SOURCE :- BBC NEWS

சென்னை உயர்நீதிமன்றம், எலிஹு யேல்

பட மூலாதாரம், Getty Images/BBC

சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லறையை அகற்றுவதற்கு அனுமதியளித்து ஏப்ரல் 30 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹு யேலின் (Elihu Yale) மகனான டேவிட் யேல், அவரது நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறையை அகற்றுவதற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லறையை இடமாற்றம் செய்வதற்கு இந்திய தொல்லியல் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யார் இந்த எலிஹு யேல்? சென்னையில் அடிமை வர்த்தகம் செய்த அவரது மூன்று வயது மகன் மற்றும் நண்பரின் கல்லறையை அகற்றுவதை தொல்லியல் கழகம் எதிர்ப்பது ஏன்?

சென்னை பாரிமுனையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி (தற்போது டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி) செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்தக் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பழைய சட்டக் கல்லூரி கட்டடத்தையும் அதன் வளாகத்தையும் நீதிமன்றப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்லூரி அமைந்திருந்த வளாகத்தின் உள்பகுதியில் கல்லறை ஒன்று அமைந்துள்ளது. இவை கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் ஆளுநராக (1687-1692) பதவி வகித்த எலிஹு யேல் என்பவர் தொடர்பானது.

யேலின் நண்பர் ஜோசப் ஹைன்மர் (Joseph Hynmer) 1680ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜோசப்பின் மனைவி கேத்தரின் எல்ஃபோர்டை (Catherine Elford) யேல் மணந்தார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஜக்கா டேவிட் யேல் (Jacca David Yale) என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தனது மூன்று வயதில் உயிரிழந்தது. அந்தக் குழந்தையும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் வாதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜோசப் ஹைன்மர், ஜக்கா டேவிட் யேல் ஆகியோரை அருகருகே அடக்கம் செய்திருந்தாலும் இவை ஒரே கல்லறையாகக் கட்டப்பட்டுள்ளது.

பழங்கால நினைவுச் சின்னங்கள் சட்டம் 1904 பிரிவு 3(1)ன்படி பாதுகாக்கப்பட்ட கல்லறையாக இதை அறிவித்து, கடந்த 1921ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் பதிவாகியுள்ளது. கல்லறை அமைக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது.

கல்லறையை அகற்றுவதற்கு எதிர்ப்பு ஏன்?

கல்லறை, சென்னை உயர்நீதிமன்றம்

கல்லறையின் மேற்குப் பகுதியில் பழைய சட்டக் கல்லூரி வளாகத்தை ஒட்டி மெட்ரோ ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. “நினைவுச் சின்னமாக உள்ளதால், கல்லறையில் இருந்து 100 மீட்டருக்கு எந்தக் கட்டடங்களும் கட்டக்கூடாது என்பது விதி. இதனால் வளர்ச்சிப் பணிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் பி.மனோகரன்.

ஆங்கிலேயர் கால கல்லறையை நினைவுச் சின்ன பட்டியலில் இருந்து நீக்கி, இடமாற்றம் செய்து வைக்கக் கோரி, 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், இந்தக் கோரிக்கையை இந்திய தொல்லியல் கழகம் ஏற்கவில்லை. நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், “17ஆம் நூற்றாண்டில் இவ்விரு கல்லறைகளும் கட்டப்பட்டன. தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் சட்டத்தின்படி இவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை” என தொல்லியல் கழகம் தெரிவித்தது.

இந்த வழக்கில் 2023ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, “ஓர் இடத்தைp புராதன சின்னம் அல்லது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இவ்விரு கல்லறைகளுக்கும் வரலாற்று முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நான்கு வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்றுமாறு இந்திய தொல்லியல் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் கழகம் மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதிகள் எம்.சுந்தர், என்.சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வந்தது.

1921ஆம் ஆண்டு அறிவிப்பில் என்ன பிழை?

சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கின் விசாரணையில், இந்திய தொல்லியல் கழகத்தால் தாக்கல் செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் தொடர்பான அறிவிப்பில் உள்ள சில தகவல்களை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

கடந்த 1921ஆம் ஆண்டு மதராஸ் ஆளுநர் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட பழங்கால நினைவுச் சின்னங்கள் சட்டம் 1904 பிரிவு 3(1)ன்படி சென்னையில் ஏழு சின்னங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

இதில் நான்காவது இடத்தில், எலிஹு யேல், ஜோசப் ஹைன்மர் ஆகியோரின் கல்லறைகள் குறித்துப் பேசுகிறது. குறிப்பாக, சென்னை ஜார்ஜ் டவுனில் எலிஹு யேல், அவரது நண்பர் ஜோசப் ஹைன்மைர் ஆகியோரின் கல்லறைகள் வடகிழக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதியை நோக்கி அமைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

யேலின் மூன்று வயது மகன் மற்றும் அவரது நண்பரின் கல்லறை மட்டுமே அங்கு உள்ளது. ஆனால், எலிஹு யேல் கல்லறை இருப்பதாக 1921ஆம் ஆண்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

கடந்த 1692ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண ஆளுநராகப் பணியாற்றிய யேல், 1699ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று சிறிது காலத்துக்குப் பிறகு இறந்துவிட்டார். இந்த அறிவிப்பில் பிழை உள்ளதை இந்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞரும் ஒப்புக் கொண்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

“பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் யேல் அடக்கம் செய்யப்படவில்லை என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. குறிப்பாக அவர் இந்தியாவில் அடக்கம் செய்யப்படவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, “தொல்பொருள் அல்லது கலை ஆர்வத்தை (artistic interest) நிரூபிக்கும் எதுவும் அங்கு இருப்பதற்கான ஆதாரத்தை இந்திய தொல்லியல் கழகம் சமர்ப்பிக்கவில்லை” எனக் கூறி கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.

அதோடு, “கடந்த 1921ஆம் ஆண்டு நினைவுச் சின்னங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, 104 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பிழையைத் திருத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

கல்லறையைப் பாதுகாக்கும் முனைப்போடு இருக்கும் தொல்லியல் துறை

எலிஹு யேல், யேல் பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Getty Images

“அமெரிக்காவில் உள்ள கனடிக்டிகட் கல்லூரிக்கு (Connecticut College) யேல் பங்களித்தார் என்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால், இந்தியாவுக்கு அவர் சேவை செய்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை” என உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, “கிழக்கிந்திய கம்பெனிக்காக மசாலா, மஸ்லின் துணி, பட்டு மற்றும் தங்கம் வர்த்தகத்தில் யேல் ஈடுபட்டார். அதுதவிர, நீதிமன்ற வளாகத்தில் கல்லறை இருப்பதை நியாயப்படுத்துவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை” என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 2004ஆம் ஆண்டு தமிழ் ஆய்வுத்துறை நிறுவப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் கழகம் குறிப்பிட்டது.

“கல்லறைகளை நீக்கக்கூடாது என்பதற்காக தமிழ் இருக்கை உள்ளதை இந்திய தொல்லியல் கழகம் சுட்டிக்காட்டியது. வளாகத்தில் குழந்தையின் கல்லறை மட்டுமே உள்ளது. இதுவே யேலின் கல்லறையாக இருந்திருந்தால் இந்த வாதம் சரியாக இருந்திருக்கும்” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் பி.மனோகரன். வழக்கின் முடிவில் தொல்லியல் கழகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளதால், இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே எதிர்கொள்ள இருப்பதாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் கழகத்தின் சென்னைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்திய அரசின் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டம் 1958இன்படி, இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 100 ஆண்டுகளைக் கடந்து வரலாற்று முக்கியத்துவம் கொண்டிருந்தால் அவை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படும்” என்றார்.

“நீதிமன்ற வளாகத்தில் உள்ள கல்லறைகள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நூறு ஆண்டுகளைத் தாண்டிய கட்டமைப்பாக இருப்பதால் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

“நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒன்றை நீக்க வேண்டுமெனில் கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இதேபோல், பிற நினைவுச் சின்னங்களை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அது சிக்கலைக் கொடுக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

யார் இந்த எலிஹு யேல்?

எலிஹு யேல்

பட மூலாதாரம், Getty Images

பாஸ்டனில் 1649ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த எலிஹு யேல், தனது மூன்று வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். 1672ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராக (Clerk) பணியில் சேர்ந்தார்.

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அவர் பணியமர்த்தப்பட்டார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பதவிகளை யேல் வகித்துள்ளார்.

கடந்த 1687ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 1692 வரை அவர் பதவியில் இருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

கிழக்கிந்திய கம்பெனியின் நிதியை தனியாருக்குப் பயன்படுத்தியது, கடமையைப் புறக்கணித்தது ஆகியவை யேல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருந்தன.

கடந்த 1699ஆம் ஆண்டில் தனது 51 வயதில் அவர் இங்கிலாந்து திரும்பியபோது, மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். இங்கிலாந்தின் கிரேட் ஆர்மன்ட் தெருவில் உள்ள குயின்ஸ் சதுக்கத்தில் பெரிய வீடு ஒன்றைக் கட்டி, கலைப் பொருட்களால் அவற்றை நிரப்பியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மதிப்புமிக்க பொருட்களைச் சேகரிப்பது, தொண்டு காரியங்களுக்கு நிதி உதவி செய்வது ஆகியவற்றுக்காக அறியப்பட்ட யேல், இந்தியாவில் அடிமை வர்த்தகத்தை மேற்கொண்ட காலனியவாதியாகப் பார்க்கப்படுகிறார்.

இதுதொடர்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்களின் நன்கொடையாளர்களுக்கும் அடிமை வர்த்தகத்துக்கும் இடையில் இருந்த தொடர்புக்காக யேல் பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரியது.

எலிஹு யேல், யேல் பல்களைக்கழகம்

பட மூலாதாரம், David W Blight

சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யேலின் அடிமை வணிகம் தொடர்பாகத் தீவிர ஆய்வுகளை நடத்தி மன்னிப்பு கேட்கும் முடிவை யேல் பல்கலைக்கழகம் எடுத்தது.

டேவிட் பிளைட் (David Blight) என்பவர் தொகுத்த சுமார் 448 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், அடிமை வர்த்தகத்தில் யேல் எந்தளவுக்குப் பணம் ஈட்டினார் என்பதை விவரிக்கிறது.

யேல் பல்கலைக்கழக கட்டடங்களை எழுப்புவதில் அடிமைகளின் பங்கு, யேலுக்கு பரிசுகளை வழங்கிய தலைவர்களை அடிமைகளின் உழைப்பு வளப்படுத்தியது ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநராக இருந்தபோது கிழக்கிந்திய கம்பெனிக்காக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அவர்களின் கணக்கு, விற்பனை ஆகியவற்றை யேல் கவனித்து வந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தீவுகள் மற்றும் கடற்கரைகளில் அடிமை வர்த்தகம் முக்கியமானதாக இருந்துள்ளது.

கடந்த 1701ஆம் ஆண்டு நியூ ஹேவனில் நிறுவப்பட்ட யேல் பல்கலைக் கழகம், உலகின் மூன்றாவது பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் பலரும் இங்கு படித்துள்ளனர்.

கடந்த 1713ஆம் ஆண்டு முதல் இறை தொடர்பான புத்தகங்கள் (Theology), இலக்கியம், மருத்துவம், வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள், முதலாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படம், மதிப்புமிக்க பரிசுகளை கனெக்டிகட் கல்லூரிக்கு (யேல் பல்கலைக்கழகம்) யேல் அனுப்பியதாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

இவற்றை விற்றுத் திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவாக ‘யேல் கல்லூரி’ எனப் பெயரிடப்பட்டது. 1721ஆம் ஆண்டு யேல் இறந்தபோது, ‘சேவைக்குப் பெயர் பெற்ற மனிதர்’ என இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின. ஆனால், மெட்ராஸின் ஆளுநராக இருந்த காலத்தில் அடிமை வர்த்தகம் செய்த கொடுமைக்காரராகவும் பேராசைக்காரராகவும் அவர் அறியப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU