SOURCE :- BBC NEWS

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 21 ஏப்ரல் 2025, 01:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தை ரோஹித் விளாச, டி20 ஸ்பெஷலிஸ்டான சூர்யகுமாரும் வழக்கமான அதிரடியைக் காட்டியதால் மும்பை அணி சிரமமின்றி வெற்றி இலக்கை எட்டியது. நட்சத்திரங்கள் சரியான நேரத்தில் எழுச்சி பெற்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. அறிமுக வீரர் களத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட பெரிய நட்சத்திரங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிஎஸ்கே அணியின் சோகம். சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி என்ன சொன்னார்?

சிஎஸ்கே மந்தமான தொடக்கம்

சிஎஸ்கே அணி வீரர் டேவான் கான்வேயின் தந்தை காலமாகிவிட்டதால் நேற்று சிஎஸ்கே வீரர்கள் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடினர். கான்வே இல்லாத நிலையில் ரவீந்திரா, ஷேக் ரஸீத் களமிறங்கினர். அஸ்வனிகுமார் ஓவரில் ரவீந்திரா விரைவிலேயே விக்கெட்டை இழந்தார். 3.1 ஓவர்களி்ல் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டை இழக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. அனுபவம் இல்லாத தொடக்க வீரர்களால் மும்பையின் பும்ரா, போல்ட் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது.

17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி, அதிரடியாக பேட் செய்தார். ஆயுஷ் மாத்ரே களத்துக்கு வந்தபின்புதான் சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தன. அதன் பின்னரே சிஎஸ்கே ஸ்கோர்போர்டில் ரன்கள் ஓடின. பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 48 ரன்களைச் சேர்த்தது சிஎஸ்கே அணி.

ஆயுஷ்மாத்ரே, 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் தீபக் சஹர் ஓவரில் சான்ட்னரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரசீத் 12 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவை மீட்ட ஜடேஜா, துபே கூட்டணி

4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். சான்ட்னர் பந்துவீச்சை அதி எச்சரிக்கையாக கையாண்ட துபே பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. இதனால் சான்ட்னர் 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். துபேயும், ஜடேஜாவும் நீண்டநேரம் பெரிய ஷாட்களுக்குச் செல்லாமல் இருந்தனர். 7வது ஓவர் முதல் 12வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை

டிரன்ட் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். துபே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பும்ரா ஸ்லோவர் பால் பந்துவீச்சில் துபே 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து களமிறங்கிய தோனி 4 ரன்னில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். டெத் ஓவர்களை பும்ரா, சான்ட்னர் வீசி சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். சான்ட்னர் 18வது ஓவரை வீசி ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. ஜடேஜா 34 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

மும்பையின் ‘ராஜா ரோஹித்’

தி மும்பை சா ராஜா என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை நேற்று விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் தீர்க்கமாக, பொறுமையாக, எந்த தவறையும் பேட்டிங்கில் செய்யாமல் அற்புதமாக பேட் செய்தார். இதபோன்று ரோஹித் நிதானமாகத் தொடங்கி, அதிரடியாக ஆடியது அரிதானது. கலீல் அகமது பந்துவீச்சில் ரோஹித் லெக்சைடில் அடித்த இரு “பிக்அப் ஷாட்” சிக்ஸர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியது.

பதிராணா பந்துவீச்சை ரோஹித் கசக்கிப் பிழிந்துவிட்டார். நூர் அகமது ஓவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிஎஸ்கே இளம் வீரர்கள் நேற்று உணர்ந்திருப்பர்.

ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது. ஆனால் நேற்று பிரமிப்பூட்டும் ஷாட்களை அடித்த ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதம் விளாசி, 45 பந்துகளில் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் கணக்கில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 9-வது அரைசதமாகும். ஒட்டுமொத்தத்தில் 44வது ஐபிஎல் அரைசதமாகும்.

ரோஹித்துக்கு துணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 30 பந்துகளில் 68 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சென்னையை வதம் செய்த மும்பை

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிஎஸ்கே அணியை முற்றிலுமாக ஆதிக்கம் செய்தது என்று கூற வேண்டும். பந்துவீச்சில் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை மட்டுமே துபே, ஜடேஜா அடித்தனர்.

பும்ரா, சான்ட்னர் ஓவர்கள் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தன. மும்பை வான்கடே மைதானத்தில் இதுபோன்ற 176 ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர் கிடையாது. இன்னும் கூடுதலாக 30 ரன்களை சிஎஸ்கே சேர்த்திருந்தால் சற்று போராடியிருக்கலாம். ஆனால், இந்த ஸ்கோரை வைத்து வலிமையான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் மும்பை அணியை சுருட்டுவது சாத்தியமில்லை.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தெறித்து ஓடவிட்டனர். அதிலும் ரோஹித் சர்மா லெக் சைடில் அடித்த சில ஷாட்கள் மின்னல் வேக ஃபேவரேட் சிக்ஸர்களாக இருந்தன. கலீல் அகமது ஓவரில் விளாசிய இரு சிக்ஸர்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. இருவரையும் பிரிக்க தோனியும் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும், கடைசி வரை பலனில்லை. பதிரணா, நூர் அகமது இருவரையும் வைத்துதான் நடுப்பகுதி ஓவர்களை சிஎஸ்கே சமாளித்து வந்தது. ஆனால், நேற்று இருவரின் பந்துவீச்சையும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் விளாசித் தள்ளினர்.

அதிலும் ஜடேஜா மீது சூர்யகுமாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ஜடேஜா ஓவரை குறிவைத்து சூர்யகுமார் ஸ்வீப் ஷாட், காலை மடக்கிக்கொண்டு லெக் சைடில் சிக்ஸர், பவுண்டரி என துவைத்து எடுத்துவிட்டார். பதிராணா 2 ஓவர்கள் வீசிய நிலையில், 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 34 ரன்களை ரோஹித், சூர்யா விளாசித் தள்ளினா்.

ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணியை மும்பை அணி தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் ஆதிக்கம் செய்தது என்றுதான் கூற முடியும்.

சென்னை vs மும்பை

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேயின் ஆறுதல் இவர்கள்தான்

சிஎஸ்கே அணியின் ஆறுதலாக நேற்று இருவர் மட்டுமே இருந்தனர். ஒன்று இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின். சிஎஸ்கே அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து விளாசிய ரோஹித், சூர்யாவால் அஸ்வின் பந்துவீச்சை பெரிதாக அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 ரன்ரேட்டில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

2வது நபர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயின் அதிரடியான பேட்டிங். இவர் போன்ற இளம் வீரரை ஏன் சிஎஸ்கே பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது. அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார், ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை பிடித்து பவுண்டரி கோட்டில் கால் சென்றுவிடும் சூழலில் பந்தை தடுத்து தட்டிவிட்டு சிக்ஸர் செல்வதைத் தடுத்தார். பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மாத்ரே ஆறுதல். இருவரைத் தவிர சிஎஸ்கே அணி வேறு எதிலும் ஆறுதல் பட முடியாது.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே மோசமான செயல்பாடு

பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. நடுப்பகுதி ஓவர்களில் பதிராணா, நூர்முகமது இருவரையும் வைத்து எதிரணிகளை மிரட்டிய நிலையில் இருவரின் பந்துவீச்சையும் ரோஹித், ஸ்கை நொறுக்கினர்.

மும்பை அணியின் ஒரு விக்கெட்டைத் தவிர்த்து அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத நிலையில்தான் பந்துவீச்சு பலவீனமாக இருந்துள்ளது. ரோஹித், சூர்யா இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க சிறிதுகூட இடம் அளிக்கவில்லை. ஜடேஜா, பதிராணா, நூர் முகமது, கலீல் அகமது, ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித், ஸ்கை இருவரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர்.

ஜடேஜா பந்துவீச்சில் இதற்கு முன் 4 முறை ஆட்டமிழந்துள்ள சூர்யகுமார் யாதவ் நேற்று ஜடேஜா ஓவரை குறிவைத்து அடித்தார். ஜடேஜா ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்ஸில் சிக்ஸர் அடித்து, ஜடேஜா ஓவரில் முதல்முறையாக ஸ்கை சிக்ஸர் விளாசினார். சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் மட்டும் நேற்று 35 ரன்கள் சேர்த்தார்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவை ஆளும் மும்பை

கடந்த 2022ம் ஆண்டுக்குப்பின் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணியை முதல்முறையாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை. அப்போது நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லை. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3வது முறையாக மும்பை அணிவீழ்த்தியது. இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி, 2020-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை நசுக்கியது. இப்போது 3வது முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வாகை சூடியுள்ளது. சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3 முறை வீழ்த்திய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் வேறு எந்த அணியும் இல்லை. சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை 100 பந்துகளுக்குள் சேஸ் செய்து வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான்.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தொடர் 3வது வெற்றியாகும். இதன் மூலம் மும்பை அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், நிகரரன்ரேட்டில் ஆர்சிபிக்கு இணையாக 0.483 என இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை அணி பெற்றால் நிகர ரன் ரேட்டில் 2வது இடம் அல்லது 3வது இடத்துக்கு முன்னேறிவிடும்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி கூறியது என்ன?

சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்குப் பின் கூறுகையில் ” நாங்கள் டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோரையே சேர்த்தோம். 2வது பாதியில் பனியின் தாக்கம் இருந்ததும் பந்துவீச்சில் தொய்வடைய காரணம். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளர் பும்ரா, டெத்பந்துவீச்சை மும்பை அணி தொடக்கத்திலேயே கொண்டு வந்தால் எங்களால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் அதிக ரன்களும் அடிக்க முடியவில்லை. ஆயுஷ் மாத்ரே சிறப்பாக பேட் செய்தார்.

மும்பை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர். நாங்கள் இந்தத் தோல்வியை உணர்ந்து ஆலோசிக்க வேண்டும். இந்த தொடரில் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் நாங்கள் நல்ல கிரி்க்கெட்டை விளையாடினோம், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் சரியான ஃபார்மில் கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது சரியான ஃபார்மில் இருக்கிறோமா என்பது அவசியம் ஆய்வுசெய்யப்பட வேண்டியது, இன்னும் அதிகமான ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். சில கேட்சுகள்தான் ஆட்டத்தை மாற்றும், பீல்டிங்கில் உள்ள குறைகளையும் களைய வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சரியான வீரர்கள் கலவையுடன் அடுத்த சீசனில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்தார்.

வெளியேறுகிறதா சிஎஸ்கே?

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

அதேசமயம், சிஎஸ்கே அணி சந்தித்த 6வது தோல்வியாகும். 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே 2 வெற்றி, 6 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.392 என இருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு மீதமிருக்கும் நிலையில் அனைத்திலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

ஒருவேளை 16 புள்ளிகளை சிஎஸ்கே அணி பெற்றாலும் அது ப்ளே ஆஃப் செல்ல தகுதியாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான். இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs குஜராத்

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

நாள் – ஏப்ரல் 25

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

நாள் – ஏப்ரல் 23

இடம் – ஹைதராபாத்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் – ஏப்ரல் 24

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை) 333 ரன்கள்(8 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU