SOURCE :- BBC NEWS

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு

பட மூலாதாரம், Avadi Police

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயமான வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கைதான நபர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 830 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து வந்த வெள்ளிக்கட்டிகள் கடத்தப்பட்டது எப்படி? கைதான நபர்களின் பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் தாசரி ஸ்ரீஹரிராவ் என்பவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோன் ஒன்றில் தான் கிளை மேலாளராக பணிபுரிவதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிறுவனம் சர்வதேச அளவில் மதிப்புள்ள சரக்குகளை (international transportation of valuables) இறக்குமதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

2 கன்டெய்னர்களில் வெள்ளிக் கட்டிகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு

பட மூலாதாரம், adaniports

மனுவில், ”லண்டனில் உள்ள ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியில் இருந்து கப்பல் மூலமாக காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்துக்கு கடந்த மார்ச் 30 ஆம் தேதி இரண்டு கன்டெய்னர்கள் வந்தது.

ஒரு கன்டெய்னரில் 666 வெள்ளி பார் கட்டிகளும் இரண்டாவது கன்டெய்னரில் 639 வெள்ளி பார் கட்டிகளும் இருந்தது” என தாசரி ஸ்ரீஹரிராவ் தெரிவித்துள்ளார்.

இவற்றில் ஒரு கன்டெய்னரின் சீல் மட்டும் உடைக்கப்பட்டு சுமார் 9 கோடி மதிப்புள்ள 922 கிலோ எடையுள்ள 30 வெள்ளி பார் கட்டிகள் திருடப்பட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொன்னேரி உதவி ஆணையர் சங்கர், எண்ணூர் சரக உதவி ஆணையர் வீரகுமார் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

2 முறை அலெர்ட் கொடுத்த ஜிபிஎஸ்

“ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனில் வைத்து கன்டெய்னரை திறக்க முற்படும்போது சீல் திறக்கப்பட்டுள்ளதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்” என பிபிசி தமிழிடம் கூறினார், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் பாலாஜி.

லண்டன் ஹெஎஸ்பிசி வங்கியில் இருந்து கன்டெய்னரில் வெள்ளிக் கட்டிகளை ஏற்றிய பிறகு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

“அந்தக் கருவியைப் பொறுத்தவரை வெள்ளி வைக்கப்பட்டுள்ள பெட்டி விலகினாலோ, யாராவது திறந்து பார்த்தாலோ லண்டனுக்கு எச்சரிக்கை (Alert) தகவல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது” எனக் கூறுகிறார் துணை ஆணையர் பாலாஜி.

அந்தவகையில், கொள்ளை நடந்த இரவு சுமார் 10 மணியளவில் 2 நிமிடங்கள் மட்டுமே கன்டெய்னர் திறக்கப்பட்டதாகவும் மறுநாள் 16 நிமிடங்கள் திறக்கப்பட்டதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

“சரக்குகளைக் கையாளும் இடமாக துறைமுகம் உள்ளது. அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவது வழக்கம். அதனால் எச்சரிக்கை தகவலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” எனக் கூறுகிறார், துணை ஆணையர் பாலாஜி.

இதையடுத்து, ஜிபிஎஸ் தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த தனிப்படை போலீஸார், துறைமுக ஊழியர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு

பட மூலாதாரம், Avadi Police

சிக்கிய துறைமுக ஊழியர்கள்

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதியன்று இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆகாஷ், எபனேசர் ஆகியோர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் மேற்பார்வையாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

மேலும் துறைமுகத்தில் சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக ட்ரக் வாகனத்தை ஓட்டி வந்த நவீன்குமார் மற்றும் கோட்டைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேசிங்கு, குணசீலன், எர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். மணலி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது, முத்துராமன், அப்துல் கரீம், முனியாண்டி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 830 கிலோ எடையுள்ள 27 வெள்ளி பார் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி எனவும் ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

“துறைமுக ஊழியர்கள் மற்றும் வெளி நபர்களின் துணையுடன் இதனை செய்துள்ளனர். வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 90 சதவீதத்துக்கு மேல் வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்துவிட்டோம்” எனக் கூறுகிறார், துணை ஆணையர் பாலாஜி.

துறைமுக ஊழியர்களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட பின்னணி குறித்து அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“இவர்கள் துறைமுகத்துக்குள் சிறிய சிறிய பொருட்களை திருடி வந்துள்ளனர். அது பெரிதாக வெளியில் தெரியவில்லை. வெள்ளிக் கட்டி கடத்தல் வழக்கில் 55 வயதான தேசிங்கு என்ற நபர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் அருகில் உள்ள யார்டில் வேலை பார்த்து வந்துள்ளார்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “லண்டனில் இருந்து வந்த கன்டெய்னரில் மதிப்புள்ள பொருள் இருப்பதை அறிந்து இவர்கள் அனைவரும் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர்” என்கிறார்.

வழக்கில் கைதான வெளிநபர்களில் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறிய பாலாஜி, “மீஞ்சூரில் உள்ள பிரபல டயர் கம்பெனியில் திருட்டு, துறைமுகத்தில் 111 குளிர்சாதன பெட்டிகளைத் திருடியது போன்ற வழக்குகளும் இவர்கள் மேல் உள்ளன” எனத் தெரிவித்தார்.

கொள்ளை முயற்சியை அரங்கேற்றுவதற்கு திருவாரூரில் இருந்து ஓட்டுநர்களை அழைத்து வந்துள்ளதாகக் கூறிய துணை ஆணையர் பாலாஜி, “கைதானால் பரவாயில்லை, காசு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சில ஓட்டுநர்கள் வந்துள்ளனர்” என்கிறார்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு

பட மூலாதாரம், adaniports

பாதுகாப்பை மீறி கொள்ளையடித்தது எப்படி?

“துறைமுகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளை எவ்வாறு கொண்டு வர முடிந்தது?” என துணை ஆணையர் பாலாஜியிடம் கேட்டோம்.

“காட்டுப்பள்ளி துறைமுகத்தைப் பொறுத்தவரை இருவழி துறைமுகமாக (Two stage port) உள்ளது. எத்தனை வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என்பதற்கு துறைமுகத்தில் விதிமுறைகள் உள்ளன.

துறைமுகத்துக்கு வரும் வாகனங்களில் சுமார் 60 சதவீத வாகனங்களை மட்டுமே சோதனைக்கு உட்படுத்த முடியும். அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தால் வாகனங்கள் தேங்கிவிடும். எண்ணூரில் மட்டுமே நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கன்டெய்னர்கள் நகர்கின்றன” எனக் கூறுகிறார்.

“இதன் காரணமாக, அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வதற்கு நேரம் இருப்பதில்லை” எனக் கூறும் பாலாஜி, “கொள்ளை நடந்த நாளில் துறைமுக விதிகளுக்குட்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்கிறார்.

“தவிர, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பாதுகாப்பு அம்சங்களில் எந்தவிதக் குறைபாடும் இல்லை” எனவும் குறிப்பிட்டார்.

“வெள்ளிக் கட்டிகளை திருடிய பிறகு அதை என்ன செய்தனர்?” என துணை ஆணையர் பாலாஜியிடம் கேட்டபோது, “என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வியாபாரிகளிடம் விற்று காசாக்கியுள்ளனர். அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” எனக் கூறினார்.

கைதான நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 334(1), 305, 61(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து திருடுவது, குற்றம் செய்வதற்கு சதித்திட்டத்தில் ஈடுபடுவது ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன.

துறைமுக அதிகாரிகள் கூறுவது என்ன?

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் தொடர்பான வர்த்தகத்தைக் கையாளும் அலுவலர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. “துறைமுகத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று மட்டும் பதில் அளித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU