SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
வெவ்வேறு இனங்களின் ஒற்றைத் துணை வாழ்க்கை முறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மனிதர்கள் தங்களுக்கான ஜோடிகளை அமைத்துக் கொள்வதில் மீர்க்கேட் எனப்படும் பாலைவனக் கீரிகளை ஒத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒற்றைத் துணை வகைப்பாட்டின் படி, மனிதர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில், தங்களது உறவினர்களான பிரைமேட்களை (Primate) விட, இந்த கீரிகளையே அதிகம் ஒத்திருக்கிறார்கள்.
66% ஒருவனுக்கு ஒருத்தி வாழ்க்கை முறையுடன், மனிதர்கள் இந்த விஷயத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். குறிப்பாக, சிம்பன்சி மற்றும் கொரில்லாக்களை விட மிக அதிகமாகவும், மீர்க்கேட்களுக்கு இணையாகவும் உள்ளனர்.
ஆனால், ஒப்பீட்டளவில் ஒற்றைத் துணை வாழ்க்கை முறையை அதிகம் கொண்ட உயிரினம் மனிதர்கள் இல்லை. அந்த இடத்திலிருந்து நாம் வெகு தூரத்தில் இருக்கிறோம்.
இதில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கலிபோர்னியா எலி. தன் வாழ்நாள் முழுவதும் பிரிக்க முடியாத காதல் பிணைப்புகளை உருவாக்கும் ஓர் உயிரினம் இது.
பட மூலாதாரம், Getty Images
ஒற்றை துணையுடன் வாழ்தல்
“ஒற்றைத் துணையுடன் வாழ்வதில் மனிதர்கள் உயரடுக்கில் உள்ளனர். அதே சமயம் மற்ற பாலூட்டிகளில் மிகப் பெரும்பாலானவை இனச்சேர்க்கைக்கு பல இணைகளுடன் உறவு கொள்ளும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் ஆய்வறிஞர் மார்க் டைபில் கூறினார்.
விலங்குலகில் இனச்சேர்க்கை என்பது அதற்கே உரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மனிதன் உள்பட ஒவ்வோர் உயிரினத்திற்கும் தனித்தன்மையுடன் இனச்சேர்க்கை பரிணாமம் அடைந்தது ஏன் என்பதை இது விளக்கக் கூடும்.
ஒற்றைத்துணையுடன் வாழ்வதில் உள்ள பல நன்மைகளை நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர். அதாவது, ஒரே ஒரு இனப்பெருக்க காலத்திற்கு மட்டுமாவது ஒற்றைத் துணையுடன் வாழ்வதன் மூலம் சந்ததியைப் பராமரிக்கவும், போட்டியாளர்களை விரட்டவும் உதவும் என்பது அவர்களது கூற்று.
வரலாறு முழுவதும் பல்வேறு மனிதக் குழுக்களை டைபில் ஆய்வு செய்தார். அதில், ஒரே தாய் – தந்தைக்குப் பிறந்த சகோதர-சகோதரிகளுக்கும் ஒரே தாய் அல்லது தந்தைக்குப் பிறந்த (இருவருக்கும் பிறந்தவர்கள் அல்ல) சகோதர-சகோதரிகளுக்கும் இடையிலான விகிதத்தைக் கணக்கிட்டார்.
இதேபோன்ற தரவுகள் 30க்கும் மேற்பட்ட ஒற்றைத் துணையுடன் வாழும் பாலூட்டிகள் மற்றும் பிற இனங்களிலும் சேகரிக்கப்பட்டன.
ஒரே தாய் – தந்தைக்குப் பிறந்த சகோதர-சகோதரிகளின் விகிதம் மனிதர்களில் 66% ஆக உள்ளது. இது பாலைவன கீரிகளை (60%) விட அதிகம், ஆனால் ஐரோப்பியன் பீவர்களை (73%) (European beavers)விடக் குறைவு.
பரிணாம அடிப்படையில் மனிதனின் நெருங்கிய உயிரினமாக கருதப்படும் மலை கொரில்லாக்கள் 6%, மற்றும் சிம்பன்சிகள் 4% மட்டுமே (டால்பின்களும் இதில் அடங்கும்) பெற்று இந்த வரிசையில் பின்தங்கியுள்ளனர்.
கடைசியாக ஸ்காட்லாந்தின் ஸோய் ஆடுகள் உள்ளன. இதில் பெண் ஆடுகள் பல ஆண்களுடன் இணைகின்றன. இவற்றில் ஒரே தாய் மற்றும் தந்தையைப் பகிர்ந்து கொள்ளும் சகோதர-சகோதரிகள் விகிதம் 0.6% மட்டுமே ஆகும்.
இந்த வரிசையில் கலிபோர்னிய சுண்டெலி 100% பெற்று முதல் இடத்தைப் பிடித்தது.

இருப்பினும், பாலைவன கீரிகள் மற்றும் ஐரோப்பியன் பீவர்களுடன் வகைப்படுத்தப்படுவதால் மனித சமூகங்கள் ஒரே மாதிரியானவை என்று அர்த்தமாகிவிடாது. மனித சமூகம் முற்றிலும் வேறுபட்டது.
“மனிதர்களில் நாம் காணும் ஒரே தாய்-தந்தைக்குப் பிறந்த சகோதர-சகோதரிகளின் விகிதம் பாலைவனை கீரிகள் அல்லது ஐரோப்பியன் பீவர்கள் போன்றவற்றை கிட்டத்தட்ட ஒத்திருந்தாலும் மனிதர்களில் சமூக அமைப்பு மிகவும் வேறுபட்டது” என்று பிபிசியிடம் டைபில் கூறினார்.
“இந்த உயிரினங்களில் பெரும்பாலானவை காலனி போன்ற சமூகக் குழுக்களாக அல்லது ஒன்றாகவே வாழும் ஜோடிகளாக வாழ்கின்றன. மனிதர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். நாம் பல ஆண்கள் மற்றும் பல பெண்கள் இணைந்த குழுக்களாக வாழ்கிறோம். இந்த குழு அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒற்றைத் துணையுடன் வாழும் நிலை இருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வில் பங்கேற்காத பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் கிட் ஓபி, மனித இனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்வதில் இது மற்றொரு முக்கிய அங்கமாகும் என்று கூறினார்.
“காலம் முழுவதும் மற்றும் வெவ்வேறு இடங்களில் மனிதர்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்பவர்கள் என்ற மிகத் தெளிவான புரிதலை இந்தக் கட்டுரை நமக்கு அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“நமது சமூகம் சிம்பன்சிகளைப் போன்றதுதான்; இனச்சேர்க்கை என வரும்போது நாம் ஒரு மாறுபட்ட ஒரு பாதையை எடுத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த புதிய ஆய்வு ப்ரசீடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொசைட்டி: பயலாஜிகல் சயின்சஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC







