SOURCE :- BBC NEWS

 பஸ்தார் காவல் துறைத் தலைவர் சுந்தர்ராஜ் பி

பட மூலாதாரம், Getty Images

சத்தீஸ்கரில் புதன்கிழமையன்று சிபிஐ மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜூ சத்தீஸ்கர் போலீசாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது உடலை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து தற்போது ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் யாருடைய உடல்களும் சனிக்கிழமை காலை வரை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

தெலங்கானாவின் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் விவேக்கின் தந்தை, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் நாராயண்பூர் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை காத்திருந்தார்.

ஆனால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

கேசவ் ராவ் என்கிற பசவராஜூவின் குடும்பத்தினர், சத்தீஸ்கர் அரசு அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க மறுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடலை ஒப்படைக்கக்கோரி நம்பல்லா கேசவ் ராவின் சகோதரரும், அவரது தாயாரும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இந்தநிலையில் கேசவ் ராவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு சத்தீஸ்கர் காவல்துறைக்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுபுறம், பசவராஜூவின் உடலை அவரது சொந்த மாவட்டமான ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு ஆந்திரப் பிரதேச காவல்துறை எச்சரித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இருப்பினும், மாவோயிஸ்ட் தலைவரின் உடலை ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சத்தீஸ்கர் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

“நிறுவப்பட்ட சட்ட நடைமுறையின்படி, ஒரு மோதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் உறுப்பினர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பஞ்சநாமா மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. சட்டப்பூர்வ செயல்முறை மற்றும் இறந்தவர்களின் உடலை உரிமை கோரும் நபர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்த பின்னரே, இறந்த உடல்கள் அவற்றை உரிமைகோருபவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று பஸ்டர் பகுதி காவல்துறை ஐ.ஜி பி. சுந்தர்ராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு கொல்லப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC

புதன்கிழமை, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த என்கவுன்டரில் சிபிஐ மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ் என்கிற பசவராஜூ மற்றும் 27 மாவோயிஸ்ட்களை கொன்றதாக போலீசார் கூறினர்.

பசவராஜூ கொல்லப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் இதை ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறிய சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், நம்பல்லா கேசவ் ராவை பிடிக்க தகவல் தருபவர்களுக்கு 3 கோடி 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

அவர் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில முதல்வர் தெரிவித்தார்.

அப்பகுதியில் பெய்த பலத்த மழைக்கு மத்தியில், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மாவட்ட தலைமையிடமாகிய நாராயண்பூருக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் சிலரின் பிரேத பரிசோதனை வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

இதற்கிடையில், நம்பல்லா கேசவ் ராவின் உடலை வாங்க சென்ற தங்களை சத்தீஸ்கர் காவல்துறையினர் திருப்பி அனுப்பியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

நம்பல்லா கேசவ் ராவின் மூத்த சகோதரர் திலேஷ்வர் ராவுக்கு 72 வயதாகிறது.

பிபிசியிடம் தொலைபேசியில் பேசிய அவர், “எனது தம்பிகளில் ஒருவரும் மற்ற உறவினர்களும் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரை அடைந்தனர், அங்கு அவர்கள் மோசமாக நடத்தப்பட்டனர், நம்பல்லா கேசவ் ராவின் உடல் யாருக்கும் கொடுக்கப்படாது என்று கூறப்பட்டது,” என தெரிவித்தார்.

இதன் பின்னர் பஸ்டர் காவல்துறை, குடும்ப உறுப்பினர்களை சத்தீஸ்கர் எல்லைக்கு வெளியே விட்டுவிட்டதாக திலேஷ்வர் ராவ் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய திலேஷ்வர் ராவ், “கடந்த 45 ஆண்டுகளாக நானோ, என் தாயாரோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ நம்பல்லா கேசவ் ராவை பார்த்ததில்லை. அவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இப்போது அவர் கொல்லப்பட்டதால், அவரைப் பார்க்கவோ அல்லது அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யவோ எங்களுக்கு உரிமை இல்லையா? என் வயதான தாய்க்கு தனது மகனை ஒரு முறை பார்த்து அவருக்கு இறுதி விடைபெற உரிமை இல்லையா?” என்றார்.

சடலத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் விவேக்கின் தந்தை

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

இதற்கிடையில், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளுடைய உடல்களின் பிரேத பரிசோதனை மாவட்ட தலைமையகமான நாராயண்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

ஆனால் எந்த மாவோயிஸ்ட்டின் உடலையும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதற்கிடையில், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் ஒருவரான உகேந்தர் என்ற விவேக்கின் தந்தையும், தாய் மாமாவும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து காலை முதல் இரவு வரை பிரேத பரிசோதனை கூடத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

காவல்துறை அளித்த தகவலின்படி, 30 வயதான உகேந்திரா என்கிற விவேக், மாவோயிஸ்ட் அமைப்பின் மக்கள் விடுதலை கொரில்லா படையின் ஏழாவது பிரிவில் உறுப்பினராக இருந்தார், மேலும் அவரை பிடிக்க தகவல் தருபவர்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

உகேந்திரா என்கிற விவேக்கின் குடும்ப உறுப்பினர்கள், அவரது உண்மையான பெயர் ராகேஷ் என்றும், அவர் 2016 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

விவேக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பிற சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்படும்.

தங்கள் மகன் இறந்த செய்தியை செய்தித்தாளில் படித்த பிறகு, அவரது தந்தை மற்றும் தாய் மாமா, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், வியாழக்கிழமை இரவு ஹனம்கொண்டாவில் உள்ள சிந்தகட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை நாராயண்பூரை அடைந்தனர்.

லாரி ஓட்டுநரான விவேக்கின் தந்தை பிபிசியிடம் கூறுகையில், “விவேக் படிப்பில் மிகவும் புத்திசாலி. பட்டப்படிப்பு வரை படித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு, முதுகலைப் பட்டம் பெறப் போவதாகக் கூறி அங்கிருந்து ஹைதராபாத் சென்றார். பின்னர் அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்தது தெரியவந்தது. 2016 முதல் நாங்கள் அவருடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை” என்றார்.

விவேக் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்த பிறகு, அவரது மூத்த சகோதரர் ரஞ்சித்தும் தனது முதுகலை படிப்பை விட்டுவிட்டதாகவும், நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இப்போது ஆட்டோ ஓட்டுவதாகவும் விவேக்கின் தந்தை கூறினார்.

விவேக்கின் உடலை வாங்க வந்த அவரது தாய் மாமா சரயா, ஆயுதத்தால் எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படாது என்று கூறினார்.

ஆனால், ”மத்திய அரசு எதிரி நாட்டுடன் பேச முடியும் போது, ​​ஏன் அது தனது சொந்த நாட்டு மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

“மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. மாவோயிசத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்றால், அரசாங்கம் தனது மக்களுடன் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்கிறார் விவேக்கின் தாய் மாமா.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU