SOURCE :- BBC NEWS

விவாகரத்து, ஜீவனாம்சம்

பட மூலாதாரம், Getty Images

சட்டப்படிப்பு முடித்திருந்த அன்பரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அவர் ஒன்றரை மாத குழந்தையின் தாயாக இருந்தார். குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால் அவர் அச்சமயம் வேலைக்கு செல்ல இயலவில்லை. வெளியே வந்து ஓரிரு மாதங்களிலேயே தனக்கும் தன் குழந்தைக்கும் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அவருடைய முன்னாள் கணவர் அச்சமயம் அரசு ஊழியராக இருந்தார். “அப்போது, 35,000 ரூபாய் ஊதியம் பெற்று வந்தார். எனக்கும் என் குழந்தைக்கும் சேர்த்து அவருடைய ஊதியத்தில் மூன்றில் இரு பங்கு தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என கோரியிருந்தேன். அச்சமயம், அவருடைய ஊதிய விவர சான்று (payslip) இல்லாததால், ரூ. 7,000 மட்டும் தான் என்னால் ஜீவனாம்சமாக கேட்க முடிந்தது. ஆனால், அந்த தொகையையும் கொடுக்க அவர் முன்வரவில்லை,” என்கிறார் அன்பரசி.

ஆறு ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஜீவனாம்சம் கோரியபோது, குற்றவியல் சட்டம் பிரிவு 125-ன் கீழ் பதிவு செய்திருந்தார். அப்போதும் தான் வேலைக்கு சென்று கொண்டிருந்ததால் அதை காரணம் காட்டி தனக்கு ஜீவனாம்சம் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

“இன்று வரை அவர் எனக்கும் என் குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இப்போது வரை ஏதாவது காரணம் சொல்லி வழக்கை இழுத்துக்கொண்டே இருக்கின்றனர்.” என்றார் அன்பரசி.

இந்தியாவில் விவாகரத்துக்காக காத்திருக்கும்போதும் விவாகரத்து கிடைத்த பின்னரும் ஜீவனாம்சம் பெறுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு உதாரணம் இது.

உண்மையில் ஜீவனாம்சம் குறித்து இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன? எதன் அடிப்படையில் ஜீவனாம்சம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து இங்கே சட்ட நிபுணர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.

எந்தெந்த சட்டங்களின் கீழ் ஜீவனாம்சம் கேட்க முடியும்?

ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை பல்வேறு சட்டங்களின் வாயிலாக ஒருவர் கோர முடியும். அதுகுறித்து விரிவாக விளக்கினார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் அவர்களுக்கென அமையப்பெற்ற சட்டங்களின் வாயிலாக ஜீவனாம்சம் கோர முடியும் என்கிறார் அவர்.

இந்து திருமணச் சட்டம், 1955-ன் கீழ் இந்துக்கள் ஜீவனாம்சம் கேட்க முடியும்.

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் – 1872-ன் கீழ் கிறிஸ்தவர்களும், ஷரியா சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் – 1986 முஸ்லிம்கள் ஜீவனாம்சம் உரிமையை பெற வழிவகுக்கிறது.

மதச்சார்பின்றி வெவ்வேறு சாதி கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள் சிறப்பு திருமணச் சட்டம் மூலம் ஜீவனாம்சம் உரிமையை கோர முடியும்.

இதுதவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் கீழும் ஜீவனாம்சம் கோரலாம். இதன் மூலம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்தோ பெற்றோர் குழந்தைகளிடமிருந்தோ என பாலின பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜீவனாம்சம் கேட்க முடியும், இது பெண்களுக்கானது மட்டுமல்ல.

மேலும், பி.என்.எஸ்.எஸ். பிரிவு 144-ன் கீழும் ஜீவனாம்சம் கோரலாம்.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005-ன் கீழும், குறிப்பிட்ட திருமண உறவினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை கோர முடியும் என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். இதில் ஒருவர் ஜீவனாம்சம் கோரினால், 60 நாட்களுக்குள் அதை முடித்து வைக்க வேண்டும் என்கிறார் அவர்.

விவாகரத்து, ஜீவனாம்சம்

பட மூலாதாரம், Getty Images

இடைக்கால ஜீவனாம்சம், நிரந்தர ஜீவனாம்சம் என்பது என்ன?

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் கணவர் தன் மனைவி மற்றும் குழந்தைக்கான பராமரிப்பு செலவுக்காக நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கும் பணம் தான் இடைக்கால ஜீவனாம்சம்.

நீதிமன்ற நடைமுறைகள் முடிந்து, விவாகரத்து முடிவான பின் நீண்ட காலத்துக்கு அப்பெண் மற்றும் குழந்தைக்காக வழங்கப்படும் பராமரிப்பு செலவுகளுக்கான தொகையே நிரந்தர ஜீவனாம்சமாகும்.

யாரெல்லாம் ஜீவனாம்சம் கோர முடியும்? எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

விவாகரத்து சமயத்தில் ஜீவனாம்சத்தை யாரெல்லாம் கேட்க முடியும் என்பதை விளக்குகிறார், மற்றொரு மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி.

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை கடந்த மார்ச் மாதம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “நன்கு படித்த பெண்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக வேலைக்கு செல்லாமல் இருப்பதை தேர்ந்தெடுக்கக் கூடாது.” என கூறியது. பெண் கல்வி மற்றும் அவர்களின் நிதி சுதந்திரத்தை நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

“நன்றாக படித்த பெண், தன்னால் சம்பாதிக்க திறமையிருந்தும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டு, கணவரிடமிருந்து தான் நான் ஜீவனாம்சம் பெறுவேன் என்று இருக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. நன்றாக படித்த பெண்கள் வேலைக்கு செல்லுங்கள், வருமானம் போதவில்லையென்றால் கணவரிடம் கேளுங்கள் என்கிறது நீதிமன்றம்.” என கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி.

ஆனால், வேலைக்கு செல்லும் பெண்களும் ஜீவனாம்சம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஐடி துறையில் பணியாற்றி வருபவர் 35 வயது கார்த்திகா. அவருடைய விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

“நான் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருப்பதால் ஜீவனாம்சம் கேட்க முடியவில்லை. எனினும், திருமண வாழ்க்கையில் நானே அதிக செலவுகளை செய்திருந்தேன். நானும் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் தொடர்ந்து சட்ட ரீதியாக போராட முடியவில்லை. இதுவொரு சாபம் போன்றுதான் இருக்கிறது.

குழந்தையின் பராமரிப்பு செலவுகளை நானும் என் கணவரும் பகிர்ந்துகொள்கிறோம். எனவே, முழுமையாக பராமரிப்பு தொகையை கணவரிடம் கேட்பது குறித்து யோசித்து வருகிறேன். ” என்று கூறுகிறார் அவர்.

“ஆனால், வேலைக்கு சென்று மிகக்குறைந்த ஊதியத்தைப் பெறும் பெண்களாக இருக்கும்பட்சத்தில், வேலைக்கு செல்கிறார்கள் எனக்கூறி ஜீவனாம்சம் இல்லை எனக்கூற முடியாது. அப்பெண்ணின் கணவர் சம்பாதிக்கும் பட்சத்தில் அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.” என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

விவாகரத்து, ஜீவனாம்சம்

பட மூலாதாரம், Getty Images

கணவருக்கு இணையான அல்லது அவரை விட கூடுதலாக ஊதியம் பெறும் பெண்களுக்கு, “உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும்போது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது,” என பல வழக்குகளில் நீதிமன்றம் கூறுவதாக, வழக்கறிஞர் சாந்தகுமாரி குறிப்பிடுகிறார்.

அதன் சமீபத்திய உதாரணமாக, ஒரு வழக்கு ஒன்றில் கணவருக்கு இணையாக சம்பாதிக்கும் பெண்ணால் தன்னைத்தானே கவனித்துக்கொள்ள முடியும் என, அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

“அதுவே, மனைவி ரூ. 1 லட்சம் சம்பாதித்து, கணவருக்கு மாதம் 50 லட்சம் ஊதியம் என்றால், அந்த இடத்தில் மனைவிக்கு நல்ல சம்பளம் என நினைக்க மாட்டார்கள். அந்த இடத்தில், “equal status” என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அதாவது, கணவரை பிரிவதற்கு முன்பு அப்பெண்ணின் அந்தஸ்து எப்படி இருந்ததோ, அந்தளவுக்கான வசதிகளை கணவர் செய்து கொடுக்கக் கடமைப்பட்டவர். ரூ. 1 லட்சமே சம்பாதித்தாலும் இன்னும் அதிகமாக ஜீவனாம்சம் பெற முடியும்.” என கூறுகிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

ஆனாலும், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் மனைவிக்கு சில ஆயிரங்களை மட்டுமே ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறார் மற்றொரு மூத்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம்.

பெரும்பாலும் ஜீவனாம்சம், கணவரின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வருமானத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

ஜீவனாம்சம் கிடைப்பதில் என்ன சிக்கல்?

20 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தற்போது விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஷர்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முன்னாள் பத்திரிகையாளரான அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் சிறப்பு குழந்தை.

“45 வயதில் தான் விவாகரத்து செய்யலாம் என்றே முடிவெடுத்தேன். நாங்கள் இருவரும் உரிமையாளர்களாக உள்ள வணிக வளாகத்தை அவருடைய பெயரிலேயே மாற்றித் தந்தால் தான் விவாகரத்து தருவேன் என்கிறார் என் கணவர். எனக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக பொய்யாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். விவாகரத்து பெறுவதே பெரும் மன உளைச்சலையும் நிதி இழப்பையும் கோருகிறது. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் இதிலிருந்து நான் விடுபட்டால் போதும் என இருக்கிறது, அதனால் நான் ஜீவனாம்சம் கேட்கவில்லை.” என்கிறார் அவர்.

“வேலைக்கு செல்லாமல் தன்னையோ அல்லது குழந்தையையோ பராமரிப்பதற்கான செலவுகளை கவனித்துக்கொள்ள முடியாத பெண்கள் தங்களுக்கான ஜீவனாம்சத்தை போராடித்தான் வாங்க வேண்டியிருக்கும். எளிதில் கிடைத்து விடாது. ” என்கிறார் சாந்தகுமாரி.

ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் அதில் ஏற்படும் கால தாமதம்தான் மிக முக்கிய பிரச்னை என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் படி, ஒருவர் ஜீவனாம்சம் கோரினால் அது 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்பட வேண்டும். எந்தவொரு பெண்ணும் குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. ஆனால், இது பெரும்பாலான வழக்குகளில் பின்பற்றப்படுவதில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜீவனாம்சம் கிடைக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

“போதிய அளவுகளில் நீதிமன்றங்கள் இல்லாதது, அதிகமான வழக்கு நிலுவைகளால் இந்த பிரச்னை அதிகமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு ஜீவனாம்சத்துக்கு உத்தரவிட்டால் நீதிமன்றம் ஏதேனும் தொகுப்பு நிதியை உருவாக்கி அதிலிருந்து கொடுத்துவிட்டு அதன்பின் கணவரிடமிருந்து வசூலிக்கலாம். அதை கொடுக்க தவறும் ஆண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என யோசனை கூறுகிறார் சுதா ராமலிங்கம்.

விவாகரத்து, ஜீவனாம்சம்

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவுகளுக்கு யார் பொறுப்பு?

“குழந்தைகளை பொறுத்தவரை கணவன் – மனைவி இருவருமே பொறுப்பாளிகள்.

“உதாரணமாக, ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 15,000 செலவாகும் என வைத்துக்கொள்வோம். மனைவி ரூ. 50,000 சம்பாதித்து கணவர் ரூ. 1 லட்சம் சம்பாதித்தால் மனைவி 5,000 ரூபாயும் கணவர் 10,000 ரூபாயும் என வருமானத்தின் அடிப்படையில் குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளை நிர்ணயிக்க முடியும்.” என்கிறார் அவர்.

ஆண்கள் பாதிக்கப்படுகின்றனரா?

கடந்தாண்டு டிசம்பர் மாதம், பெங்களூருவை சேர்ந்த அதுல் சுபாஷ் எனும் மென்பொறியாளர், அதிகமாக ஜீவனாம்சம் கேட்பதாகவும் அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தன் மனைவி மீது புகார் கூறி தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

திருமண உறவில் பெண்கள் செய்யும் தவறுகளாலும் விவாகரத்துகள் நிகழும்போது, ஜீவனாம்சத்தை ஆண்களிடம் கேட்பது எவ்வகையில் நியாயம், இந்த சட்டங்களில் போதாமைகளும் பாகுபாடுகளும் நிலவுவதாக பெரும் விவாதங்களை அந்த தற்கொலை எழுப்பியது.

இந்த சட்டங்களால் ஆண்கள் பாதிப்படைகிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “சட்டத்தைத் தவறாக, ஆயுதமாக பயன்படுத்துவது எல்லா சட்டங்களிலும் இருக்கும். ஆனால், பெண் தவறு செய்துவிட்டால் மட்டும் இந்த சட்டங்களே வேண்டாம் என கூறுவது தவறான வாதம். விவாகரத்து போன்ற பிரச்னைகளில் பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

போதுமான மனப்பக்குவம், விழிப்புணர்வு இல்லாதது தான் இங்கு சிக்கலாக உள்ளது.” என்றார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU