SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ரஹானேவுக்கு நேற்று காயம் ஏற்பட்டதால், சுனில் நரைன் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த வைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைன் அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.
கொல்கத்தாவின் ஆபத்பாந்தவன்
கொல்கத்தா அணிக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் சுனில் நரைன் இந்த முறையும் பந்துவீச்சாளராக, பேட்டராக, கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டு, அணியை வழிநடத்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுனில் நரைனுக்கும் இடையிலான உறவு 13 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஐபிஎல் டி20 தொடரில் ஒரு குறிப்பிட்ட அணியுடன் நெருக்கமான உறவு வைத்து அதிலேயே தொடர்ந்து வருவது மிகச் சில வீரர்கள் மட்டுமே.
அந்த வகையில் சிஎஸ்கே தோனி, ஆர்சிபி விராட் கோலி ஆகிய இருவருக்குப் பின் கொல்கத்தா அணியில் நீண்டகாலம் விளையாடி வருபவர், தொடர்ந்து தக்கவைத்து வருபவர் சுனில் நரைன் மட்டும்தான்.
கொல்கத்தா அணி பல வீரர்களை ஏலத்தில் எடுத்தாலும், விடுவித்தாலும் சுனில் நரைனை மட்டும் விடுவிக்கவில்லை, அவரின் திறமைக்கான தொகையைக் கொடுத்து தொடர்ந்து 13வது ஆண்டாகத் தக்க வைத்துள்ளது.

ரூ.12 கோடிக்கு தக்கவைப்பு
இதற்கு முன் ரூ.6 கோடிக்குத்தான் சுனில் நரைனை கொல்கத்தா நிர்வாகம் தக்க வைத்திருந்து. ஆனால் பந்துவீச்சு, பேட்டிங்கில் சில ஆண்டுகளாக நரைன் பங்களிப்பு பிரமாதமாக இருந்து வந்தது.
கடந்த 2024 சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமானவர்களில் ஒருவராக நரைன் இருந்ததைத் தொடர்ந்து, ஏலத்தில் ரூ.12 கோடிக்கு தக்க வைத்தது கொல்கத்தா அணி நிர்வாகம்.
நரைனுக்கு தற்போது 36 வயதானாலும், வயதைப் பொருட்டாகக் கொள்ளாமல் கொல்கத்தா அணி தொடர்ந்து அவரைத் தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான தொடக்க பேட்டிங்கிற்கும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியைத் தனது சுழற்பந்துவீச்சால் திணற வைப்பதற்கும் சுனில் நரைனுக்கு நிகர் அவர்தான்.

பட மூலாதாரம், Getty Images
பேட்டர் அவதாரம்
இத்தனைக்கும் சுனில் நரைன் சிறந்த பேட்டரெல்லாம் கிடையாது. 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் சுனில் கீழ்வரிசையில் களமிறங்கக்கூடிய வீரராகத்தான் இருந்தார். அவர் கரீபியன் டி20 லீக்கில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த கொல்கத்தா நிர்வாகம் ஏன் தொடக்க வீரராகக் களமிறக்கக்கூடாது என யோசித்து அவரை 2017இல் இருந்து தொடக்க வீரராகப் பயன்படுத்தியது.
சுனில் நரேனை தொடக்க வீரராகப் பயன்படுத்தும் கொல்கத்தா அணியின் முடிவைப் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். வர்ணனையாளர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் தனது முடிவில் இருந்து கொல்கத்தா நிர்வாகம் பின் வாங்கவில்லை.
பல போட்டிகளில் சுனில் நரைன் சொதப்பலாக பேட் செய்தாலும், சில போட்டிகளில் சுனில் நரைன் பேட்டிங் கொல்கத்தா அணிக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகச் சென்ற பிறகுதான் நரைனின் பேட்டிங் மெருகேறியது. நரைன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவரைத் தொடக்க வீரராக கம்பீர் களமிறக்கினார்.
சுனில் நரைன் ஒரு பேட்டியில், “ஜிஜி (கெளதம் கம்பீர்) மீண்டும் அணிக்குள் வாருங்கள். உங்களால்தான் நான் பேட்டிங்கில் முழு நம்பிக்கை பெற்றேன். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க முடியும், சிறப்பாக ஆட முடியும் என்பதை அறிந்தேன்” எனக் கூறியிருந்தார்.
அதன் பிறகு கொல்கத்தா அணியில் நிரந்த தொடக்க ஆட்டக்காரராகவே சுனில் நரைன் மாறிவிட்டார். கொல்கத்தா அணிக்காக 186 போட்டிகளில் ஆடியுள்ள சுனில் நரைன், ஒரு சதம், 7 அரைசதங்கள் என 1712 ரன்கள் சேர்த்து 17 சராசரியும், 166 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
பந்துவீச்சில் 190 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்காக மட்டுமே நரைன் வீழ்த்தியுள்ளார், 6.77 ரன்கள் எக்கானமி வைத்துள்ளார்.
அறிமுகமே அசத்தல்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2012 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் அறிமுகமான சுனில் நரைன் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்லும் அணியிலும் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி நரைன் முக்கியப் பங்காற்றினார். 2012 முதல் 2014 வரை 3 சீசன்களிலும் நரைன் 20 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அறிமுகத்தில் நரைன் எவ்வாறு பந்து வீசினாரோ அதே தரத்தில், அதே எக்கானமியில் தொடர்ந்து பந்துவீசி வருகிறார்.
ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் விக்கெட் வீழ்த்தியவுடன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள், துள்ளிக் குதிப்பார்கள், பம்பிங் செய்வார்கள்.
ஆனால், சுனில் நரைன் விக்கெட் வீழ்த்தினாலும் சரி, வீழ்த்தாவிட்டாலும் சரி ஒரே மாதிரியாகவே முகத்தை வைத்திருப்பார். விக்கெட் வீழ்த்திவிட்டேன் என்று களத்தில் ஒருமுறைகூட மகிழ்ச்சியை அதிகப்படியாக வெளிப்படுத்தாத அமைதியான வீரர்.
மாறாத நிலைத்தன்மை

பட மூலாதாரம், Getty Images
பந்துவீச்சாளராக அறிமுகமான சுனில் நரைன் கடந்த 13 ஆண்டுகளாக தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். பவர்ப்ளேவில் பந்து வீசினாலும், நடுப்பகுதி ஓவர்களில் பந்து வீசினாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே நரைன் பந்துவீச்சு இருக்கும்.
சுனில் நரைன் தனது 13 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில் பந்துவீச்சு சராசரி என்பது சராசரியாக 6 ரன்களை கடக்கவில்லை, சில சீசன்களில் மட்டும் 7 ரன்ரேட் சென்றுள்ளது. ஆனால் தொடக்கத்தில் 5 ரன்ரேட்டில் பந்துவீசி பேட்டர்களை திணறவிட்ட நரேன் பின்னர் சில சீசன்களில் பின்தங்கினார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தனது பந்துவீச்சு எக்கானமியை சராசரியாக 6 ரன்களில் பராமரித்து வருகிறார். ஐபிஎல் டி20 போட்டிகளில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் எக்கானமியை 6 என 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரித்து வருவது வியப்புக்குரியது.
கொல்கத்தா அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் எழுச்சி, ஹர்சித் ராணா வருகை, ரஸலின் விக்கெட் வீழ்த்தும் திறமை, ஸ்டார்க் வருகை எனப் பலர் வந்தபோதிலும் சுனில் நரைன் பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், மிரட்டல், விக்கெட் வீழ்த்தும் திறன், நிலைத்தன்மை மாறவில்லை.
கடந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடிய நரைன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், பேட்டிங்கில் 488 ரன்கள் குவித்திருந்தார்.
கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் தனது வழக்கமான ஆக்ஷனை மாற்றிவிட்டால் முன்புபோல் சிறப்பாகப் பந்துவீசுவது கடினமாக இருந்துள்ளது. ஆனால், சுனில் நரைன் 2014ஆம் ஆண்டில் இருந்து தனது பந்துவீச்சு ஸ்டைலை பலமுறை மாற்றியுள்ளார், ஆனால் அவரின் நிலைத்தன்மை மட்டும் மாறவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன், கூக்ளி வீசுவது, பந்துவீச்சில் திடீரென வேகத்தைக் கூட்டுவது என நரைன் பந்துவீச்சில் பல உத்திகளைக் கையாள்வார்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர்

பட மூலாதாரம், Getty Images
இந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்தது.
கொல்கத்தா அணி 204 ரன்கள் சேர்த்திருந்த போதிலும், அதை சேஸிங் செய்யும் முனைப்பில் டெல்லி அணி ஆடியது.
ஆட்டமும் டெல்லி பக்கம் சென்றது, சுனில் நரைன் ஒரே ஓவரில் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் விக்கெட்டையும், அடுத்த ஓவரில் டூப்ளெஸ்ஸி விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை நோக்கி நகர்த்தினார். பேட்டிங்கில் 27 ரன்களையும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை நரைன் வென்றார்.
கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும், அங்குல் ராய், வருண், குர்பாஸ் என வீரர்கள் பலரும் உற்சாகத்தில் கிண்டல், கேலி செய்து விளையாடினர். ரஹானே, ரிங்கு சிங் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
ஆனால், பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத் தந்த சுனில் நரைன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தனியாக மைதானத்தில் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.
அணியை நரைன் வழிநடத்தியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா அணியின் கேப்டன்சி வாய்ப்பு என்பது சீனியர் வீரரான நரைனுக்கு வழங்கப்பட்டது.
கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் களத்தில் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த அழைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைனை அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.
ரஹானேவுக்கு 12வது ஓவரில் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் பெவிலியன் சென்றுவிட்டார். அடுத்தபடியாக அணியை வழி நடத்த ஒருவர் வேண்டும் என்பதால், வெங்கடேஷ் அய்யர் வராமல் நரேனிடம் பொறுப்பு வழங்கப்பட்டது வியப்பைக் கொடுத்தது.
வெங்கடேஷ் அய்யர் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் தடுமாறியதால் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி அவரை இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கியது. அதிலும் சொதப்பிய வெங்கடேஷ் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இம்பாக்ட் வீரராக வருபவர் போட்டியில் முழுநேரம் விளையாட முடியாது.
கடின உழைப்பாளி

பட மூலாதாரம், Getty Images
சுனில் நரைன் குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே நேற்று (ஏப்ரல் 30) பேசுகையில், “நரைன் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். எப்போது நாங்கள் தடுமாற்றத்தில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். நரைன் கடினமான உழைப்பாளி, பயிற்சியின்போது அதிகாலையே வந்துவிடுவார், மணிக்கணக்கில் வலைப்பயிற்சியில் பந்து வீசக்கூடியவர்” எனத் தெரிவித்தார்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஜாலியாக இல்லாமல் இருக்கும் நரைன் குறித்து சில நேரங்களில் தவறான எண்ணங்கள் சக வீரர்களிடம் வந்தது உண்டு.
அதுகுறித்து ஆந்த்ரே ரஸல் நேற்று கூறுகையில், “நரைனுடன் நீண்ட கால பழக்கம் எனக்கு இருக்கிறது, அவரின் குணத்தையும், அமைதியான போக்கையும் பார்த்துப் பல வீரர்கள் தவறாக நினைத்துள்ளார்கள். நரைன் எப்போதுமே அமைதியானவர், சில சூழல்கள் அவருக்குச் சரியாக இல்லாவிட்டாலும் பேசமாட்டார்.
அதேவேளையில் களத்தில் அவர் போலச் சுறுசுறுப்பாக யாரும் செயல்பட முடியாது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சக வீரர்களிடம் அதிகமாகப் பேசுகிறார், தன்னை வெளிப்படுத்துகிறார், போட்டியை ரசிக்கிறார்” எனத் தெரிவித்தார்.
அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம்: சென்னை
- நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- நாள் – மே 1
- இடம் – ஜெய்பூர்
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs சிஎஸ்கே
- நாள் – மே 3
- இடம் – பெங்களூரு
- நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
- சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்)
- விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்)
- சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்)
நீலத் தொப்பி
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU