறவு பல தசாப்தங்கள் பழமையானது, காலப்போக்கில் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தானை தனது இரட்டை சகோதரர் என்று சீனா பலமுறை வர்ணித்துள்ளது. சமீபத்திய போரில், சீனாவின் பி.எல் -15 ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாதுகாப்புத் துறையைத் தவிர, சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் மற்றும் குவாதர் துறைமுகத்திற்கும் பாகிஸ்தான் மிகவும் முக்கியமானது.” என்கிறார் அவர்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா

1947 -ல் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்காக 3 போர்களை நடத்தியுள்ளன. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் இந்தியாவை ஆதரித்தது, அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுடன் நின்றன.

பாரம்பரிய அணிசேராக் கொள்கை இருந்த போதிலும், இந்தியா அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது. ஆசியாவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் சூழலில் இந்தியா தனது பக்கத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பிற நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதை அதிகரித்துள்ளது, ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.

பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார். இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலையின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலை என்ற பார்வையின் மூலமும் பகுப்பாய்வு செய்ய முடியும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு மூலோபாய பங்காளியாக மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் அமெரிக்கா இந்தியாவைப் பார்க்கிறது. இந்த பின்னணியில் சண்டை நிறுத்தத்திற்கான அமெரிக்க முயற்சிகள் பார்க்கப்பட வேண்டும். இந்தியா தனது ஆற்றல், வளங்கள் மற்றும் நேரத்தை பாகிஸ்தானுக்காக வீணடிப்பதை அமெரிக்கா விரும்பாது” என்கிறார்.

“சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. ஆது மட்டுமல்லாமல், சீனா தனது அறிக்கைகள் மூலம் பாகிஸ்தானை ஆதரித்தது.”

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பாகிஸ்தானின் ஆயுதங்களில் பெரும்பாலானவை சீனாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன/ இந்தியா அதன் ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வாங்குகிறது. எனவே, ராகுல் பேடி இந்த மோதலை மறைமுகமாக சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலாகப் பார்க்கிறார்.

“பாகிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக சீனாவின் ஆயுதங்களை சோதிக்க வேண்டிய நேரம் இது. போரின் போது பி.எல் -15 ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தவிர, சீனாவின் போர் விமானங்களும் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேலுடன் மோதிக் கொள்ள வேண்டியிருந்தது.” என்று சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவத் தாக்குதல்களுக்கு சீனா வருத்தம் தெரிவித்ததுடன், அமைதி மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்திய மோதல்களுக்கு முன்பு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு தொலைபேசி அழைப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். சீனாவை பாகிஸ்தானின் “உறுதியான நண்பர்” என்று அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU