SOURCE :- BBC NEWS

மதகஜராஜா திரைப்படம் வெற்றி, நடிகர் விஷால், நடிகர் சந்தானம்,

பட மூலாதாரம், Gemini Film Circuit

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நாயகனாக நடித்திருக்கும் மதகஜராஜா மிகப்பெரும் வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், 2013இல் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படம், 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதுதான்.

பொங்கல் பண்டிகை அன்றைக்கோ அல்லது அந்த வாரத்திலோ, புதிய படங்கள் வெளியாவது வழக்கம். முக்கியமாக, உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாவது வழக்கம். 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி, வணங்கான், தருணம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியிடப்படாது என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்தாது. அஜித் போன்ற முன்னணி நட்சத்திரம் ஒருவரின் படம் போட்டியில் இருந்து விலகியதால், ஏழு படங்கள் பொங்கல் விடுமுறையில் வெளியாகின.

இந்நிலையில், ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான மதகஜராஜா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனவரி 11 அன்று மதகஜராஜா படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த பலரும் படத்தைப் பாராட்டியிருந்தனர். குறிப்பாக, நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை, மறைந்த நடிகர் மனோபாலா வரும் காட்சிகள், விஜய் ஆண்டனி இசையமைப்பில் பாடல்கள் எனப் பல விஷயங்கள் படத்தில் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

பண்டிகையையொட்டி வெளியான, வணங்கான், கேம் சேஞ்சர் போன்ற எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுக்குக்கூட கலவையான விமர்சனங்களே கிடைத்ததால், இந்த பொங்கல் போட்டியில், மதகஜராஜாவே பெரும் வெற்றிப் பெற்றுள்ளதாக தமிழ் திரைப்பட ரசிகர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

மதகஜராஜா, 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி வெற்றி பெற்றது எப்படி? திரையரங்க உரிமையாளர்கள் இதுகுறித்து நினைப்பது என்ன?

நஷ்டத்தில் இருந்த தயாரிப்பாளர்கள்

மதகஜராஜா வெளியீட்டுக்கு முக்கியக் காரணமாக இருந்த விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் பிபிசி தமிழிடம் கூறுகையில், “மதகஜராஜா 2013இல் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் கடன் பிரச்னை மிகத் தீவிரமாக இருந்தது.

எனக்கும், இன்னும் சில விநியோகஸ்தர்களுக்குமேகூட அவர்கள் கடனை திரும்பத் தர வேண்டியிருந்தது. இந்த 13 வருட காலகட்டத்தில் அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதில் கவனமாக இருந்ததால் மதகஜராஜா வெளியீடு பற்றி யோசிக்கவில்லை” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

மேலும், இந்த பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகப் போவதில்லை என்பது தெரிந்ததும் மதகஜராஜாவை வெளியிட முயல்வோம் என நினைத்து, சக விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசியதாக அவர் கூறினார்.

“படத்தை வெளியிட்டு வரும் லாபத்தில் நாம் பிரித்துக்கொள்ளலாம் என்று யோசனை கூறினேன். ஆரம்பத்தில் சில ஃபைனான்சியர்கள் யோசித்தனர். பிறகு அனைவரும் ஒப்புக்கொண்டனர்” என்றார்.

இதன் பிறகு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்ததால், சுந்தர் சி-யை அழைத்து படத்தை வெளியிடுவது தொடர்பாக சுப்பிரமணியம் பேசியுள்ளார். “அவர் தரப்பிலும் பட வெளியீட்டுக்கு முயற்சி எடுக்குமாறு சொன்னேன். அவரும், அரண்மனை 4 தயாரிப்பாளர்களும் சேர்ந்து படத்தை வெளியிடுவதாக முடிவு செய்தனர். நடிகர் விஷாலும், அவரால் முடிந்த வரை படத்துக்கான விளம்பரத்துக்கு வந்து நிற்பதாக உறுதியளித்தார். இப்படி எல்லோரும் ஆதரவு தர முன் வந்ததால் படத்தை வெளியிட்டோம்” என்கிறார் அவர்.

‘திரையரங்குகளைக் காப்பாற்றிய படம்’

மதகஜராஜா திரைப்படம் வெற்றி, நடிகர் விஷால், நடிகர் சந்தானம்,

பட மூலாதாரம், @VishalKOfficial

பொங்கலை முன்னிட்டு வெளியான மற்ற படங்கள் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், மதகஜராஜாதான் திரையரங்குகளைக் காப்பாற்றியுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

“விடாமுயற்சி வெளியிடப்படுவதில் இருந்து பின் வாங்கியதால் பல படங்கள் வெளியானாலும் எதுவுமே ஹிட் ஆகவில்லை. இந்த நிலையில் மதகஜராஜா, எங்களைக் காப்பாற்றிய படம் என்று கூற வேண்டும். இந்த வாரம் முடியும் வரை படத்திற்கான கூட்டம் குறையாது” என்கிறார் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ்.

சென்னை போரூர் ஜி.கே சினிமாஸ் உரிமையாளர் ரூபனும், “கிட்டத்தட்ட 10 நாட்கள் விடுமுறை என்ற நிலையில் ஒரு பெரிய படம் வந்திருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தோம். மதகஜராஜா அந்த இடத்தைப் பிடித்துள்ளது,” என்றார்.

“மதகஜராஜா வெற்றி பெறும் என்று நான் நினைத்தாலும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம், இன்றைய ரசனையோட ஒத்துப் போகுமா என்று நினைத்தேன். ஆனால் மக்களைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என்றுமே ரசிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுவதுமே மதகஜராஜாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் இந்த வெற்றியை எதிர்பார்த்த ஒன்றுதான் எனவும் கூறுகிறார் ராகேஷ்.

“என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் வெற்றியடையும் என்று எதிர்பார்த்தேன். எங்களுக்கு திண்டிவனம், திருசெங்கோடு ஆகிய ஊர்களிலும் திரையரங்குகள் உள்ளன. அங்கும் மதகஜராஜவே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,” என்றார் அவர்.

ஜனரஞ்சக படங்களுக்கான வெற்றிடமா?

மதகஜராஜா திரைப்படம் வெற்றி, நடிகர் விஷால், நடிகர் சந்தானம்,

பட மூலாதாரம், @VishalKOfficial

மதகஜராஜாவின் வெற்றி இன்னொரு முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. “தமிழில் வெகுஜன மக்களுக்கான படங்கள் குறைந்துவிட்டது, தொடர்ந்து தீவிர சிந்தனையை ஒட்டியே படங்கள் வருவதால்தான் இந்தப் படம் ஹிட் ஆகியுள்ளது” என்கிற கருத்தையும் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து, விமர்சகர் பரத்வாஜ் ரங்கனிடம் கேட்டபோது, “முன்னணி நடிகர்கள் ஒரு சிலரைத் தவிர நிஜமாகவே அனைத்து தரப்பு மக்களிடையே பிரபலமான நட்சத்திரங்கள் இங்கு பலர் இல்லை. மேலும் தமிழில் ஒரு சில வகையான படங்கள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்படும் படங்கள் பெருபான்மையானவை தீவிரமானதாகவே இருந்திருக்கின்றன. வன்முறை சார்ந்தோ அல்லது ஏதாவது ஒரு பிரச்னை சார்ந்தோ வந்த படங்களே அதிகம். திரையரங்க அனுபவம் என்பது ஆக்‌ஷன் படங்களுக்கும் அதிலிருக்கும் வன்முறைக்கும் மட்டுமே என்ற நிலை நிலவுகிறது,” என்றார்.

மதகஜராஜா ஒரு சராசரி நகைச்சுவைப் படம் எனக் கூறும் பரத்வாஜ் ரங்கன், முன்னர் வந்துகொண்டிருந்த அப்படியான படங்கள் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இப்போது வருவதில்லை என்கிறார்.

மதகஜராஜா திரைப்படம் வெற்றி, நடிகர் விஷால், நடிகர் சந்தானம்,

பட மூலாதாரம், INSTAGRAM/BARADWAJ RANGAN

மேலும், “அந்த வகைப் படங்கள் வெகுஜன மக்களிடையே எளிதில் சென்று சேரும். ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு ஜனரஞ்சக படங்களுக்கான வெற்றிடம் ஒன்று கண்டிப்பாக இருந்தது. மதகஜராஜா அந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளது.

எனக்கு அந்தப் படத்தில் நாயகிகளின் கதாபாத்திரம் வைக்கப்பட்டிருந்த விதம், அது திரையில் பிரதிபலித்த விதத்தில் சுத்தமாக உடன்பாடு இல்லை. அது என் தனிப்பட்ட கருத்து. ஆனால், நகைச்சுவை, பாட்டு, சண்டை, சென்டிமென்ட் என மக்களுக்கு இப்படி ஒரு ஃபார்முலாவில் படம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த எல்லா தேவைகளையும் மதகஜராஜா பூர்த்தி செய்ததாகவே கருதுகிறேன். தொலைக்காட்சியில் பழைய படங்களைப் பார்ப்பதைப் போலவே மக்கள் இதைப் பார்த்துள்ளனர்” என்கிறார்.

திருப்பூர் சுப்பிரமணியமும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதாகவே கூறுகிறார். தமிழ் சினிமாவில் தீவிரமான படங்கள் மட்டுமே வருகின்றன என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுவது நூறு சதவீதம் சரியே என்கிறார் அவர்.

“கடந்த 10 ஆண்டுகளில், நாயகர்கள், அவர்களை முதன்மைபடுத்தினால் மட்டுமே போதும், படம் ஓடிவிடும் என்று நினைக்கின்றனர். எம்ஜிஆர் படங்களிலேயே கண்டிப்பாக நாகேஷ் மாதிரி ஒரு நகைச்சுவை நடிகர் எல்லா படங்களிலும் இருப்பார். ஏன், ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என அனைவரது படங்களிலும் அப்படித்தான் இருந்தன. குடும்பங்களாக வந்து படங்களை ரசிக்க வேண்டும் என்று நினைத்தால் படத்தில் நல்ல நகைச்சுவை என்பது கட்டாயம்” எனக் கருதுகிறார் சுப்பிரமணியம்.

குறைந்த செலவு, நிறைந்த லாபம்

மதகஜராஜா: 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது எப்படி?

பட மூலாதாரம், @GeminiFilmOffl

“சுந்தர் சி படங்களில் அதீத வன்முறை என்பது இருக்கவே இருக்காது. மக்கள் எல்லாருமே யோசிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு நாம் தனியாக அறிவுரையோ கருத்தோ சொல்ல வேண்டாம் என்று நினைப்பவர். எனவே நகைச்சுவையைப் பிரதானமாக வைத்து படங்களை எடுக்கிறார். நல்ல பொழுதுபோக்கைத் தருகிறார். இரண்டு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள மதகஜராஜா 100 கோடி வரை வசூல் செய்யும்,” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

அவரைப் பொருத்தவரை, இந்த வெற்றி திரைத்துறைக்கு நல்ல செய்தி. பொதுவாகவே நூறு கோடிக்கும் மேலாக முதலீடு செய்து எடுக்கப்படும் படங்களைவிட, இப்படியான குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் குறைவான தாக்கமே இருக்கும். ஆகவே, கண்டிப்பாக மதகஜராஜா போன்ற படங்கள் இனி தொடர்ந்து எடுக்கப்பட்டால் வெற்றி பெறும்” என்கிறார் அவர்.

ராகேஷும், ரூபனும், ஞாயிற்றுக்கிழமை வரை மதகஜராஜாவின் அனைத்து காட்சிகளிலும் கிட்டத்தட்ட அரங்கு நிறைந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

பாதிப்படைந்த சிறிய படங்கள்

மதகஜராஜா திரைப்படம் வெற்றி, நடிகர் விஷால், நடிகர் சந்தானம்,

பட மூலாதாரம், @RitzyCinemas

மதகஜராஜா வெற்றி நல்ல விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், பொங்கலுக்கு வெளியான சிறிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10ஆம் தேதியன்று வெளியான மெட்ராஸ்காரன், 14 அன்று வெளியான தருணம் ஆகிய இரண்டு படங்களுக்கும் சரியான திரைகளும், காட்சிகளும் கிடைக்கவில்லை.

சற்று குறைவான கூட்டம் வந்தாலும், இந்தச் சிறிய படங்கள் நீக்கப்பட்டு மதகஜராஜாவுக்கே திரையரங்குகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதில் தருணம் திரைப்படத்தை தற்போதைக்கு திரும்பப் பெற்று, மீண்டும் ஒரு தேதியில் முறையாக, திரைகளில் வெளியிடுவதாக, தருணம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

ஆனால், இப்படியான பெரிய படங்கள் வரும் சூழலில் சிறிய படங்கள் அவற்றோடு போட்டியிட முடிவு செய்தது தவறான முடிவு என்று கருதுகிறார் ராகேஷ்.

“மதகஜராஜா வெற்றிப்படமே. ஆனால் அமரன் அளவுக்கு வெற்றி பெறுமா எனச் சொல்லிவிட முடியாது. எனவே வரும் வாரங்களில் இருக்கும் இடைவெளியை சிறிய படங்கள் பயன்படுத்தியிருக்கலாம். மேலும் சில படங்கள் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகின. எப்போதுமே பொங்கலுக்கு முன் வரும் வார இறுதியில், பெரிய வியாபாரத்துக்கு இடம் இருக்காது. அதனால்தான் அந்தப் படங்களுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை” என்றார் அவர்.

அதோடு, சிறிய படங்கள் இன்னும்கூட சிறப்பாகத் திட்டமிட்டு இருக்கலாம் என்கிறார் ரூபன். “பெரிய நட்சத்திரங்களின் அல்லது இயக்குநர்களின் படங்களோடு வெளியாகும்போது திட்டமிடலே முக்கியம். ஏனெனில் பொங்கலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் இல்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தியிருக்கலாம்” என்கிறார் அவர்.

மதகஜராஜா வெற்றிக்குப் பின், எளிமையான பொழுதுபோக்குப் படங்களுக்கான வெற்றிடம், சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் இல்லாமல் போனது என இந்த வெற்றிக்குப் பல காரணங்களை நெட்டிசன்கள் பட்டியலிடுகின்றனர்.

“பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு வெளியாகும் படத்தில் மக்கள் அதிக கொண்டாட்ட மனநிலையையே எதிர்பார்க்கிறார்கள். படம் முழுவதும் சிரிக்க வைக்க வேண்டாம், 10 இடங்களில் நன்றாக சிரித்தால்கூட போதும், 30-40 நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருந்தால் போதும், மக்கள் மற்ற தவறுகளை மன்னிக்கத் தயாராக இருக்கின்றனர்” என்கிறார் விமர்சகர் பரத்வாஜ் ரங்கன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU