SOURCE :- BBC NEWS

ஹுர்ரெம் சுல்தானின் இந்த ஓவியம் 16ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்க பகுதியைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது. 2021-இல் லண்டனில் உள்ள சோதேபி ஏல விடுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Michael Bowles/Getty Images

ஓட்டோமான் பேரரசின் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மனியும், அந்தப் பேரரசின் சக்தி வாய்ந்த அரசரான சுலைமானின் மனைவியுமான ஹுர்ரெம் சுல்தான் வரலாற்றில் ஒரு புதிரான நபராகவே இருந்து வருகிறார்.

கடந்த 1558இல் மறைந்த அவர், அதற்கு நான்கு நூற்றாண்டுகள் கழித்தும் வரலாற்று ஆர்வலர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறார். அவருடைய மரபு தொடர்ந்து எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு, மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.

ரோக்செலானா என்றும் அறியப்படும் ஹுர்ரெம் சுல்தான் வெறும் துணைவியாகவோ அல்லது மன்னருக்கு துணையாகவோ மட்டும் இருக்கவில்லை. அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து ஏகாதிபத்திய செல்வாக்கின் உச்சத்தை அடைந்த அவருடைய பயணம் அசாத்தியமானது. இதன் மூலம் 16ஆம் நூற்றாண்டு ஓட்டோமான் பேரரசின் அரசியலை மாற்றியமைத்த செல்வாக்கு மிகவும் நபராகவும் பரிணமித்தார்.

ஓட்டோமான் பேரரசு, 14ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தியது. வரலாற்றின் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் நிலைத்த பேரரசாக இது பார்க்கப்படுகிறது.

வரலாற்றாசியர்களின் கூற்றுப்படி, அரச பெண்கள் ஓட்டோமான் நிர்வாகத்தின் முன்பு எப்போதும் காணாத செல்வாக்கு செலுத்திய ‘பெண்களின் சுல்தானகம்’ எனும் காலம் ஹுர்ரெமின் எழுச்சியுடன் தான் தொடங்கியது.

சுல்தானின் அரண்மனையில் அவரது மனைவிகள், துணைவிகள், பெண் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண் சேவகர்கள் வசித்த தனித்த குடியிருப்பான ஓட்டோமான் ஹரேமில் இவர் வாழ்ந்த காலம் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நூற்றாண்டுகள் கழித்தும் அவர் பின்னணி பற்றிய புதிர்கள் தற்போது விவாதங்களைக் கிளப்புகின்றன. அவர் தற்கால யுக்ரேன் உள்ள பகுதியில் இருந்து வந்த சிறைவாசியா? ஒரு மதகுருவின் மகளா? அல்லது இன்னொரு கதையில் சொல்லப்படுவதைப் போல கொள்ளையர்களால் விரட்டிவிடப்பட்ட ஒரு இத்தாலிய சீமாட்டியா?

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

சிறைவாசத்தில் இருந்து அரண்மனை வரை

பல வரலாற்று ஆசிரியர்கள் ஹுர்ரெம் சுல்தான் 1500களின் தொடக்கத்தில் தற்கால யுக்ரேன், போலாந்து மற்றும் பெலாரூஸின் பகுதிகளை உள்ளடக்கிய வரலாற்றுப் பகுதியான ருத்தேனியாவில் பிறந்தவர் என நம்புகின்றனர்.

ஹுர்ரெமின் பிறப்புப் பெயர் பற்றி எந்த உறுதியான ஆவணமும் இல்லை. சில யுக்ரேனியர்கள் அவரை அலெக்ஸாண்ட்ரா லிசோவ்ஸ்கா அல்லது அனஸ்தேசியா எனக் குறிப்பிடுகையில், அவர் கிழக்கு ஐரோப்பாவில் லா ரோசா (சிவப்பு), ரோசன்னா (நேர்த்தியான ரோஜா), ரோக்சோலன் (ருத்தேனிய பெண்), ரோக்சானா, அல்லது ரோக்ஸலானா போன்ற பெயர்களால் அறியப்படலாம் என மற்றவர்கள் நம்புகின்றனர்.

எனினும், அதிகாரப்பூர்வ ஓட்டோமான் ஆவணங்கள் அவரை ஹசேகி ஹுர்ரெம் சுல்தான் எனக் குறிப்பிடுகின்றன. ‘ஹுர்ரெம்’ என்றால் பெர்சிய மொழியில் மகிழ்ச்சியான என்று அர்த்தம் மற்றும் ஹசேகி என்பது சுல்தானின் பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பவருக்கு வழங்கப்படும் கௌரவப் பெயராகும்.

Magnificent Century தொடரின் போஸ்டர்

பட மூலாதாரம், Tims Productions

“சில ஆதாரங்கள் ஹுர்ரெம் ஒரு வைதீகமான மதகுருவின் மகள் என்கின்றன. மற்றவை அவர் ஒரு உழவர் குடும்பத்தில் பிறந்ததாகக் கூறுகின்றன.

சில குறிப்புகள் அவர் தற்போது மேற்கு யுக்ரேனிலும் முன்பு போலிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த ரோஹட்டினில் இருந்து க்ரைமிய வழிப்பறி கொள்ளையர்களால் சிறையெடுக்கப்பட்டார் எனக் காட்டுகின்றன” என்கிறார் துருக்கியைச் சேர்ந்த பேராசிரியர் ஃபெரிடுன் எமெசென்.

பின்னர் அவர் அடிமையாக விற்கப்பட்டு, அவருடைய பதின்ம வயதில் ஓட்டோமான் பேரரசுக்கு அழைத்து வரப்பட்டு இளவரசர் சுலைமானின் தாய்க்குப் பரிசாக வழங்கப்பட்டதாக மற்றொரு துருக்கிய பேராசிரியரான ஜெய்னெப் டாரிம்.

Magnificent Century தொலைக்காட்சி தொடரின் ஹுர்ரெம் சுல்தான் கதாப்பாத்திரத்தை மெர்யம் உசர்லி என்கிற நடிகை ஏற்று நடித்திருந்தார்.

பட மூலாதாரம், Tims Productions

இந்த தம்பதியின் முதல் குழந்தையான இளவரசர் மெஹ்மத் பிறந்த வருடத்தை அடிப்படையாக வைத்து அதற்கு முந்தைய வருடமான 1520இல் இவர் ஹரெமில் இணைந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நூற்றாண்டு வழக்கத்தை உடைத்து பிற்காலத்தில் சுலைமன் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செயல் பேரரச மண்டலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஹுர்ரெமின் இடத்தை முன்பில்லாத அளவிற்கு உயர்த்தியது. இதற்கு முன்னர் எந்த ஓட்டோமான் சுல்தானும் ஒரு துணைவியை மணந்தது இல்லை.

அவருக்கு இத்தாலிய தொடர்பு இருந்ததா?

அவரது ருத்தேனிய தொடர்பு பற்றி ஒருமித்த கருத்து இருந்தபோதிலும் அவருடைய பின்புலம் பற்றிய மாற்று கதைகளும் இருக்கவே செய்கின்றன.

அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று ஆராய்ச்சியாளர் முனைவர் ரினால்டோ மர்மாராவிடம் இருந்து வருகிறது. சியேனாவில் உள்ள மர்சிக்லி குடும்பத்தைச் சேர்ந்த மார்கரிட்டா என்கிற பெயர் கொண்ட சீமாட்டிதான் ஹுர்ரெம் எனத் தெரிவிக்கும் கையெழுத்துப் பிரதிகளை தான் வாடிகன் ஆவணக் காப்பகத்தில் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார் அவர்.

வாடிகன் ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த ஆவணம் அவரின் குடும்பத்தை குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Rinaldo Marmara

இந்த ஆவணத்தின்படி அவரும் அவருடைய சகோதரரும் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு ஓட்டோமான் பேரரசில் அடிமையாக விற்கப்பட்டனர் என்கிறார் முனைவர் ரினால்டோ மர்மாரா.

மேலும் அவர் ஒருபடி மேலே சென்று அவருக்கு மறைக்கப்பட்ட அரசுத் தொடர்பு இருந்ததாகக் கூறுகிறார். அந்தக் கையெழுத்துப் பிரதிகள் அவரது வம்சத்தைச் சேர்ந்த நான்காம் சுல்தான் மெஹ்மதுவுக்கும் போப் எட்டாம் அலெக்சாண்டருக்கும் இருந்த உறவுமுறையை வெளிப்படுத்துகிறது. இது அவரின் ருத்தேனிய அடையாளத்தின் மீது சந்தேகத்தை எழுப்பி அவருக்கு ஒரு மறைக்கப்பட்ட அரச பரம்பரைத் தொடர்பு இருப்பதாகக் காட்டுகிறது என்கிறார் மர்மாரா.

எனினும் வரலாற்று ஆசிரியர்கள் இதை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். இந்தக் கூற்றின் உன்மைத்தன்மைக்கு இன்னும் அதிக ஆதாரங்கள் தேவை என எச்சரிக்கிறார் பேராசிரியர் டாரிம். அந்தக் காலகட்டத்தின் ராஜதந்திர விவகாரங்கள் மற்றும் அரச கிசுகிசுக்களின் நம்பத்தகுந்த ஆதாரமான வெனிஸின் தூதரக ஆவணங்களில் இதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“அப்படி எதேனும் இருந்திருந்தால், ஆவணங்கள் நமக்கு அதைச் சொல்லியிருக்கும். நமக்கு முன்னரே இதைப் பற்றித் தெரிந்திருக்கும்,” என்கிறார் டாரிம்.

பேராசிரியர் எமசென் இதே சந்தேகத்தை எதிரொலிக்கும் வேளையில் போலாந்தின் அரசு குடும்பத்துடன் அவர் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் இது முறையான ராஜாங்க உறவின் ஒரு பகுதியாக இருந்திருக்குமே தவிர அரச வழித்தோன்றலுக்கான ஆதாரமாக இருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

ரஷ்ய சூனியக்காரி

ஹுர்ரெம் சுல்தான் வெவ்வேறு ஆதாரங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார் என்பதைப் பொருத்து இந்தக் குழப்பம் அதிகரிக்கவே செய்கிறது.

ஓட்டோமான் காலத்து ஆவணங்களும் சில நேரங்களில் கவிதைகளும், அவரின் விமர்சகர்கள் பயன்படுத்திய இழிசொல்லான “ரஷ்ய சூனியக்காரி” என்கிற புனைப்பெயரையும் வைத்து அவரைக் குறிப்பிட்டுள்ளன.

ஓட்டோமான் அரியணைக்கு முதல் வாரிசும், இன்னொரு பெண் மூலம் சுலைமானுக்கு பிறந்த மூத்த மகனுமான இளவரசர் முஸ்தபாவின் மரண தண்டனைக்குப் பிறகுதான் அவரைக் குறிக்க இந்தப் பெயர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

தனது மகன்கள் அரியணை ஏறுவதற்கு வழி செய்ய இளவரசர் முஸ்தபாவின் வீழ்ச்சியை ஹுர்ரெம்தான் தூண்டிவிட்டதாக நம்பப்படுகிறது.

ஓட்டோமான் சூழலில் “ருஸ்” என்கிற பதம் ரஷ்யர்களை மட்டும் குறிப்பதில்லை, மாறாக அது தற்கால யுக்ரேன் மற்றும் பெலாரூஸை உள்ளடக்கிய வடக்குப் பகுதியில் இருந்து வரும் எவரையும் குறிக்கும் ஒரு நிலவியல் குறிப்பு என்று விளக்குகிறார் பேராசியர் எமசென்.

ஹுர்ரெம் சுல்தானின் உருவப்படம்

பட மூலாதாரம், Pictures From History/Universal Images Group

அந்தக் காலத்தைச் சேர்ந்த மேற்கத்திய யாத்திரிகர்களும் வெனிஸ் அதிகாரிகளும் ஹுர்ரெமை ரஷ்யர் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் இது அவருடைய நிலவியல் தோற்றத்தின் வெளிப்பாடுதானே அன்றி அவரது இனத்தின் வெளிப்பாடு அல்ல என அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

“அந்த நேரத்தில் தற்போதைய எல்லைகளைக் கொண்ட ரஷ்யா இல்லை. எனவே அந்தக் காலகட்டத்தை வைத்துப் பார்க்கையில் ரஷ்யர் என்பதன் மூலம் ரஷ்ய நிலப்பரப்பில் இருந்து வந்தவர் என்றே அர்த்தப்படுத்துகின்றது,” என்கிறார் பேராசிரியர் எமசென்.

பிபிசி யுக்ரேனியனை சேர்ந்த செய்தியாளர் விட்டாலி செர்வோனென்கோ கூறுகையில், “16ஆம் நூற்றாண்டில், போலாந்தில் யுக்ரேனிய மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ருஸ்கே மாகாணம் எனப் பெயரிடப்பட்டு இருந்தது. அது ரோஹட்டின் அதன் ஒரு பகுதியாக இருந்தது” என்றார்.

மேலும் அவர் அந்தக் காலத்தில் யுக்ரேனியர்கள் ‘ருசின்ஸ்’ என அழைக்கப்பட்டனர். ஆனால் இதற்கு ரஷ்யாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். சமீப வருடங்களில் ஹுர்ரெம் சுல்தானின் அடையாளம் புதுப்பிக்கப்பட்ட அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக அவர் ஒரு தேசிய அடையாளமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு யுக்ரேனில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவரது சொந்த ஊர் என ஊகிக்கப்படும் ரோஹட்டினில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக சிலைகள் உள்ளன. தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள நகரமான மேரியுபோலில் உள்ள மசூதி ஒன்று சுலைமானின் பெயர் அருகே அவருடைய பெயரையும் கொண்டுள்ளது.

கடந்த 2019இல் அன்காராவில் உள்ள யுக்ரேனிய தூதரகத்தின் கோரிக்கைக்கு இணங்க இஸ்தான்புலில் உள்ள சுலைமானியே மசூதி வளாகத்தில் உள்ள அவரது கல்லறையின் மீதுள்ள கல்வெட்டில் இருந்து அவரது “ரஷ்ய வம்சாவளி” பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டன.

தற்போது புதிப்பிக்கப்பட்ட கல்வெட்டில் அவரின் யுக்ரேனிய மரபு முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன புவிசார் அரசியல் சூழலிலும் அவரின் மரபு எவ்வாறு தொடர்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கொடை பணிகள்

ஹுர்ரெம் சுல்தானின் கல்லறை

ஹுர்ரெமின் செல்வாக்கு ஹரெமின் சுவர்களைக் கடந்தும் பரவி இருந்தது. ஆனால் அதை விடவும் வலுவானது அவருடைய கொடைப் பணிகள்தான்.

அவர் மசூதிகள், அன்னதான சமையற்கூடங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஓட்டோமான் பேரரசின் அங்கமாக இருந்த இஸ்தான்புல் மற்றும் ஜெருசலேமில் தொடங்கினார். இஸ்தான்புலில் உள்ள ஹசேகி மாவட்டம் இன்றும் அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

வரலாற்று ஆவணங்களின்படி, ஹுர்ரெம் சுல்தான் ஏப்ரல் 15, 1558 அன்று இஸ்தான்புலில் இயற்கைக் காரணங்களால் இறந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சுலைமானியே மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் சுல்தான் சுலைமானின் உத்தரவுப்படி அவரது சமாதி அமைந்திருக்கும் இடத்தில் கல்லறை கட்டப்பட்டது.

அவரின் இறப்பு ஓர் அசாத்தியமான வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் அவரைச் சுற்றியுள்ள கேள்விகளை முடிவுக்கு கொண்டு வரவில்லை.

ஒரு ருத்தேனிய சிறைவாசி, ஒரு இத்தாலிய சீமாட்டி அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அதிகாரம் வாய்ந்த பெண்மனி என என்னவாக இருந்தாலும் ஹுர்ரென் சுல்தான் ஓட்டோமான் மற்றும் உலக வரலாற்றில் மிகவும் வசீகரிக்கக்கூடிய, விவாதிக்கப்பட்ட நபராகவே இருக்கிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU