SOURCE :- BBC NEWS

இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், தினத்தந்தி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்றைய ( 16/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பிரபந்தம் பாடுவதில் மீண்டும் மோதல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வீதி உலாவின் போது வடகலை, தென் கலை பிரிவினர் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் ஐந்தாம் நாளில் மோகினி அவதாரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார்.

அப்போது வைகுண்ட பெருமாள் சன்னதி தெரு அருகில் இருந்து வட கலை பிரிவினரும், தென் கலை பிரிவினரும் பெருமாளின் புகழ் பாடும் பிரபந்த பாடலை பாட தொடங்கும் முன் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் சாலையில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

“இருப்பினும், போலீஸாரும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும் வடகலை பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தென் கலை பிரிவினர் குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு கலைந்து சென்றனர்” என்று குறிப்பிடுகிறது அந்த செய்தி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

டிரம்ப் குறித்த பதிவை நீக்கிய கங்கனா ரனாவத்

இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த பதிவை கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளதாக நடிகையும் நாடாளுமன்ற பாஜக உறுப்பினருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்கக் கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்

“நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன்.” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

கங்கனா நீக்கிய அந்த பதிவில், “இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால், உலகளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோதி உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோதி ஆட்சி அமைத்துள்ளார்.

டிரம்ப் ‘ஆல்ஃபா மேல்’ (Alpha male – ஆதிக்கம் செலுத்தும் , உறுதியான ஆண்) ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ‘ஆல்ஃபா மேல்’களின் தந்தை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று பதிவிட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாகிஸ்தான் பயங்கரவாதத்துதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு’ – ஜெய்சங்கர்

இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தானுடன் (‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை’ திரும்பப் பெறுதல்) விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவாக கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அரசாங்கத்தின் நிலைப்பாடு மிக, மிக தெளிவாக உள்ளது,” என்று ஹோண்டுராஸ் தூதரகத்தை திறந்து வைத்து ஊடகங்களிடம் கூறினார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி கேட்டதற்கு, இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்றும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம்பத்தகுந்த வகையில் நிறுத்தப்படும் வரை இது தொடரும் என்றும் அவர் கூறியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

“உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் ஐ.டபிள்யூ.டி கிழக்கு நதிகளை (பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ்) இந்தியாவுக்கும், மேற்கு நதிகளை (சிந்து, செனாப் மற்றும் ஜீலம்) பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நல்லெண்ணம் மற்றும் நட்பின் உணர்வில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் முடிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், “பாகிஸ்தான் பல பத்தாண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்த கொள்கைகளை நிறுத்தி வைத்துள்ளது” என்று அமைச்சகம் கூறியது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் தீ – 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் தீ – 5 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், ANI

உத்தர பிரதேச தலைநகர் லக்னௌவில் பிஹாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர் என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பேருந்து அவுட்டர் ரிங் ரோட்டில் கிசான் பாதை வழியாக மோகன்லால்கஞ்ச் அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது.

“தீ விபத்து ஏற்பட்டவுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வெளியே குதித்து தப்பி சென்றனர். ஓட்டுநர் அனைவரையும் எழுப்பியிருந்தால், யாரும் இறந்திருக்க மாட்டார்கள். பேருந்து புகையால் நிரம்பிய போதுதான் உணர்ந்ததாகவும், பின்னர் முன்பக்கத்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியே குதித்ததாகவும், ஆனால் பின்னால் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டதாகவும் நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.” என்கிறது அச்செய்தி.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பேருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து வெளியேற்றப்பட்டனர். பேருந்தில் சுமார் 80 பயணிகள் அமர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்பு படையினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐந்து பயணிகள் உயிரிழந்தனர்” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அலுவலக சொகுசு வாகனங்கள் ஏலம்

இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் வியாழக்கிழமை ஏலமிடப்பட்டன என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமுக்காக வழங்கப்பட்டிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

அதன்படி, பி.எம்.டபிள்யூ மோட்டார் வாகனம் 01, ஃபோர்ட் எவரெஸ்ட் ரக வாகனம் 02, ஹுண்டாய் டெராகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் டிஸ்கவரி வாகனங்கள் 02, மிட்சுபிஷி மாண்டெரோ ஜீப் 01, நிசான் பேட்ரோல் ஜீப் 03, நிசான் வகை கார்கள் 02, போர்ஷ் கயென் ரக வாகனம் 01, சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் 05, லேண்ட்க்ரூய்சர் சஹாரா வகை ஜீப் 01, V 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த வாகனங்களை கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாயை மிஞ்சிய வருமானம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில் 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU