SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Ahmed Salahuddin/NurPhoto via Getty Image
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்வதாக, வங்கதேசத்தின் இடைக்கால அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அவாமி லீக் கட்சியை தடை செய்யும் முடிவு இடைக்கால அரசின் ஆலோசனைக்குழு பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது.
அவாமி லீக்கின் மாணவர் பிரிவான சாத்ரா அவாமி லீக் கடந்த ஆண்டே தடை செய்யப்பட்டு விட்டது.
இந்த சூழலில் வங்கதேச அரசியலை நீண்டகாலமாக கவனித்து வரும் நிபுணர்கள் இதனை ‘அரசியல் நெருக்கடி’ என கருதுகின்றனர்.
நாடு முழுவதும் குறிப்பாக தலைநகர் டாக்காவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாக இடைக்கால அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சர்வதேச குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அவாமி லீக் மீதான விசாரணைகள் முடிவடையும் வரை இந்த தடை அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவாமி லீக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக ஜமாத் இ இஸ்லாமி, ஹஃபசத் இ இஸ்லாம் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
வங்கதேச பத்திரிகையாளரான எஸ்.எம்.அமநுர் ரஹ்மான் பிபிசியிடம் பேசுகையில்,”பேகம் கலீதா ஜியாவின் கட்சியான வங்கதேச தேசிய கட்சி, அவாமி லீக்கை தடை செய்ய வேண்டும் என்று முடிவுக்கு ஆதரவாக இல்லை. இருப்பினும்,போராட்டங்கள் காரணமாக அந்த கட்சி இதுபற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.” என்றார்
இருப்பினும் நாட்டில் ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் விதமாக கூடிய விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் வங்கதேச தேசிய கட்சி விரும்புகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாமல் பிபிசியிடம் பேசிய வங்கதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், “இடைக்கால அரசின் அறிவிப்பு அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது” என்றனர்.

பட மூலாதாரம், Md Abu Sufian Jewel/NurPhoto via Getty Images
இந்திய அரசின் எதிர்வினை என்ன?
டெல்லியில் மே 13ம் தேதி பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,” இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் எனென்றால் வரவிருக்கும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்க வேண்டும். எந்த கட்சியையும் தேர்தலில் பங்கெடுக்க விடாமல் செய்வது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல” என கூறினார்.
மேலும் ,”சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல் அவாமி லீக் தடை செய்யப்படுவது கவலைக்குரியது. ஒரு ஜனநாயக நாடான இந்தியா, வங்கதேசத்தில் அரசியலுக்கான இடம் சுருங்குவது மற்றும் ஜனநாயகத்திற்கான சுதந்திரம் குறித்து கவலை கொள்கிறது. சுதந்திரமாகவும், அச்சமின்றியும் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என ஜெய்ஸ்வால் கூறினார்.

பட மூலாதாரம், ANI
இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸின் பத்திரிகை செயலாளரான ஷஃபிக் உல் இஸ்லாம் பேசுகையில்,”அவாமி லீக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், தன்னிச்சையான அரசியல் சிந்தனைகள் நாட்டில் ஒடுக்கப்பட்டன. நாட்டின் இறையாண்மையுடனும் அவாமி லீக் சமரசம் செய்து கொண்டது.” என குறிப்பிட்டார்.
“சாதாரண குடிமக்கள் மற்றும் பிற கட்சிகளின் தொண்டர்கள் மீது அவாமி லீக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் மக்களின் மனதில் இன்னமும் இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க அவாமி லீக் தடை செய்யப்பட வேண்டும். தேர்தல்கள் நாட்டின் உள் விவகாரம்” என்றும் ஷிஃபிக் கூறினார்.
அவாமி லீக் காலத்தின் சர்ச்சைகள்

பட மூலாதாரம், ANI
வங்கதேசத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரஃபத் பிபிசியிடம் பேசுகையில்,”அவாமி லீக் கட்சி அதன் ஆட்சிக்காலத்தில், சட்டங்களையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை துன்புறுத்தியது” என குறிப்பிட்டார்.
அவாமி லீக் கட்சி தனது ஆட்சிக்காலத்தின் போது நடந்த தேர்தல்களில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நிர்மால்யா முகர்ஜி பிபிசியிடம் பேசுகையில், அவாமி லீக் ஆட்சிக்கு வந்த போது, பதிவான வாக்குகளில் 98 சதவிகித வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது. இது ஜனநாயகத்தில் முற்றிலும் சாத்தியமற்றது என்றார்.
பிபிசியிடம் அவர் மேலும் பேசுகையில்,” இடைக்கால அரசின் ஆலோசகர்கள் செய்வது அனைத்துமே இந்தியாவுக்கு எதிரானதாகத்தான் உள்ளது. அவர்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரிப்பது குறித்து பேசி வருகின்றனர். அங்குள்ள ராணுவமும் 3 பிரிவாக விஸ்வாசத்தைக் கொண்டுள்ளது. ஒரு பிரிவு ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக இருந்து, அவர் இந்தியா தப்பி வர உதவியது. இரண்டாவது பிரிவு யூனுஸ்க்கு ஆதரவாகவும் மூன்றாவது பிரிவு வங்கதேசத்துக்கும் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டுகிறது.” என்றார்.
முகர்ஜி மேலும் பேசுகையில்,”இந்தி அல்லது உருது பேசும் ரஸாக்கார்கள் ஷேக் ஹசீனாவின் தந்தையைக் கொன்றதால், அவர்களை ஹசீனா தொடர்ந்து பழி வாங்கினார்” என கூறினார்.
ரஸாகார் என்ற வார்த்தை 1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் ராணுவத்தை ஆதரிப்பவர்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் விருப்பப்படி அரசை நடத்தியதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்படுகிறது என முகர்ஜி கூறுகிறார்.
கடந்த காலத்தில் அரசியல் கட்சிகள் மீதான தடை

பட மூலாதாரம், Evening Standard/Hulton Archive/Getty Images
வங்கதேசத்தில் ஒரு சிறப்புச் சட்டம் உள்ளது. “சிறப்பு அதிகாரச் சட்டம் 1974”-ன்படி, எந்த ஒரு அரசியல் கட்சியும் அமைப்பும் தடை செய்யப்பட முடியும்.
இது தவிர ‘அரசியல் கட்சிகள் திருத்தச்சட்டம் 1978’என்ற மற்றொரு சட்டமும் உள்ளது. இந்த சட்டம் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது
1971ம் ஆண்டு வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது,’வங்க பந்து’ என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் மதச்சார்பு அரசியல் கட்சிகளை முழுமையாக தடை செய்தார். இந்த தடைப் பட்டியலில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியும் இருந்தது.
1979ம் ஆண்டு அதிபர் ஜியா உர் ரஹ்மான் இந்த தடையை நீக்கினார்.
இதன் பிறகு 2013ம் ஆண்டு வங்கதேச உயர்நீதிமன்றம் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் பதிவை நீக்கியது. இந்த கட்சியின் இருப்பு ‘மதச்சார்பற்ற வங்கதேசத்திற்கான அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது’ என குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு இந்த அமைப்பு மீது முழுமையான தடையை அமல்படுத்திய அவாமி லிக், பல ஜமாத் தலைவர்களை சிறையில் தள்ளியது.
ஆனால் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் அதிகாரம் இடைக்கால அரசின் கைகளுக்கு வந்தது. இதன் பின்னர் இந்த தடைகள் நீக்கப்பட்டு ஜமாத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU