SOURCE :- BBC NEWS

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 ஏப்ரல் 2025, 02:34 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

லக்னெளவில் ஏப்ரல் 4 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய லக்னெள அணி இதுவரை 6 ஆட்டங்களில் வென்று 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

லக்னெள அணி கேப்டன் ரிஷப் பந்த் தனது அணிக்கு 2வது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். லக்னெள அணி 4 போட்டிகளில்2 வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது, மும்பை அணி 4 போட்டிகளில் 3 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கிறது.

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

லக்னெள அதிரடித் தொடக்கம்

லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். மார்ஷ் 27 பந்துகளில் அரைசதம் அடித்து, 60 ரன்களில் புத்தூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் பூரன் (12) ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிஷப் பந்த் (2) 4வது முறையாக சொற்ப ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மார்க்ரம் நிதானமாக ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆயுஷ் பதோனி (30), மில்லர் (27) கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். லக்னெள அணிக்கு தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் பெரிய ஸ்கோருக்குச் செல்ல உதவியது.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் பும்ரா இல்லாத குறையைத் தீர்த்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை.

தீபக் சஹர், அஸ்வானி குமார், சான்ட்னர் ஆகியோர் ஓவருக்கு 11 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். விக்னேஷ் புத்தூர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

மும்பைக்கு டாப்ஆர்டர் ஏமாற்றம்

ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக வில் ஜேக்ஸ் சேர்க்கப்பட்டு ரிக்கிள்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார். ரிக்கிள்டன்(10), ஜேக்ஸ் (5) இருவருமே சொற்ப ரன்களில் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தனர்.

3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், நமன் திர் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இருவரும் வழக்கம் போல் அதிரடியாக ஆடியதால் விக்கெட்டுகளை இழந்தபோதும் மும்பை அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது.

நமன் திர் முதல் 9 பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி 30 ரன்கள் சேர்த்த இருவரும் அருமையான ஃபார்மில் இருந்தனர். 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தபோது, பார்ட்னர்ஷிப்பை திக்வேஷ் ராதி பிரித்தார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

திக்வேஷ் ராதி வீசிய 9வது ஓவரில் நமன் திர் 46 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். ஆனால் சூர்யகுமார் தொடர்ந்து தனது இயல்பான ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆனால் மறுபுறம் திலக் வர்மா பேட்டிங்கில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினார், பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்தாலும், அதில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.

சூர்யகுமர், திலக் வர்மா என பெரிய ஹிட்டர்கள் இருந்த போதிலும் சிக்ஸர் அடிக்க முடியாத அளவில்தான் லக்னெள பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். 4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவால் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முயன்றும் லக்னெள பந்துவீச்சு முன் தோல்வி அடைந்தனர்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

வெற்றியை கோட்டைவிட்ட மும்பை

கடைசி 4 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணி வெற்றிக்கு 36% வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது. சூர்யகுமார், திலக் வர்மா களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா களத்துக்கு வரவேண்டியிருந்தது. 3 பெரிய பிக் ஹிட்டர்கள் இருந்தும் வெற்றியை மும்பை அணியால் வசப்படுத்த முடியவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் டெத் ஓவர்களை வீசிய ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ராதி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு தான்.

17-வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தில் சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடிக்க முற்பட்டு 67 ரன்னில் அப்துல் சமதிடம் டீப் ஸ்குயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஷர்துல் வீசிய 18-வது ஓவரில் திலக் வர்மா ரன்சேர்க்கத் திணறினார். வைடு யார்கர்களை பெரிய ஷாட்களுக்கு திலக் வர்மாவால் மாற்ற முடியவில்லை.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

அது மட்டுமல்லாமல் திக்வேஷ் ராதி பந்துவீச்சிலும் பெரிதாக ரன்கள் குவிக்க முடியாமல் மும்பைக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி 7 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஃபார்மில் இல்லாத திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி சான்ட்னரை கொண்டு வந்தார் பாண்டியா.

திலக் வர்மா சிறந்த ஹிட்டர். அவரை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி, பேட்டர் இல்லாத சான்ட்னரை கொண்டு வந்தது எந்த விதத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும். கடைசி நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடும் திறமை திலக் வர்மாவுக்கு இருக்கும்போது, சான்ட்னரை கொண்டு வந்தது ஹர்திக்கின் கேப்டன்ஷிப் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்தடுத்து யார்கர்களாக ஆவேஷ்கான் வீச 3 ரன்களை மட்டுமே ஹர்திக்கால் எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை கைக்கு கிடைத்த வெற்றியை லக்னெளவின் டெத் பந்துவீச்சாளர்களிடம் கோட்டைவிட்டது என்றுதான் கூற முடியும்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

வெற்றியின் நாயகன் ராதி

லக்னெள அணியின் வெற்றிக்கு நடுப்பகுதியில் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி முக்கியக் காரணம். 4 ஓவர்கள் வீசிய திக்வேஷ் 21 ரன்கள் கொடுத்து முக்கியமான நமன்திர் விக்கெட்டை சாய்த்தார்.

ஒரு பவுண்டரி கூட தனது ஓவரில் பேட்டர்களால் அடிக்க விடாமல் ராதி பந்துவீசினார். நடுப்பகுதியில் ராதி வீசிய 4 ஓவர்கள் தான் மும்பை அணியின் வெற்றி ஓட்டத்துக்கு பெரிய பிரேக் போட்டது. இவரின் பந்துவீச்சை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார், நமன் திர் என யாராலும் பெரிய ஷாட்களுக்கு ஆடமுடியாத அளவுக்கு மிககடினமான லைன் லென்த்தில் இருந்தது.

லக்னெள அணி 200 ரன்கள் வரை சேர்க்க மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் ஆகியோரின் அரைசதம், வெற்றிக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், திக்வேஷ் ராதி பந்துவீச்சுதான் ஆட்டத்தின் கருப்புக்குதிரை.

ஏனென்றால், திக்வேஷ் தவிர லக்னெள அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆதலால், ராதி இல்லாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி மும்பையின் பக்கம் சென்றிருக்கும்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்டியா புதிய சாதனை

ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் அவரது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். அந்த வகையில், ஆர்சிபி கேப்டனாக இருந்த போது அனில் கும்ப்ளே 4 விக்கெட் வீழ்த்தியிருந்ததை முந்தி, ஹர்திக் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக ஷேன் வார்னே மட்டுமே ஹர்திக்கை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய வார்னே 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியாக கேப்டனாக செயல்பட்ட போது 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

“நானே பொறுப்பு”

மும்பையின் தோல்வி குறித்தும், திலக்வர்மா ரிட்டயர்ட் அவுட் குறித்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் ” தோல்வி அடையும்போது விரக்தியாக இருக்கும். நேர்மையாகக் கூறினால் நாங்கள் 10 முதல் 12 ரன்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

பீல்டிங்கில் சரியாகச் செயல்படவில்லை, ரன்களை கோட்டைவிட்டோம். நான் பந்துவீச்சை அனுபவித்து வீசுவேன். எனக்கு பந்துவீச்சில் அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால், நானே பொறுப்பேற்க வேண்டியதிருந்தது. நான் விக்கெட் எடுக்க முயவில்லை. பேட்டர்களை தவறு செய்ய வைக்க முயன்றேன். விக்கெட் கிடைத்தது. பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அணியாகத் தோல்வி அடைந்தோம். இந்த தோல்விக்கு நானே பொறுப்பு.

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆக்கியது என்பது கிரிக்கெட்டில் இயல்பாக நடப்பதுதான். எங்களுக்கு பெரிய ஷாட்கள் தேவைப்பட்டன, ஆனால் அதை அடிக்கும் நிலையில் திலக் இல்லை. கிரிக்கெட்டில் நமக்கு நல்ல நாட்கள் வரும், மோசமான நாட்களும் வரும்.

திலக் பெரிய ஷாட்களுக்கு முயன்றார் பேட்டில் மீட் ஆகவில்லை. ஆதலால் ரிட்யர்ட் அவுட் ஆகக் கூறினோம். ஸ்மார்ட்டாக பந்துவீச வேண்டும், பேட்டிங்கில் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் இதுதான் எனக்குப் பிடிக்கும். இது பெரிய தொடர், இன்னும் 2 வெற்றிகள்தான் ரேஸில் தொடர்ந்து ஓட வைக்க உற்சாகம் அளிக்கும்,” எனத் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா முடிவால் சர்ச்சை

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறச் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாது, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும் கூட ஹர்திக் பாண்டியா முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

“சாண்ட்னரை களமிறக்க திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் செய்வதா? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹர்திக் இதேபோல் ரன் எடுக்க திணறிய போது ரிட்டர்ட் முறையில் வெளியேறினாரா? திலக் வர்மாவுக்கு மட்டும் ஏன்?” என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஹனுமான் விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

“திலக்கை விட சாண்ட்னர் மிகப்பெரிய ஷாட்களை அடிக்கக் கூடியவரா? பொல்லார்ட் போன்ற மிகப்பெரிய ஹிட்டரை களமிறக்கவே இந்த முடிவு என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த முடிவு ஏற்கக் கூடியது அல்ல” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ராபின் சிங், இர்பான் பதான் போன்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் திலக் வர்மாவை வெளியேற்றும் முடிவை விமர்சித்துள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU