SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Reuters
அமெரிக்கப் படைகள் புதன்கிழமை காலை வெனிசுவேலா கடற்கரையோரத்தில் ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் நிக்கோலாஸ் மதுரோ அரசாங்கத்தின் மீது அமெரிக்காவின் அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல் “இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது” என்று கூறினார்.
இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள மதுரோ அரசாங்கம், இது “வெளிப்படையான திருட்டு மற்றும் கடற்கொள்ளை” என்று வர்ணித்தது.
கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல், அமெரிக்காவின் எண்ணெய் தடைகளைத் தவிர்ப்பதற்காக வெனிசுவேலாவால் பயன்படுத்தப்படும் “மறைமுகக் கப்பல் படை” (Ghost fleet) என்று அழைக்கப்படும் கப்பல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் எவ்வாறு இயங்குகின்றன?
தடைகளைத் தவிர்ப்பதற்காக
அதிபர் டிரம்ப், 2019 இல் தனது முதல் பதவிக் காலத்தில் வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதித்த பிறகு, வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதியாகக் குறைந்தது. அந்த ஆண்டின் ஜனவரியில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ஏற்றுமதி, ஆண்டின் இறுதியில் சுமார் 4,95,000 பீப்பாய்களாக குறைந்தது என்று அமெரிக்க எரிசக்தி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தடை இன்னும் அமலில் இருந்தாலும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி நவம்பர் மாத நிலவரப்படி ஒரு நாளைக்கு சுமார் 9,20,000 பீப்பாய்களாக மீண்டும் உயர்ந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது 1998 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாய்கள் என்ற உச்ச நிலையை விடக் குறைவாக இருந்தாலும், வெனிசுவேலா மீண்டும் உற்பத்தியில் உயர்ந்து வருவது, வெனிசுவேலாவுக்கு எதிரான தடைகள் அமெரிக்கா எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஒருபுறம் தடைகள் இருந்தபோதிலும், மதுரோ அரசாங்கம் வெனிசுவேலாவின் எண்ணெயை விற்க புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளது.
இதன் முக்கிய அங்கம் “மறைமுகக் கப்பல் படை” (ghost fleet) ஆகும். இது தங்கள் செயல்பாடுகளை மறைக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தும் எண்ணெய் டேங்கர் கப்பல்களின் குழு.
மறைமுகக் கப்பல் படைகள் அதிகரித்து வரும் புதிய போக்காக உள்ளன.
இது வெனிசுவேலா மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளின் தடைகளின் கீழ் உள்ள ரஷ்யா மற்றும் இரான் ஆகிய எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்ற இரண்டு நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
நிதிப் புலனாய்வு நிறுவனமான எஸ்&பி குளோபல் (S&P Global) மதிப்பீட்டின்படி, உலகளவில் உள்ள ஐந்து எண்ணெய் கப்பல்களில் ஒன்று, தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து எண்ணெயைக் கடத்தப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றில் 10% வெனிசுவேலா எண்ணெயை மட்டுமே கொண்டு செல்கின்றன. 20% இரானிய எண்ணெயைக் கொண்டு செல்கின்றன. 50% பிரத்யேகமாக ரஷ்ய எண்ணெய்க்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 20% எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் பிணைக்கப்படவில்லை, மேலும் இந்த நாடுகளில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டின் எண்ணெயை அக்கப்பலால் கொண்டு செல்ல முடியும்.
தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையோ அல்லது அவற்றை கையாள்வதையோ தடுப்பதே எண்ணெய் தடைகளின் நோக்கமாக உள்ளன.
வெனிசுவேலா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்கள் அமெரிக்காவால் தண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
தடை செய்யப்பட்ட நாடுகள் தங்கள் எண்ணெயை பெரிய தள்ளுபடியில் வழங்குகின்றன. இதனால், நிறுவனங்கள் அல்லது நாடுகள் அந்த அபாயத்தை ஏற்றுக்கொண்டு, அதன் மூலத்தை மறைக்கத் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
பட மூலாதாரம், Getty Images
பெயர் அல்லது கொடியை அடிக்கடி மாற்றுவது
மறைமுகக் கப்பல்கள் பயன்படுத்தும் பொதுவான உத்திகளில் ஒன்று, அவற்றின் பெயர் அல்லது கொடியை அடிக்கடி மாற்றுவது.
சில சமயங்களில் அவை ஒரு மாதத்திற்குள் பல முறை கூட மாற்றப்படுகின்றன.
உதாரணமாக, புதன்கிழமையன்று கைப்பற்றப்பட்ட இந்த டேங்கர் கப்பல் தி ஸ்கிப்பர் என்று அழைக்கப்படுகிறது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
இரானின் புரட்சிகர காவல்படை மற்றும் லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு நிதியளிக்க உதவும் ஒரு எண்ணெய் கடத்தல் வலையமைப்பில் அதன் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டு, இந்தக் கப்பலுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கருவூலத் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ் தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில், கப்பலுக்கு அடிசா (Adisa) என்று பெயரிடப்பட்டது, ஆனால் அதன் அசல் பெயர் டோயோ (Toyo). இது ரஷ்ய எண்ணெய் துறை தொழிலதிபர் விக்டர் ஆர்டெமோவுடன் தொடர்புடைய கப்பல்களில் ஒன்றாகும், அவரும் தடைகளின் கீழ் உள்ளார்.
தி ஸ்கிப்பர் 20 வருட பழைய கப்பல். இது மறைமுகக் கப்பல் படையின் மற்ற கப்பல்களிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு பண்பு. பெரிய கப்பல் நிறுவனங்கள் பொதுவாக 15 வருட சேவைக்குப் பிறகு கப்பல்களை அப்புறப்படுத்துகின்றன. பொதுவாக, 25 வருடங்களுக்குப் பிறகு அவை கைவிடப்படுகின்றன.
பட மூலாதாரம், Planet Labs PBC / Reuters
‘ஜாம்பி கப்பல்கள்’
இந்தக் கப்பல்கள் பயன்படுத்தும் மற்றொரு தந்திரம் என்னவென்றால், சர்வதேச கடல்சார் அமைப்பால் (IMO) ஒதுக்கப்பட்ட தனித்துவமான பதிவு எண்களைப் பயன்படுத்தி, அப்புறப்படுத்தப்பட்ட கப்பல்களின் அடையாளத்தைத் திருடுவது ஆகும்.
இது குற்றவாளிகள் இறந்த ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்துவதைப் போன்றது.
இந்த கப்பல்கள் “ஜாம்பி கப்பல்கள்” (Zombie Ships) என்று அழைக்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம், ‘வராடா’ என்று பெயரிடப்பட்ட ஒரு கப்பல் வெனிசுவேலாவில் இருந்து இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு மலேசிய கடற்பரப்பை அடைந்தது.
அது 32 ஆண்டுகள் பழமையான கப்பல் என்பதாலும், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரத்தில் உள்ள தீவு நாடான ‘கோமரோஸ்’ நாட்டின் கொடியை ஏந்தியிருந்ததாலும் சந்தேகத்தை எழுப்பியது. கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்பும் கப்பல்கள் பொதுவாகத் தேர்ந்தெடுக்கும் கொடி அது என்பதால் சந்தேகம் அதிகரித்தது.
ப்ளூம்பெர்க் விசாரணையின்படி, இது ஒரு ஜாம்பி கப்பல். ஏனெனில் உண்மையான ‘வராடா’ 2017 இல் வங்கதேசத்தில் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.
செயற்கைக்கோள் படங்களை முந்தைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு, வெனிசுவேலா கச்சா எண்ணெயைக் கொண்டு சென்ற நான்கு ஸோம்பி கப்பல்களை ப்ளூம்பெர்க் கண்டறிந்தது.
மற்ற பொதுவான உத்திகளில் ஒன்று, கச்சா எண்ணெயின் மூலத்தை மறைப்பதற்காக அதை சர்வதேச கடல் பகுதிகளில் வேறு கொடிகளை ஏந்திய சட்டப்படி இயங்கும் கப்பல்களுக்கு மாற்றுவது.
அதன் பிறகு, அந்தக் கப்பல்கள் எண்ணெய் தடை செய்யப்படாத ஒரு நாட்டிலிருந்து வந்ததாகக் கூறி, இலக்குக்கு அதைக் கொண்டு சேர்க்கின்றன.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் தடைகள் கடுமையாக்கப்பட்டபோது, வெனிசுவேலாவின் சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் இது நடந்தது.
இந்த கப்பல்களுக்கு மத்தியில் உள்ள மற்றொரு பொதுவான தந்திரம், தானியங்கி அடையாள அமைப்பை (Automatic Identification System – AIS) முடக்குவது ஆகும். இது கப்பலின் பெயர், கொடி, நிலை, வேகம் அல்லது வழித்தடம் போன்ற தரவுகளை அனுப்பும் அமைப்பு.
இது கப்பல்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் மறைக்க அனுமதிக்கிறது.
கடல்சார் ஆபத்து நிறுவனமான வான்கார்ட் டெக் (Vanguard Tech), “‘தி ஸ்கிப்பர்’ கப்பல் ‘நீண்ட காலமாக அதன் நிலையை ஏமாற்றி’ வந்துள்ளது. அதாவது, தவறான சமிக்ஞையை அனுப்பி, அது வேறு இடத்தில் இருப்பதாகத் தோன்ற வைத்துள்ளது” என்று கூறுகிறது.

‘டிரான்ஸ்பரென்சியா வெனிசுவேலா’ என்ற அரசு சாரா ஊழல் தடுப்பு நிறுவனத்தின் அக்டோபர் மாத அறிக்கையின்படி, வெனிசுவேலாவின் அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ-வின் (PDVSA) துறைமுகங்களில் 71 வெளிநாட்டுக் கப்பல்கள் இருந்தன.
அவற்றில் 15 கப்பல்கள் தடைகளின் கீழ் உள்ளன.
9 கப்பல்கள் மறைமுகக் கப்பல் படைகளுடன் தொடர்புடையவை.
24 டேங்கர்கள் மறைமுகமாக இயங்குவதையும், அவற்றின் கட்டாய இருப்பிட சமிக்ஞைகள் செயலிழக்கச் செய்யப்படுவதையும் அது கண்டறிந்தது.
மேற்கு வெனிசுவேலாவின் கடற்பரப்பில் ஆறு கப்பல்களுக்கு இடையேயான சரக்கு பரிமாற்றங்களை கண்டறிந்ததாக அந்த அரசு சாரா நிறுவனம் கூறுகிறது.
பெரும்பாலான கப்பல்கள், பனாமா, கொமொரோஸ் மற்றும் மால்டா உட்பட, தடைகளை முறையாக கண்காணிக்காத, ஒழுங்குமுறை புகலிடங்களாக கருதப்படும் நாடுகளின் கொடியை ஏற்றி வந்தன.
வெனிசுவேலாவில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட செவ்ரான் இயக்கும் கப்பல்கள் ஆறு நாட்களுக்குள் சரக்குகளை ஏற்றி வெளியேறும் நிலையில், இந்தக் கப்பல்கள் எண்ணெய் முனையத்தில் நங்கூரமிடாமல் 20 நாட்களுக்கும் மேலாகத் துறைமுகப் பகுதிகளில் செலவிட்டுள்ளன.
“எண்ணெய் முனையங்களை நேரடியாக அடையாமல் துறைமுகப் பகுதிகளில் நீடித்திருப்பது, இந்தக் கப்பல்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது” என்று டிரான்ஸ்பரென்சியா வெனிசுவேலா அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை கப்பலைக் கைப்பற்றும் நடவடிக்கை, உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான ஜெரால்ட் ஃபோர்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானந்தாங்கி தற்போது கரீபியன் நீர்ப்பரப்பில் பெரியளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இதன் காரணமாக, மறைமுகக் கப்பல் படையை நம்பிச் செயல்படும் மதுரோவின் திறன் கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







