SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதனால் அமெரிக்க அரசுக்கும், பழமையான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
பாஸ்டனில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை “தெளிவான சட்ட மீறல்” என அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
”சட்டத்தை பின்பற்றவில்லை என்பதால், ஹார்வர்டின் சர்வதேச மாணவர் அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது” என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் கூறியுள்ளார்.
“இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று அவர் வியாழக்கிழமை (மே 22) சமூக ஊடக வலைதளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை “சட்டவிரோதமானது” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“140 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அறிஞர்களை வழிநடத்தும் ஹார்வர்டின் திறனைப் பராமரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அத்துடன், பல்கலைக்கழகத்தையும் இந்த நாட்டையும் – அளவிட முடியாத அளவுக்கு வளப்படுத்துகிறோம்,” என்று பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் பதிலளித்தது.
“ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க நாங்கள் துரிதமாக செயல்படுகிறோம். அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை, ஹார்வர்ட் சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஹார்வர்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களைப் பாதிக்கக்கூடும்.
கடந்த கல்வியாண்டில் 6,700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சேர்ந்துள்ளனர் என்பதை பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன. இது ஹார்வார்டின் மாணவர் சேர்க்கையில் 27% ஆகும்.
வியாழக்கிழமையன்று, அரசின் கடுமையான நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் செய்திகள் விரைவாகப் பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்களிடையே அச்சமும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
“தற்போது எங்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது,” என்று பட்டதாரி பட்டம் பெறும் ஆஸ்திரேலிய மாணவி சாரா டேவிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

பகடைக்காயாகும் மாணவர்கள்
ஸ்வீடனைச் சேர்ந்த 22 வயது இளங்கலை பட்டதாரி லியோ கெர்டன், ஹார்வர்டில் சேர்க்கை கடிதத்தைப் பெற்ற நாளை தனது வாழ்க்கையின் சிறந்த நாள் என்று நினைவு கூர்ந்தார்.
தற்போது பட்டம் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இப்படியொரு நிலைமை வரும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
“வெள்ளை மாளிகைக்கும் ஹார்வர்டுக்கும் இடையிலான சண்டையில் வெளிநாட்டு மாணவர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்,” என்று லியோ கெர்டன் பிபிசியிடம் கூறினார்.
“இது நம்பமுடியாத அளவிற்கு மனிதாபிமானமற்றது.”
டிரம்ப் நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள டஜன் கணக்கான பல்கலைக்கழகங்கள் மீது விசாரணைகளைத் தொடங்கியது.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு பணிந்து, டிரம்ப் நிர்வாகம் கூறிய மாற்றங்களை செய்ய ஒப்புக்கொண்டது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க அரசின் உத்தரவுகளை எதிர்த்தது.
நீண்ட கோரிக்கைகளின் பட்டியலை அனுப்பிய டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக ஏப்ரல் மாதத்திலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
பின்னர், இந்தப் பட்டியல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியதும் குறிப்பிடத்தக்கது.
“பல்கலைக்கழகம் அதன் சுதந்திரத்தையோ அல்லது அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக்கொடுக்காது” என்று ஹார்வர்ட் வழக்கறிஞர்கள் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள் ரத்து
பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்புக்கு எதிராக போராட உதவும் வகையில் மாணவர் சேர்க்கை, பணியாளர்கள் நியமனம் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை மாற்றுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு டிரம்ப் அரசு அறிவுறுத்தியிருந்தது.
மேலும், பல்கலைக்கழகத்தின் வரி விலக்கு நிலையை ரத்து செய்வதாகவும், அரசாங்கம் வழங்கிவரும் பில்லியன் கணக்கான டாலர் மானியங்களை முடக்குவதாகவும் அரசு தெரிவித்திருந்தது.
யூத எதிர்ப்புக் பிரச்னையை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அரசாங்கத்தின் கோரிக்கைகள் பல்கலைக்கழகத்தின் “அறிவுசார் நிலைமைகளை” கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
வியாழக்கிழமை டிரம்ப் நிர்வாகம் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
SEVP திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு இருந்த தகுதியை உள்நாட்டுப் பாதுகாப்பு துறை ரத்து செய்ததாக அவர் அறிவித்தார்.
இதன் பொருள் வரவிருக்கும் 2025-2026 கல்வியாண்டில் F- அல்லது J போன்ற குடியுரிமை இல்லாத வகையிலான விசா வைத்திருக்கும் மாணவர்களை சேர்க்க முடியாது.
தற்போது இந்த விசாக்களை வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் இருப்பதற்கான சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பராமரிக்க வேண்டுமானால், பிற பல்கலைக்கழகங்களுக்கு மாற வேண்டும் என்று கிறிஸ்டி நோம் எழுதியுள்ளார்.
இந்த வகை மாணவர்களைச் சேர்க்கும் திறனை ஹார்வர்ட் மீண்டும் பெறுவதற்கு, கோரிக்கைகளின் பட்டியலை நிறைவேற்ற 72 மணிநேரம் இருப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் விமர்சனம்
சில நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ஹார்வர்டை ‘தீவிர இடதுசாரி’ என்று குற்றம் சாட்டியிருந்தார், மேலும் ‘இந்த பல்கலைக்கழகம் இனி சிறப்பான கல்விக்கு ஏற்றதல்ல’ என்றும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கூட, பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைப்பது பற்றி டிரம்ப் பேசியிருந்தார்.
ஹார்வர்ட், அரசுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கில், அரசு நிதியுதவி நிறுத்தப்படுவது குழந்தை புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற முக்கியமான ஆராய்ச்சிகளைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU