SOURCE :- BBC NEWS

மரங்களுக்கு மறுவாழ்வு – கோவையில் சூழலைக் காக்க முயற்சி

6 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இந்திய பசுமை கட்டடக்குழு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழகத்திலுள்ள பெரிய நகரங்களில் பசுமைப்பரப்பு அதிகமுள்ள நகரமாக கோவை முதலிடம் பெற்றுள்ளது. ஒரு தனிநபருக்கான பசுமைப்பரப்பை கணக்கிடுகையில், தேசிய சராசரியின் அளவு 24.6 சதுர மீட்டர் என்ற அளவில் இருக்கும் நிலையில், கோவையின் அளவு 46.6 சதுர மீட்டராகவுள்ளது.

பசுமை, திறந்தவெளியிடங்கள், காற்று மாசு கட்டுப்பாடு, திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை என இதற்கு பல அளவீடுகள் வைக்கப்பட்டிருந்தாலும், கோவையின் பசுமைக்கு இங்குள்ள மரங்கள் முக்கியக் காரணமாகவுள்ளன. அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் என்ற வகையில், வளர்ச்சிப்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

புதிய புறவழிச்சாலைகள், சாலைகள் விரிவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கோவையில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிக்காக ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு இணையாக 10 மரங்களை நட வேண்டுமென்று நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும் அது பெரும்பாலும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதே சூழல் ஆர்வலர்களின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது.

அதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக அகற்ற வேண்டிய மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக அவற்றை மறுநடவு செய்யும் முயற்சி, கோவையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. சமீபகாலமாக சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட வேண்டிய மரங்களில் கூடுமானவரை பெருமளவு மரங்களை மறுநடவு செய்வதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தற்போது கோவை அருகேயுள்ள அன்னுாரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நடக்கும் சாலை விரிவாக்கத்தில் 262 மரங்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு மறுநடவு செய்யும் பணி துவங்கியுள்ளது.

மரங்களுக்கு மறுநடவு செய்யும் பணியில் தனி கவனம் செலுத்தி, அதையே தனது முழு நேரப்பணியாக செய்து வருகிறார் ‘கிரீன் கேர்’ அமைப்பின் நிர்வாகி சையது.

முழு விவரம் காணொளியில்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC