SOURCE :- BBC NEWS

ரோஹித், கோலி: இழந்த ஃபார்மை மீட்க என்ன செய்ய வேண்டும்? ரஞ்சி போட்டி தீர்வாகுமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த் ஆகியோர் உள்நாட்டுப் போட்டிகளில், அதிலும் ரஞ்சி கோப்பை அடுத்த சீசனில் விளையாடப் போகிறார்கள் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடப் போகிறார்கள் என்ற உறுதியான தகவல் ஏதும் இல்லை.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாகத் தக்க வைத்திருந்த கோப்பையை இந்திய அணி இழந்தது.

அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மூன்றாவது முறையாகத் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தோல்விக்கு முன்னர், உள்நாட்டில் நியூசிலாந்து அணியிடம் 3-0 என்று ஒயிட்வாஷ் ஆகி டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

அடுத்தடுத்து 2 டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்த இந்திய அணி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

அதிலும், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங், சுப்மான் கில், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்திய அணியின் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பேட்டிங் என்பதை ரோஹித் சர்மாவே ஒப்புக்கொண்டார்.

கவலை தரும் ரோஹித், கோலி ஃபார்ம்

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் நம்பிக்கையுடன் பந்துவீசிய அளவுக்கு பேட்டர்கள் களத்தில் நின்று பேட் செய்யாததே தோல்விக்குக் காரணம்.

குறிப்பாக விராட் கோலி முதல் டெஸ்டில் சதம் அடித்த நிலையில், அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 91 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிலும் 8 இன்னிங்ஸ்களிலும் ஒரே மாதரியாக ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்திலேயே கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதேபோல் கேப்டன் ரோஹித் சர்மாவும் 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே சேர்த்து, கடைசி டெஸ்டில் தானாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். ஆறு இன்னிங்ஸ்களிலும் சர்மா 100 பந்துகளைக்கூட சந்தித்து பேட் செய்யவில்லை.

ரோஹித் சர்மாவின் பலவீனம் அறிந்து ஆஃப் சைடு விலக்கி பந்து வீசுவது, பவுன்ஸர் வீசுவது, ஸ்விங் செய்வது எனப் பந்துவீசி அவரின் விக்கெட்டை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எளிதாக வீழ்த்தினர். ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எந்தச் சிக்கலையும் கொடுக்கவில்லை.

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் முடிந்தவுடன் இருவரும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பார்கள் எனத் தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்திதான் என்று இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

உள்நாட்டுப் போட்டியில் விளையாட வேண்டுமா?

இந்நிலையில் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு, மூத்த வீரர்கள் கோலி, சர்மா, பந்த், கில் ஆகியோர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், இழந்த ஃபார்மை மீட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.

இந்திய அணியில் விளையாடிய ஜாம்பவான்களான சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண், கம்பீர், சேவாக், முகமது கைப், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் சர்வதேச அளவில் பிரபலமடைந்தாலும் உள்நாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாடத் தவறியதில்லை.

ஆனால், ரோஹித், கோலி இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

உள்நாட்டுப் போட்டிகளில் அவ்வப்போது விளையாட வேண்டும். அதிலும் 5 நாட்கள் சிவப்புப் பந்தில் நடக்கும் ரஞ்சி கோப்பையில், பலதரப்பட்ட பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளும்போது பேட்டிங்கில் டிபென்ஸ் ஆட்டம் பழக்கப்படும். நீண்டநேரம் களத்தில் நிற்கப் பழகலாம், பல ஷாட்ளை செயல்படுத்திப் பார்க்க முடியும், நேர்த்தியான பேட்டிங்கை பழகலாம்.

கடைசி ரஞ்சி கோப்பை

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஆனால் ரோஹித் சர்மா கடைசியாக 2015ஆம் ஆண்டு, நவம்பரில் ரஞ்சி கோப்பைத் தொடரில் மும்பை அணிக்காக ஆடினார். உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 113 ரன்கள் சேர்த்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது.

கடந்த 2012ஆம் ஆண்டுதான் விராட் கோலி கடைசியாக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு 13 ஆண்டுகளாக அவர் விளையாடவில்லை. 2012ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அணிக்காகக் களமிறங்கிய கோலி, உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றார்.

அதேபோல சுப்மான் கில் கடைசியாக 2022ஆம் ஆண்டும், கே.எல்.ராகுல் 2020ஆம் ஆண்டும், ரிஷப் பந்த் 2017ஆம் ஆண்டும் கடைசியாக ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளனர்.

இப்போது இந்த பேட்டர்கள் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தயாராகி வருகிறார்கள். ஆனால், நட்சத்திர பேட்டர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்படவில்லை.

இழந்த ஃபார்ம் மீட்கப்படுமா?

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பை

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டுப் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடினால் இழந்த ஃபார்மை மீட்டுவிடுவார்கள் என்ற பொதுவான கூற்று வைக்கப்படுகிறது.

ரஞ்சி கோப்பை போட்டி 5 நாட்கள், இரு இன்னிங்ஸ்களாக நடக்கும் ஆட்டம். இதில் ரோஹித், கோலி இருவரும் சில போட்டிகளில் ஆடினால் இழந்த ஃபார்மை மீட்டுவார்கள் என்று பொதுவாகக் கூறுவது கடினம்.

பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பலீவனங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி 8 இன்னிங்ஸ்களிலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக ஆப்சைடு விலகிச் செல்லும் பந்தில் ஆட்டமிழந்தார், ரோஹித் சர்மாவும் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல், ஆப்சைடு செல்லும் பந்தை ஆட முடியாமல் விக்கெட்டை இழந்தார்.

இருவரின் பேட்டிங்கிலும் தவறுகள் இருப்பதையும் பல முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோலி ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தில் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தார். அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியிடமும், அதன் பின் ராகுலிடமும் பயிற்சிகள் எடுத்த பிறகு, ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தை கோலி “லீவ்” செய்து பழகினார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஆகவே, முதலில் கோலி தன்மீது வைக்கப்படும் விமர்சனத்தை உடைக்கும் வகையில், ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தில் தொடர்ந்து ஆட்டமிழப்பதற்கான காரணத்தை அறிந்து, அதைச் சரி செய்ய வேண்டும். அதன் பிறகு, உள்நாட்டிப் போட்டிகளில் ஆடினால், அதற்குரிய பலன் கிடைக்கும். தவறைத் திருத்த எடுக்கும் பயிற்சிகளை ரஞ்சி கோப்பைத் தொடரில் செயல்படுத்திப் பார்க்கலாம்.

டெஸ்ட் போட்டியில், டிபென்ஸ் ஆட்டம், களத்தில் நீண்டநேரம் நிலைத்து ஆடுவது ஆகியவை அவசியம். ஆனால், ரோஹித் சர்மாவின் உடல் தகுதி அதற்கு ஏதுவாக இல்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கடைபிடிக்கப்பட்ட வீரர்களுக்கான யோ-யோ உடல் தகுதி பரிசோதனை இப்போது அணியில் இல்லை. இதுபோன்ற கடினமான பயிற்சிகள் வீரர்களின் உடல்நிலையைத் தகுதியாக வைத்திருக்க உதவும்.

இதனால், டெஸ்ட் போட்டியில் நீண்டநேரம் பேட் செய்யும் பொறுமையும், கால்களை நகர்த்தி ஆடும் நுட்பமும், பிரண்ட்ஃபுட், பேக்ஃபுட் ஆடும் நுட்புத்தையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை. குறிப்பிட்ட சில ஷாட்களை மட்டுமே ரோஹித் சர்மா தொடர்ந்து கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதை எளிதில் அடையாளம் கண்டு எதிரணி பதிலடி கொடுத்து விக்கெட்டை வீழ்த்தி விடுகிறது.

குறிப்பாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில், ரோஹித் அரவுண்ட் ஸ்டெம்ப் பகுதியில் இருந்து வீசப்படும் பந்துக்கு எளிதாக கால்காப்பில் வாங்கி ஆட்டமிழப்பது, லெக் ஸ்பின்னிற்கு திணறுவது, ஸ்விங் பந்துவீச்சில் ஆப் சைடு செல்லும பந்தில் ஆட்டமிழப்பது போன்ற தவறுகளைத் தொடர்ந்து செய்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக, அவர் இந்தத் தவறுகளைச் சரி செய்ய வேண்டியது அவசியம்.

கண் துடைப்பு என விமர்சனம்

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பை

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டுப் போட்டிகளில் அதிலும் குறிப்பாக ரஞ்சி கோப்பைத் தொடர்களில் சர்மா, கோலி சிறப்பாக ஆடினால், ரன்கள் குவித்தால் ஃபார்முக்கு திரும்பிவிட்டனர் என்ற அடிப்படையில் அணிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆக இந்திய அணிக்குள் இடம் பிடிக்க ரஞ்சி கோப்பையில் ஒரு வீரர் சிறப்பாக ஆடினாலே போதும் என்ற அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாட வைத்து இழந்த ஃபார்மை மீட்க வைப்பது மிகக் கடினம் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மூத்த விளைாட்டு பத்திரிகையாளர் முத்துக்குமார்.

மேலும் அவர் கூறுகையில், “இருவரின் பேட்டிங்கிலும் இருக்கும் தவறுகளை உணராமல், திருத்தாமல் ரஞ்சி கோப்பையில் திருத்திக் கொள்வார்கள் என்று கூறினால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், பார்டர் கவாஸ்கர் தொடரில் நடந்த அதே நிலைதான் ஏற்படும்,” என்று தெரிவித்தார்.

ஒருவேளை அது அளவுகோலாக இருந்தால், சர்ஃபிராஸ்கான், புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியும் உரிய வாய்ப்புகள் கிடைக்காதது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. சர்பிஃராஸ்கான் உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாக ஆடி, அணியில் இடம் பெற்றும் ஏன் ஆஸ்திரேலியாவில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

ரஞ்சி கோப்பைத் தொடரில் கோலி, ரோஹித் சிறப்பாக ஆடினால் இழந்த ஃபார்மை மீட்டுவிடுவார்கள் என்று பிசிசிஐ சொல்வது வெறும் கண்துடைப்புதான் என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

கோலி, ரோஹித் இருவரின் மோசமான ஃபார்ம் குறித்த விமர்சனத்தை மறைக்கவும், அவர்கள் மீது இருக்கும் பிராண்ட் மதிப்பு குறையாமல் இருக்கவும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வைத்து அணியில் ஆட வைக்கும் திட்டம் என்றும் விவாதிக்கப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC