SOURCE :- INDIAN EXPRESS
தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை அடுத்து திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை அந்தக் கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படி, கோவிலில் பொங்கல் வைத்த பிறகு பிரசித்தி பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. எட்டு சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 800 காளைகளை அடக்க 500 காளையர்கள் அனுமதி பெற்று களத்தில் களமிறங்கி விளையாடினார்கள்.
காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், இரண்டாவது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட்டன. இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் காளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அதற்கு முன்னதாக வாடிவாசலில் இருந்து ஏற்கனவே சென்ற காளை மீது முட்டிக்கொண்டதில் தலையில் அடிபட்டு திடீரென மயங்கிய நிலையில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. மோதிய மற்றொரு காளைக்கு தொடையில் படுகாயம் அடைந்த நிலையில் அந்தக் காளை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளை இறந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS