SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வளைகுடா நாடுகளுக்கான சுற்றுப்பயணம், வெள்ளிக்கிழமை (மே 16) முடிவடைந்தது. சௌதி அரேபியா மற்றும் கத்தாரைத் தொடர்ந்து இறுதியாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சென்றார்.
மீண்டும் அமெரிக்க அதிபரான பிறகு, டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு வளைகுடா நாடுகளைத் தேர்ந்தெடுத்தார். எனவே இந்தப் பயணம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.
தனது பயணத்தின் போது, ’டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள முதலீடுகள் மற்றும் வணிக உடன்படிக்கைகள்’ தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டொனால்ட் டிரம்ப் இந்தப் பயணத்தின் போது, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்குச் செல்லவில்லை.
டிரம்பின் வருகையால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் என்பது, சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதாகும். சிரியாவில் அசாத் அரசாங்கம் அகற்றப்பட்ட பிறகு அகமது அல்-ஷாரா இடைக்கால அதிபராக இருந்து வருகிறார்.
டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள்

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் வளைகுடா சுற்றுப்பயணம் செவ்வாயன்று சௌதி அரேபியாவிலிருந்து தொடங்கியது, அங்கு அவர் 142 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தார் சென்ற டிரம்ப், 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பல முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
மே 15, வியாழக்கிழமை, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தை (கத்தார்) பார்வையிட்ட டிரம்ப், இந்த தளத்தில் கத்தார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று அறிவித்தார்.
அங்கு அமெரிக்க படைகளிடையே உரையாற்றிய டிரம்ப், “மோதல்களைத் தூண்டிவிடுவது அல்ல, அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது விருப்பம்” என்று வலியுறுத்தினார்.
மே 16, வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரம்பை வரவேற்ற அந்நாட்டு அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ‘அடுத்த 10 ஆண்டுகளில் தனது நாடு, அமெரிக்காவில் 1.4 டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்’ என்று அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் சிப்களை, ஐக்கிய அரபு அமீரகம் அணுகுவதை எளிதாக்குவதற்கான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
டிரம்ப் அபுதாபிக்குச் சென்ற போது, காஸாவில் உள்ள நிலைமையை அமெரிக்கா சரிவர ‘கையாள’ முயற்சிப்பதாக கூறினார். முற்றுகையிடப்பட்ட பாலத்தீனப் பகுதியில் பலர் ‘பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் காஸா பிரச்னையை ஆராய்ந்து வருகிறோம், அதைத் தீர்க்க கடுமையாக உழைப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
சௌதி அரேபியா – அமெரிக்கா ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவுடன், 5 துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
விமானப்படை மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் மேம்பாடு, வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், கடல்சார் மற்றும் கடலோர பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளின் நவீனமயமாக்கல், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகளின் நவீனமயமாக்கல் ஆகியவை இதில் அடங்கும்.
சௌதி அரேபியாவின் ராணுவ அகாடமி மற்றும் ராணுவ சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவது உட்பட, சௌதி அரேபியாவின் ராணுவ திறன்களை மேம்படுத்துவதற்கான விரிவான பயிற்சிகள் மற்றும் ஆதரவு சேவைகளும் இந்த தொகுப்பில் அடங்கும்.
சௌதி அரேபியா அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும், அமெரிக்கா முழுவதும் உள்ள ஏ.ஐ தரவு மையங்களில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இரு நாடுகளிலும் பயன்படுத்துவதற்கான அதிநவீன உருமாற்ற தொழில்நுட்பங்களை (Transformational technologies) உருவாக்க அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா 14.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிவாயு டர்பைன்கள் (Gas turbines) மற்றும் எரிசக்தி தீர்வுகளையும், 4.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 737-8 பயணிகள் விமானங்களையும் ஏற்றுமதி செய்யும்.
ஆயுத ஒப்பந்தத்தைத் தவிர, பிற ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் எரிசக்தித் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடங்கும். மேலும், சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கான விருப்பக் கடிதம், கனிம வளங்கள் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்க நீதித்துறையுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தம், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதில் கூட்டாண்மை தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடியவை அல்ல என்றாலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட விரும்புகின்றன என்பதை இது குறிக்கிறது.
சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்

பட மூலாதாரம், Reuters
இந்த ஒப்பந்தங்களைத் தவிர, மத்திய கிழக்கின் அரசியலைப் பாதிக்கும் பிற பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டையும் அமெரிக்க அதிபர் தெளிவுபடுத்த முயன்றார்.
அமெரிக்கா இரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்று அவர் கூறினார்.
“இரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார் டிரம்ப்.
இதைச் சொல்லும்போது, இரான் ‘இப்பிராந்தியத்தை அழிப்பதாகவும், வெளிநாடுகளில் வன்முறை செயல்களுக்கு நிதி உதவி வழங்குவதாகவும்’ அவர் குற்றம் சாட்டினார்.
“இருப்பினும், கடந்த காலங்களில் இரான் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழப்பத்தைக் கண்டிக்க நான் வரவில்லை, மாறாக ‘மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை’ நோக்கி ‘ஒரு புதிய மற்றும் சிறந்த பாதையை’ அவர்களுக்குப் பரிந்துரைக்கவே வந்துள்ளேன்” என்று டிரம்ப் கூறினார்.
“இரானிய தலைமை இந்த ‘சமாதான முன்மொழிவை’ நிராகரித்து, அதன் அண்டை நாடுகளைத் தொடர்ந்து தாக்கினால், அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து இரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அவர் கூறினார்.
ஆனால் டிரம்ப் வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்பு சிரியா மீதான தடைகளை நீக்குவதாகும்.
இதை அறிவித்த அவர், “தடைகள் முக்கியமான வேலையைச் செய்கின்றன, ஆனால் இப்போது சிரியா முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
மத்திய கிழக்கின் மிக முக்கியமான பிரச்னையான காஸா குறித்தும் டிரம்ப் பேசினார்.
“காஸா மக்கள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள், ஆனால் அவர்களின் தலைவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து, கடத்தி, சித்ரவதை செய்யும் வரை அது நடக்காது” என்றார்.
கடந்த பிப்ரவரியில், “அமெரிக்கா, காஸா முனையை ஆக்கிரமிக்கும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் முதல் பயணத்திற்கு வளைகுடா நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை எங்கு மேற்கொள்வார் என்பது ஒரு முக்கியமான முடிவாகும். இது பெரும்பாலும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான அவரது முன்னுரிமைகளின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர்கள் முதலில் கனடா, மெக்சிகோ அல்லது ஐரோப்பாவிற்குச் செல்வது என்ற மரபை தனது இரண்டு பதவிக்காலங்களிலும், டொனால்ட் டிரம்ப் உடைத்துள்ளார்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் சௌதி அரேபியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.
வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் மீண்டும் மே 13–16 க்கு இடையில் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்தார்.
வளைகுடா விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஓமானி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் அப்துல்லா பாபுத்தின் கூற்றுப்படி, “வளைகுடா தலைவர்களின் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கு ஒரு காரணம். அது மட்டுமல்லாது அமெரிக்காவில் பெரிய முதலீடுகளைப் பெறுவதற்கும் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதற்குமான அவர்களின் திறன் காரணமாக, அவர்களுடன் வலுவான உறவுகளை பேணுவதை டிரம்ப் விரும்புகிறார்.”
மார்ச் மாதம் டிரம்ப் தனது பயணத் திட்டங்களை அறிவித்தபோது, அரபு நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்களை எட்டுவதே தனது முதன்மையான நோக்கம் என்று தெளிவுபடுத்தினார்.
சௌதி அரேபியாவிலும் மத்திய கிழக்கின் பிற இடங்களிலும் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவோம் என இந்நாடுகள் உறுதியளித்ததால், அங்கு செல்ல முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.
“அவர்களின் நிதி இருப்பு மற்றும் மிகப்பெரிய முதலீட்டு திறன் காரணமாக, வளைகுடா நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று பேராசிரியர் பாபுத் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டுப் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, பணக்கார வளைகுடா நாடுகளுடனான உறவுகளில் உள்ள நன்மைகளை டிரம்ப் பார்க்கிறார்.
2017ஆம் ஆண்டில் 450 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக டிரம்ப் கூறினார், இதில் 110 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களின் விற்பனையும் அடங்கும்.
டிரம்ப் தனது பயணங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகளைக் காட்ட விரும்புகிறார் என்று வாஷிங்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஹசன் மினிம்னே கூறுகிறார்.
இந்த முக்கிய முதலீட்டு வாக்குறுதிகள், குறிப்பாக ராணுவ ஒப்பந்தங்கள், விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விரும்புகிறார்.
இதன் மூலம், மற்ற நாடுகளுடனான தனது வர்த்தகக் கொள்கைகளின் வெற்றிக்கான சான்றாக இவற்றை அவர் காட்ட முடியும்.
வளைகுடா நாடுகளின் முக்கியத்துவம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே சௌதி அரேபியா ஒரு முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரியில், ரியாத்தில் நடந்த அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டத்தில் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
2022இல் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்த பிறகு நடந்த முதல் சந்திப்பு இதுவாகும். ரஷ்யாவை தனிமைப்படுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் முடிவுக்கு வந்ததையும் இந்த சந்திப்பு குறிக்கிறது.
மார்ச் மாதத்தில், யுக்ரேனில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க 3 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சௌதி அரேபியா வரவேற்றது.
பிப்ரவரியில் டிரம்புக்கும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கும் இடையே ஓவல் அலுவலகத்தில் நடந்த பதற்றமான சந்திப்பிற்குப் பிறகு, ஜெட்டாவில் அமெரிக்கா – யுக்ரேன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ரஷ்ய மற்றும் யுக்ரேனிய போர்க் கைதிகளை, அவ்விரு நாடுகளும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வெற்றி பெற்றன.
பேராசிரியர் பாபுத், “பிராந்திய மற்றும் உலகளாவிய நெருக்கடிகளில் வளைகுடா நாடுகளின் பங்கு, அவற்றின் நிதி சக்தி, அவற்றின் பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகள் காரணமாக அவை குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ளன” என்கிறார்.
“சீனாவும் அமெரிக்காவின் பிற போட்டியாளர்களும் வளைகுடா நாடுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றனர், எனவே அமெரிக்கா அதன் பிராந்திய நட்பு நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுகிறது.” என்று அவர் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC