SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
4 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய தினம் (06/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததாக, இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
“கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர சுரேஷ் (38). விவசாய கூலியான இவர் தனது மனைவி மல்லிகெ (32) உடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு தனது மனைவியை காணவில்லை என குருபர சுரேஷ் குஷால் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, 2021-ம் ஆண்டு மைசூரு மாவட்டத்தில் உள்ள பெட்டதபுரா அருகே காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீஸார் அந்த உடல் காணாமல் போன மல்லிகெவின் உடல் என உறுதி செய்தனர். இதையடுத்து, குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை கொன்று ஆற்றில் போட்டதாக போலீஸார் அவரை கைது செய்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருபர சுரேஷை போலீஸார் அடித்து சித்ரவதை செய்து, வாக்குமூலமும் வாங்கியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இவ்வழக்கில் 2022-ம் ஆண்டு மைசூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். குருபர சுரேஷ் மைசூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸார் கைப்பற்றிய பெண்ணின் உடலை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதில் ஆற்றில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மல்லிகெவுடையது அல்ல என தெரியவந்தது. இதனையடுத்து குருபர சுரேஷ் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இவ்வழக்கில் திடீர் திருப்பமாக குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை மடிகேரியில் உள்ள ஒரு உணவகத்தில் பார்த்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து, போலீஸாருக்கு ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார். இருப்பினும் போலீஸார் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த நேற்று முன்தினம் (ஏப்.04) இவ்வழக்கு மைசூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குருபர சுரேஷ் சார்பில், கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட மல்லிகெவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது காணாமல் போன மல்லிகெ தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி குருராஜ் சோமக்களவர், ”இவ்வழக்கை விசாரித்த போலீஸார் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர். போலீஸாரின் தவறுகளை எளிதாக கடந்துவிட முடியாது. இந்த வழக்கில் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும் 17-ம் தேதிக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாது மணல் முறைகேடு வழக்கு: 15 இடங்களில் சிபிஐ சோதனை

பட மூலாதாரம், Getty Images
தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக, நெல்லை, சென்னையில் குவாரி உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டதாக, இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வி.வி. மினரல்ஸ் நிறுனத்துக்கு சொந்தமாக தாதுமணல் ஆலைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர். அதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கும் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். திசையன்விளை கீரைக்காரன்தட்டு பகுதியில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல, அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் செயல்பட்டு வரும் வி.வி. மினரல்ஸ் அலுவலகத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், எழும்பூரில் உள்ள வி.வி. மினரல்ஸ் தொடர்புடைய மற்றொரு அலுவலகம், எழும்பூர் தமிழ் சாலையில் வசித்து வரும் ஆடிட்டர் ஹரி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு; மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தினத்தந்தி இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், “2024ம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி, இமாச்சலபிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 1,280.35 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, பிகாருக்கு ரூ. 588.73 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 136.22 கோடி, புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் 20,264.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது” என அச்செய்தி கூறுகிறது.
விசாரணைக் கைதி மரணம்: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்ததாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்தவா் உப்பளத் தொழிலாளி வின்சென்ட் (36). அவரது நண்பா்கள் மரியதாஸ் (34), முத்து (30). இவா்கள் 3 பேரையும் ஒரு வழக்கு விசாரணைக்காக தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் காவல் நிலையத்துக்கு கடந்த 1999ஆம் ஆண்டு அழைத்துச் சென்றனராம்.
அப்போது போலீஸார் தாக்கியதில் வின்சென்ட் உயிரிழந்ததாகவும், மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வின்சென்டின் மனைவி கிருஷ்ணம்மாள், தனது கணவரை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில், காவலா்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட, தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன், தற்போது தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயசேகரன், வீரபாகு, ஓய்வு பெற்ற காவலா்கள் ஜோசப்ராஜ், செல்லதுரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஓய்வு பெற்ற காவலர்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதம் – விக்ரம் மிஸ்ரி

பட மூலாதாரம், Narendra Modi | X
இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்ததாக வீரகேசரி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயம் குறித்து சனிக்கிழமை (5) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றமென பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயல்பட முடிகிறது.
எனவே இருநாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ளார். இருதலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படமாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU