SOURCE :- BBC NEWS

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டுமென்று பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் உள்ள 14 தாலுகாக்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படுமென்று தமிழக அரசு உறுதியளித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திட்டம் துவக்கப்படவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால் “தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் கைவிடப்படவில்லை, அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு தனியாக நிதி தேவையில்லை” என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2.28 கோடி குடும்ப அட்டைகள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, “மாநிலம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 63 ஆயிரம் குடும்பதாரர்கள், தங்களுக்கு எந்தப் பொருட்களும் வேண்டாமென்று கூறி அதற்குரிய அட்டைகளைப் (No Commodity) பெற்றுள்ளனர்.
மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரம் குடும்பங்கள் சர்க்கரை முன்னுரிமை அட்டைகளைக் கொண்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.”
மேலும், “தமிழகத்தில் 2.28 கோடி குடும்ப அட்டைகளில் ஒரு கோடியே 14 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே, மத்திய அரசால் 20 கிலோ அரிசி பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதிலும் 2 பேர் இருக்கும் குடும்பங்களுக்கு மத்திய அரசு 12 கிலோ மட்டுமே தரும் நிலையில், மீதமுள்ள 8 கிலோ அரிசியும் மாநில அரசால் வழங்கப்படுவதாகவும், அது தவிர்த்து இருக்கும் 1.14 கோடி குடும்ப அட்டைகளுக்கு அரிசி உள்பட அனைத்தையும் மாநில அரசே வழங்குவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை
இவ்வாறு விநியோகிக்கப்படும் பொருட்களில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டுமென்பது தமிழக விவசாயிகளின், குறிப்பாக தென்னை விவசாயிகளின், ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. இதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தனித்தனியாகவும், ஒன்றிணைந்தும் தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்நிலையில் தற்போது, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, ‘100 நாட்கள் 100 ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம்’ என்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இதுவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டம் பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் சுரேஷ், ”எங்கள் கோரிக்கை ஒன்றுதான். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை மானிய விலையில் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர் 11 வரை 94 ரேஷன் கடைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம். பிப்ரவரி 6ஆம் தேதி 100வது ஆர்ப்பாட்டத்தை சென்னை தலைமைச் செயலகம் முன்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். அரசு இதை அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘நிதி ஒதுக்கப்பட்டும் திட்டம் கைவிடப்பட்டது’
இதேபோன்று, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கமும் (National Agriculturists Awareness Movement), இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், கோவையில் டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. அதில் முதல் தீர்மானமாக, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் 2 லிட்டர் வழங்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய இந்த அமைப்பின் மாநில தலைவர் பிரபு ராஜா, ”இந்தக் கோரிக்கையை முதல் முதலாக வலியுறுத்தி, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று 25 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது டெல்டா மாவட்டங்களில் சோதனை முறையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் 2023 ஆகஸ்ட் 17 அன்று தேனியில் போராட்டம் நடத்தினோம்” என்றார்.
”அதன் பிறகே கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும்” என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்ததாகக் கூறுகிறார் பிரபு ராஜா.
“அதற்காக ரூ.650 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மகளிர் ஊக்கத்தொகை திட்டத்திற்கு அந்த நிதி ஒதுக்கப்பட்டதால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதனால்தான் இப்போது 2 லிட்டர் தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்கிறார் அவர்.

அமைச்சரின் வாக்குறுதியும் விவசாய அமைப்புகளின் போராட்டமும்
பல்வேறு விவசாய அமைப்புகளும் தற்போது இதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு அமைச்சரின் அறிவிப்பு செயல்படுத்தப்படாததே காரணமென்று கூறப்படுகிறது.
கடந்த 2023 மே 7 அன்று கோவையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளின் பொருட்கள் கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 14 தாலுகாக்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும். அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, தமிழகம் முழுவதும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
அதற்குப் பின் இந்தத் திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை. இதுவரையிலும் அந்தத் திட்டம் எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தப்படவுமில்லை. இந்த நிலையில்தான் தேர்தலுக்கு முன்பாக அதைச் செய்ய வேண்டுமென்று பல்வேறு விவசாய அமைப்புகளும் வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளன.
ஆனால் “தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து.
பிபிசி தமிழிடம் பேசிய செல்லமுத்து, ”இந்த அரசின் பல அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவே உள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் சக்கரபாணியிடம் பேசியபோது எங்களிடமும் இதே வாக்குறுதியைக் கொடுத்தார். அதற்குப் பின் ஒன்றுமே நடக்கவில்லை” என்றார்.
மேலும் பேசிய செல்லமுத்து, ”தேங்காய்தான் மூலப்பொருள். தேங்காய் எண்ணெய் முடிவுப் பொருள். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத சூழலில் தேங்காய் எண்ணெயை மானிய விலையில் அரசு எடுத்துக் கொண்டால் அதனால் நிச்சயம் விவசாயிகள் பயனடைவர்.
தற்போது தேங்காய்க்கு அதிக விலை கிடைப்பது போல ஒரு தோற்றம் உள்ளது. ஆனால் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதலால் ஆயிரம் தேங்காய்கள் விளைந்த இடத்தில் ஐந்நூறுதான் விளைகிறது. விலையேற்றத்திற்கு இதுவே காரணம். இதனால் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கவில்லை” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தேங்காய் எண்ணெய் வழங்குவது பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
ஆனால் விவசாயிகள் கோருவதைப் போல பொது விநியோகத் திட்டத்தில் 2 லிட்டர் கொடுப்பதற்கு சாத்தியமே இல்லை என்று கூறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், “அப்படிக் கொடுத்தால் மானியமும் தர முடியாது; கட்டுப்படியாகக் கூடிய விலையிலும் மக்களுக்குத் தர முடியாது” என்கின்றனர்.
இதுகுறித்துப் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர், ”கடந்த 4 ஆண்டுகளாக பாமாயில் ஒரு லிட்டர் 105 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்பட்டு, மக்களுக்கு 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயை ஒரு லிட்டர் வாங்கினாலே மானியம் பல மடங்கு அதிகமாகிவிடும். அதனால் அரை லிட்டர் எண்ணெய் வாங்கினால் பாமாயிலைவிட சற்று அதிகமாக ரூ.100–120 வரை மானியமாகக் கொடுக்கலாம்” என்றார்.
அதன் காரணமாகவே சோதனை அடிப்படையில் 4 மாவட்டங்களில் துவங்கும் திட்டத்தில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது என்ற தகவலையும் அதிகாரிகள் பகிர்ந்தனர்.
ஆனால், “வெளிநாட்டு விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உள்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கினால் தென்னை விவசாயிகள் தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து மீள முடியும்” என்கிறார் பிரபுராஜா.
”தமிழகத்திலுள்ள இரண்டே கால் கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் வீதம் தேங்காய் எண்ணெய் கொடுத்தால், அதற்காக 250–300 கோடி வரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதனால் விவசாயிகளுக்கு நல்லவிலை கிடைக்கும்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், R.Sakkarapani/X
உணவுத்துறை அமைச்சர் கூறுவது என்ன?
இவை ஒருபுறமிருக்க, பொது விநியோகத் திட்டத்தில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில், அன்றாடம் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அதிகமாக இருப்பதால்தான் அந்த மாவட்டங்களைத் தேர்வு செய்ததாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் அதற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் பலரிடம் இருக்கிறது.
கடந்த ஆண்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 14 தாலுகாக்களை சேர்ந்த நியாய விலைக் கடைகளில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.
அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும்” என்றார். ஆனால் அதற்குப் பிறகு இந்தத் திட்டம் குறித்து எந்தத் தகவல்களும் அரசால் வெளியிடப்படவில்லை.

பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கும் திட்டம் தாமதமாகிறதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்வியை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது.
அதற்குப் பதிலளித்த அவர், ”திட்டம் கைவிடப்படவில்லை, பரிசீலனையில் உள்ளது. சில அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படுவதற்குத் தாமதமானது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் ஊக்கத் தொகை திட்டத்திற்குத் திருப்பிவிட்டதால்தான், இது இன்னும் தொடங்கப்படவில்லை என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, ”தனியாக இதற்கென்று நிதி ஒதுக்கத் தேவையில்லை. ஏற்கெனவே பாமாயிலுக்கு வழங்கும் மானியத்தை வழங்கப் போகிறோம். தேங்காய் எண்ணெய் விலை அதிகம் என்பதால் அரை லிட்டருக்கான தொகையில் பாதியை மானியமாக வழங்கி, மீதியை விலையாக நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







