SOURCE :- BBC NEWS

 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்…

இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள்.

பொதுவாக, வட இந்தியாவில் ‘அகரா’ (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாது-துறவிகளின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரிவேணி நதி சங்கமிக்கும் இடத்திலும், உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரிலும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் கோதாவரி ஆற்றின் கரையிலும், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வின்போது, புதிய துறவிகளை அகராவில் சேர்த்துக்கொள்ளும் வைபவமும் நடத்தப்படுகிறது. உலகின் சாமானிய வாழ்க்கையைத் துறப்பவர்கள் 15 வெவ்வேறு அகராக்களில் ஏதேனும் ஒன்றில் இணைகிறார்கள்.

இருப்பினும், இதற்கு முன் அவர்கள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த ‘அகரா’ உலகில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சில முக்கியமான சடங்குகளையும் செய்ய வேண்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு நாகா துறவிக்கு அகராக்கள் எவ்வாறு தீட்சை அளிக்கின்றன?

அகராக்கள் ஒரு வகையில் இந்து மதத்தின் மடங்கள். ஆதி சங்கராச்சாரியார், பௌத்தம் பரவுவதைத் தடுக்க அகராக்களை நிறுவியதாக நம்பப்படுகிறது.

பிபிசியிடம் பேசிய மகாநிர்வாணி அகராவின் செயலாளரான மஹந்த் ரவீந்திரபுரி, “வேதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆயுதங்களால் இணங்க வைக்கப்பட்டனர். அகராக்கள் இந்து மதத்தை உயிர்ப்பித்தன” என்று கூறினார்.

முன்பு நான்கு அகராக்கள் மட்டுமே இருந்தன, ஆனால் கருத்தியல் வேறுபாடுகளால் அவை பிரிந்தன. தற்போது 15 முக்கிய அகராக்கள் உள்ளன. இதில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கான பரி அகரா, கின்னர் அகரா ஆகியவையும் அடங்கும்.

கும்பத்தின் மையத்தில் சாதுக்கள் மற்றும் நாகா துறவிகள் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக மற்றும் மத கருத்துகளின் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் புனித நூல்களின் ஆய்வும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அகராவும் அதன் சொந்த பாரம்பரியத்தின்படி சீடர்களுக்கு தீட்சை அளிக்கிறது மற்றும் ஏற்கெனவே உள்ள சாதுக்களுக்கு பட்டங்களை வழங்குகிறது.

 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

ஆரம்பக்கால அகராக்களில், சைவ சமயத்தவர்கள் (சிவனை வணங்குபவர்கள்) மற்றும் வைணவர்கள் (விஷ்ணுவை வணங்கும் துறவிகள்) முக்கியமானவர்களாக இருந்தனர்.

இப்போது அவர்களில் உதாசி மற்றும் சீக்கிய அகராக்களும் அடங்கும். இங்குள்ள சாதுக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு துறவி எந்த பிரிவைச் சேர்ந்தவரோ அந்தப் பிரிவின் பெயரும் குடும்பப் பெயரும் அவருடன் இணைக்கப்பட்டுள்ளன. சந்நியாசி ஆன பிறகு, குடும்ப உறவுகளையும் பின்னணியையும் துறக்கிறார். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயரும் அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு துறவி எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ, அந்தப் பிரிவின் பெயரும் பட்டப் பெயரும் அவரின் பெயருடன் இணைக்கப்படும். அவர்கள் சந்நியாசிகளான பிறகு குடும்ப உறவுகளையும் அதன் பின்னணியையும் துறக்கிறார்கள். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயர், அவரது பெயருடன் இணைக்கப்படும்.

ஒருவர் நாகா துறவி ஆவது எப்படி?

 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

வரலாற்று பேராசிரியர், முனைவர் அசோக் திரிபாதி, பிரயாக்ராஜை மையமாகக் கொண்டு ‘நாகா சந்நியாசிகளின் வரலாறு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் மூன்றாவது அத்தியாயத்தில் பல்வேறு பிரிவுகளின் பெரும்பாலான விதிகளை அவர் தொகுத்துள்ளார். அதன்படி,

  • அகராவில் சேர அல்லது நாகா துறவியாக மாற, எந்தவொரு நபரும் ஒரு நாகா துறவியின் சீடராகத் தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும். அந்த நபருக்கு எந்த உடல் குறைபாடும் இருக்கக்கூடாது. வழக்கமாக, 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தீட்சை பெறுவார்கள்.
  • தீட்சையின் ஆரம்பத்தில், அவர்களின் தலைமுடி மொட்டையடிக்கப்பட்டு, அவர்களுக்கு ‘மகாபுருஷ்’ அல்லது ‘வஸ்திரதாரி’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. மூத்த நாகா துறவி ஒருவரின் மேற்பார்வையில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • இந்தக் கட்டத்தில், ஒருவருக்கு தனிப்பட்ட குரு இருப்பதில்லை. ஆனால் அகராவின் மூலவர், உண்மையான குருவாகக் கருதப்படுவார்.
  • காலப்போக்கில் அந்த நபர் ஒரு மூத்த துறவியுடன் சேர்வார். அவரே அவரது ஆன்மீக வழிகாட்டியாகவும் மாறுவார். காவி அங்கி அணிந்து துறவிகளுடன் உலாவுவார்.
  • சுத்தம் செய்தல், சமைத்தல், புல்லாங்குழல் வாசித்தல், ஆயுதங்களில் பயிற்சி பெறுதல் போன்ற தனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் அந்த புதிய நபர் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, மூத்த நாகா துறவிகள் புதியவரின் செயல்திறனில் மகிழ்ச்சி அடைந்தால், அவர் நாகா திகம்பராக தீட்சை பெறுகிறார்.
  • இந்த நேரத்தில், அந்தப் புதியவர் ‘டாங்தோட் சன்ஸ்கார்’-க்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப முடியாது. அகராவின் ‘மஹந்த்’ அவரை உறுதிமொழி எடுக்கச் செய்வார்.
 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

இதுதவிர, நாகா துறவி ஆவதற்கான பிற விதிகள் உள்ளன, அவற்றை தீட்சை பெற்றவர்கள் பின்பற்ற வேண்டும்.

கும்பமேளாவின்போது, அவர் மூன்று நாள் விரதத்தைக் கடைபிடித்து ‘பிரேஷ் மந்திரத்தை’ உச்சரிக்க வேண்டும். தனக்கென சிரத்தையையும், 21 தலைமுறை பிண்ட தானங்களையும் தனது கைகளாலேயே செய்து உலக பந்தங்களை அறுத்துக்கொள்ள வேண்டும்.

அவர் தனது உலக வாழ்க்கையின் அடையாளமான முடியையும் அகற்றுகிறார். அதிகாலையில், கும்பமேளா நடைபெறும் ஆற்றில் நீராடி, இடுப்புத் துணி மட்டும் அணிந்து, ஒரு துறவியாக ‘மறுபிறவி’ எடுக்கிறார். நாகா துறவிகள் பபூதத்தையும் (புனித சாம்பல்) சாம்பலையும் தங்கள் உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

பயிற்சி காலத்தில், தீட்சை பெற விரும்பும் நபருக்கு மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்பப் போதுமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு, நாகா துறவியாக மாற இரண்டு முதல் 12 ஆண்டுகள் வரை ஆகலாம், இதற்கு எல்லையே இல்லை.

இருப்பினும், பெண் நாகா துறவிகள் முழு நிர்வாணமாக இருக்கவும், காவி ஆடைகளை அணியவும் அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த முறை பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவின்போது, மகிளா அகராவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ‘மாய் அகரா’ என்ற பெயர் ‘சந்நியாசினி அகரா’ என மாற்றப்பட்டது. பெண்களும் தங்கள் மத ஒழுங்குகளை நிறுவ அனுமதிக்கப்பட்டனர்.

நாகா துறவிகள் எங்கு வாழ்கிறார்கள்?

 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான மகாமண்டலேஷ்வரால் (Mahamandaleshwar) நிர்வகிக்கப்படுகிறது. மகாமண்டலேஷ்வர் முன்பு ‘பரமஹம்ஸர்’ என்று அழைக்கப்பட்டதாக ஜாதுநாத் சர்க்கார், தனது ‘தசநாமிகளின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (பக்கம் எண் 92) தெரிவித்துள்ளார்.

ஒரு அகராவில் 8 அறைகள் மற்றும் 52 மடாலயங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் மண்டலாஷ்வர் உள்ளது.

அகராவின் அளவைப் பொறுத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கலாம். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மஹந்த் தலைமையில் மத நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.

ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்த மஹந்த்களின் பிரதேசங்கள் இந்து அரசர்களுக்கு உட்பட்டிருந்தன. எந்த அரசரும் இந்தத் துறவிகளைக் கௌரவித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார். பதிலுக்கு, நாகா துறவிகளும் ராணுவ ஆதரவை வழங்குவார்கள்.

“அகராவின் பாரம்பரியம் அலெக்சாண்டரின் படையெடுப்பு காலத்தில் இருந்தே தொடங்கியதாக நம்பப்படுகிறது” என்று அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வரலாற்று பேராசிரியர் ஹேரம்பா சதுர்வேதி கூறுகிறார்.

“சர் ஜாதுநாத் சர்க்கார் தனது ‘தசநாமி நாக சந்நியாசிகளின் வரலாறு’ என்ற புத்தகத்தில் இது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்” என்கிறார் அவர்.

அக்பரின் ஆட்சிக் காலத்தில், இந்து துறவிகளுக்கு ஆயுதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, ஔரங்கசீப் காலத்தில் துறவிகளுக்கும் முகலாயர்களுக்கும் ஆயுத மோதல்கள் நடந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

இந்தியாவில் ஆங்கிலேய அரசு உருவான பிறகு ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நிர்வாணமாக சுற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்திய ஆண்டுகளில், கும்பமேளா, மஹா கும்பமேளா அல்லது சிவராத்திரி திருவிழா போன்ற பண்டிகைகளின் போது மட்டுமே நாகா துறவிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவை தவிர்த்து, அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவர்களின் அகராக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

துறவிகள் அகராவுக்குள் எளிதில் நுழைய முடியாது. அதற்காக, அவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒருவர் அரங்கில் நுழைந்தவுடன், அவர் சாதி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, தனது தனிப்பட்ட செல்வத்தையும் உலக ஆசைகளையும் துறக்கிறார். துறவிகளை அகராவில் நுழைய அனுமதிக்க வெவ்வேறு ஏற்பாடுகள் உள்ளன.

தசநாமியின் நான்கு முக்கிய மையங்கள் கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம் மற்றும் ஜோர்திம் மடம், முறையே பூரி (கிழக்கில் ஒடிசா), துவாரகா (மேற்கில் குஜராத்), சிருங்கேரி (தெற்கில் கர்நாடகா) மற்றும் ஜோஷிமத் (வடக்கில் உத்தராகண்ட்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம், ஜோஷிமத் ஆகியவை முறையே பிரகாஷ், ஸ்வரூப், சேத்தன் மற்றும் ஆனந்த் (அல்லது நந்தா) என்று தீட்சை பெறுபவர்களால் அறியப்படுகிறது. இவற்றின் மூலவர்கள் முறையே ஜகந்நாதர், சித்தேஷ்வர், ஆதி வராஹா மற்றும் நாராயணா ஆவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU