SOURCE :- BBC NEWS

கொடூரமான நாஜி தலைவர்களை பரிசோதித்த உளவியல் மருத்துவருக்கு ஏற்பட்ட சோக முடிவு

பட மூலாதாரம், Handout Jack El-Hai

    • எழுதியவர், ஜுவான் ஃபிரான்சிஸ்கோ அலோன்சோ
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • 11 டிசம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

ஏன்?

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரத்தில், அது விட்டுச் சென்ற சோகத்தின் வீரியம் வெளிப்பட்டபோது உலகமே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தது.

குறிப்பாக, யூதர்கள், ஜிப்சிகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை அழித்தொழிக்க முயன்ற நாஜி ஆட்சியின் வதைமுகாம்களின் கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்த நேரத்தில், உலகம் முழுக்க இந்தக் கேள்வி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

ஜெர்மன் நகரமான நியூரம்பெர்கில் சர்வதேச ராணுவ தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 1945-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல், நாஜி ஜெர்மனியின் 24 உயரதிகாரிகளை விசாரிக்கத் தொடங்கியபோது, மனிதகுலம் மொத்தமும் பதில்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

இருப்பினும், அதற்கு முன்பு இல்லாத வகையில், போரில் வீழ்த்தப்பட்ட ஒரு நாட்டின் தலைவர்கள் மீது வழக்கு தொடுப்பது அவ்வளவு எளிய காரியமாக இருக்கவில்லை. அவர்கள் மீது யார் வழக்கு தொடுப்பது, சாட்டப்பட வேண்டிய குற்றங்களை வரையறுப்பது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுப்பது போன்று தொடர்ச்சியாக சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் எழுந்த சிக்கல்களைத் தீர்க்க வேண்டியிருந்தது.

ஜனநாயக குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள்படி, ஒரு குற்றம் நிகழும் முன்பே அந்தக் குற்றம் குறித்துப் பேசக்கூடிய சட்டம் இருந்தால் மட்டுமே ஒரு நபரை அந்தக் குற்றத்திற்காக தண்டிக்க முடியும். ஆனால், அந்த விதியை போரில் வென்ற நாடுகள் முழுமையாகப் பின்பற்றவில்லை.

இதுகுறித்து எழுந்த விமர்சனங்களைச் சமாளிப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முறையான சட்ட உரிமைகள் மற்றும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கி விசாரணைகளை நியாயப்படுத்த வெற்றி பெற்ற நாடுகள் முயன்றன.

ஆனால், நாஜி தலைவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்துவதற்கு முன், ஒரு முக்கியமான கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அதாவது, அவர்கள் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் தகுதியை மனதளவில் கொண்டிருக்கிறார்களா?

இதைக் கண்டறியும் பணி அமெரிக்க மனநல மருத்துவர் டக்ளஸ் எம். கெல்லியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நியூரம்பெர்க் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, அது எவ்வாறு நடத்தப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையைத் தாங்கும் உளவியல் தகுதியைக் கொண்டுள்ளார்களா என்பவை குறித்து விரிவான விவாதம் நடந்தது

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

உளவியல் தகுதியை தீர்மானிப்பது ஏன் முக்கியம்?

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடந்த கொடூர குற்றங்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உளவியல் தகுதியைத் தீர்மானிப்பது ஏன் முக்கியமானதாகக் கருதப்பட்டது?

அதுகுறித்துப் பேசியபோது, “நீதித்துறை உத்தரவாதங்களும் உரிமைகளும் எந்த விதிவிலக்குமின்றி ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாகவே இருப்பதாக” சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் தலைவர் கார்லோஸ் அயாலா கோராவ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

மனித உரிமைக்கான இன்டர்-அமெரிக்கன் ஆணையத்தின் முன்னாள் தலைவரான கார்லோஸ் அயாலா கோராவின் கூற்றுப்படி, “ஒரு நபர் தனது சுய விருப்பத்தின் பேரில் இல்லாமல், ஒரு நோய் அல்லது மனநலக் கோளாறு காரணமாகவே செயல்பட்டதாகத் தெரிய வந்தால், ஜனநாயக குற்றவியல் சட்டம் அந்த நபருக்கு குற்றம் மீதான பொறுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கிறது. “குறைந்தபட்சம் அது தண்டனையைக் குறைக்கலாம்.”

உளவியல் மருத்துவர் கெல்லி கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பின்னர் லெப்டினன்ட் கர்னல் பதவியை அடைந்தார். மேலும், போரின்போது ஐரோப்பாவில் “அதன் விளைவாக ஏற்படும் சோர்வு, போர் அதிர்ச்சியால் ஏற்படும் மன உளைச்சல் சீர்குலைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட” நேசநாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்நிலையில், வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்திராத வழக்கு விசாரணையின் தலைவிதியையே கிட்டத்தட்ட தீர்மானிக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது.

விசாரணையின் ஆறாவது நாளில் கெல்லி அளித்த ஒரு வானொலி நேர்காணலில் அவரே தனது உளவியல் பரிசோதனை முடிவுகள் குறித்து தெரிவித்தார். அப்போது அவர், “கைதிகள் பொதுவாக, வேறு எந்தவொரு மக்கள் குழுவினரையும் போலச் சாதாரணமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு உளவியல் சிக்கலும் இல்லை. அவர்கள் அசாதாரணமான நபர்களோ அல்லது சூப்பர்மேன்களோ இல்லை,” என்று கெல்லில் கூறினார்.

தனது உளவியல் பரிசோதனையில் அவர் இந்த முடிவுக்கு வந்தது எப்படி?

நேச நாடுகளால் சிறை பிடிக்கப்பட்ட நாஜி தலைவர்களை நேர்காணல் செய்து, உளவியல் ரீதியாக பரிசோதிக்கும் பணிக்காக மருத்துவர் கெல்லி நியூரம்பெர்கில் எட்டு மாதங்களுக்கும் மேலாகச் செலவிட்டார். (புகைப்படம்: நியூரம்பெர்க் தீர்ப்பாயம் உளவியல் டக்ளஸ் கெல்லிக்கு வழங்கிய அடையாள அட்டை)

பட மூலாதாரம், Cortesía Jack El-Hai

“கெல்லி நாஜி தலைவர்களுடன் சுமார் எட்டு மாதங்களைச் செலவிட்டார். குறிப்பாக, அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த லக்சம்பர்க் விடுதியில், அவர்களைப் பரிசோதிக்க அவர் பல்வேறு உளவியல் நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்தினார்” என்று தனது ‘தி நாஜி அண்ட் தி சைக்கியாட்ரிஸ்ட்’ நூலுக்காக மருத்துவர் கெல்லியின் பணியை ஆய்வு செய்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேக் எல்-ஹாய் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

இந்தப் புத்தகம் அளித்த உத்வேகத்தில், ரஸ்ஸல் குரோவ், ராமி மாலெக் நடித்த ‘நியூரம்பெர்க்’ திரைப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க பத்திரிகையாளர் ஜேக் எல்-ஹாய் எழுதிய இந்த நூலுக்காக, கெல்லி எழுதிய ஆவணங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் நிறைந்த 15 பெட்டிகளை ஜேக் எல்-ஹாய் மதிப்பாய்வு செய்தார்.

மருத்துவர் கெல்லி, நாஜிக்கள் பற்றிய தனது ஆய்வுகளைப் பதிவு செய்து வைத்திருந்த இந்த ஆவணங்களை, அவரது குடும்பத்தினர் பல தசாப்தங்களாகப் பாதுகாத்து வைத்திருந்தனர்.

“கெல்லி நாஜி தலைவர்களை நேர்காணல் செய்தார். ரோர்சாக் இன்க்ளாட் சோதனை போன்ற உளவியல் சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தினார். சுருக்கப் படங்களில் தாங்கள் பார்த்ததை விவரிக்கும்படி கேட்கப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“ரோர்சாக் சோதனையைப் போலவே, உண்மையான புகைப்படங்கள் அல்லது விளக்கப் படங்களைப் பயன்படுத்தி, கருப்பொருள் பார்வை சோதனையையும் அவர் நடத்தினார். அதில் அவர்களிடம் ஒரு கதை சொல்லுமாறு கெல்லி கேட்டார். கூடுதலாக, அவர்களுக்கு ஐ.க்யு பரிசோதனைகளையும் மேற்கொண்டார். இவற்றின் மூலம், அவர்கள் அனைவருக்கும் சராசரி அல்லது சராசரியைவிட சற்று அதிகமான நுண்ணறிவு இருப்பதைக் கண்டறிந்தார்,” என்கிறார் ஜேக் எல்-ஹாய்.

மருத்துவர் கெல்லி கோரிங்குடன் அதிக நேரத்தைச் செலவிட்டார். சில நிபுணர்களின் கூற்றுப்படி, அவருடனான பழக்கத்திற்காக கெல்லி விதிகளை மீறினார். (புகைப்படம்: சர்வதேச ராணுவ தீர்ப்பாயத்தில் விசாரணையின்போது கோரிங்)

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

ஹிட்லரின் முன்னாள் வாரிசு மீது எழுந்த ஆர்வம்

கெல்லி தனது உளவியல் பரிசோதனைகளின்போது, குற்றம் சாட்டப்பட்ட நாஜி தலைவர்களில் ஒருவரான, அடால்ஃப் ஹிட்லரின் முன்னாள் வாரிசும் நாஜி விமானப் படையின் (லுஃப்ட்வாஃப்) முன்னாள் தளபதியுமான ஹெர்மன் கோரிங் மீது குறிப்பாக ஆர்வம் காட்டினார்.

“கோரிங்தான், பிடிக்கப்பட்டவர்களிலேயே மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். அவர் மீது கெல்லிக்கு தனித்த ஆர்வம் எழுந்தது. ஏனெனில், அவர்கள் இருவருமே ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் புத்திசாலிகளாக, கவர்ச்சிகரமானவர்களாக, ஓரளவுக்கு சுயநலவாதிகளாக இருந்தனர்,” என்று பத்திரிகையாளர் ஜேக் எல்-ஹாய் கூறுகிறார்.

மேற்கொண்டு விவரித்த அவர், “போரின்போது கோரிங் காட்டிய கொடூரத்தையும் அவரால் எடுக்கப்பட்ட குலைநடுங்க வைக்கும் முடிவுகளையும் கெல்லி ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு என்று சொல்லமுடியாத, அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பரஸ்பர போற்றுதலை உள்ளடக்கிய உறவை வளர்த்துக் கொண்டனர்,” என்கிறார்.

முதல் உலகப் போரின் திறமைவாய்ந்த விமானப் படை விமானியான கோரிங் குறித்துத் தனக்குத் தோன்றியதை, தான் உணர்ந்ததை மருத்துவர் கெல்லி எழுதி வைத்தார்.

“கோரிங் தான் விரும்பினால் மிகவும் நட்பானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அதோடு, அவர் புத்திசாலியாக, கற்பனைத் திறன் கொண்டவராக, ஆற்றல் மிக்கவராக, நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார்,” என்று கெல்லி எழுதியுள்ளதாக, அமெரிக்க இனப்படுகொலை அருங்காட்சியகத்தில் கிடைக்கும் அவரது கையெழுத்துப் பிரதிகள் கூறுகின்றன.

“தினசரி, நான் அவரது அறைக்குச் செல்லும்போது, அவர் தனது நாற்காலியில் இருந்து எழுந்து, பரந்த புன்னகையுடன், நீட்டிய கைகளுடன் என்னை வரவேற்றுத் தனது கட்டிலுக்கு அழைத்துச் செல்வார். கட்டிலின் மையப் பகுதியைத் தட்டியபடி, ‘காலை வணக்கம் மருத்துவரே! நீங்கள் என்னைப் பார்க்க வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தயவு செய்து உட்காருங்கள்’ என்று கூறுவார். பின்னர் அவரது பெரிய உடலும் என் அருகில் அமர்ந்து, எனது கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகும்,” என்று மற்றோர் ஆவணத்தில் கெல்லி விவரித்துள்ளார்.

கோரிங்கின் மனைவி எம்மி மற்றும் அவரது மகள் எட்டா, நியூரம்பெர்க் தெருக்களில் நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படம்

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

கோரிங்கின் உளவியல் தகுதியைத் தீர்மானித்தது மட்டுமின்றி, அவரது உடல் பருமன் (கோரிங்கின் எடை 120 கிலோவுக்கு மேல் இருந்தது), கோடீன் போதைப் பழக்கம் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் கெல்லி முயன்றார்.

இதன் காரணமாகவே, நாஜி தலைவரான கோரிங்கை டயட்டில் இருக்குமாறு வற்புறுத்தியது மட்டுமின்றி, முதல் உலகப் போரில் அவர் அடைந்த காயங்களின் வலியைச் சமாளிக்க அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளின் அளவையும் கெல்லி படிப்படியாகக் குறைத்தார்.

உளவியல் மருத்துவர் கெல்லி தனது நோயாளியுடன் ஏற்படுத்திக் கொண்ட பிணைப்பு, அவரை, “சில எல்லைகளை மீறுவதற்கு” வழிவகுத்தது. அது அவர் மீதிருந்த நற்பெயரை வாழ்நாள் முழுக்கச் சேதப்படுத்தவும் வித்திட்டது என்று பத்திரிகையாளர் எல்-ஹாய் கூறுகிறார்.

“மருத்துவர் கெல்லி, ஒரு இடைத்தூதுவனை போலச் செயல்பட்டு, கோரிங் எழுதிய கடிதங்களை அவரது மனைவி எம்மிக்கு வழங்க ஒப்புக் கொண்டார். இதை நீதிமன்றமோ அல்லது நேசநாடுகளோ அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர் அதைச் செய்வதாக கோரிங்கிடம் ஒப்புக்கொண்டார்,” என்று எல்-ஹாய் கூறுகிறார்.

ஹிட்லரின் முன்னாள் வாரிசு, உளவியல் மருத்துவர் கெல்லி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மற்றுமொரு பெரிய சான்று இருந்தது.

“கோரிங், அவரோ அல்லது அவரது மனைவியோ உயிர் பிழைக்கவில்லையெனில், அவர்களது மகளைத் தத்தெடுத்து கெல்லி அமெரிக்காவில் வளர்க்க வேண்டுமென்று கேட்டார். கெல்லி தனது மனைவியுடன் இந்த யோசனை குறித்து விவாதித்தார். அவரது மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்,” என்றும் கூறுகிறார் எல்-ஹாய்.

நாஜி தலைவர்களுக்கு எவ்வித உளவியல் பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தபோது, மருத்துவர் கெல்லி மிகவும் அஞ்சினார். ஏனெனில், பாசிசம் அமெரிக்காவையும் அடையக்கூடும் என்பதை அது காட்டுவதாக அவர் கருதினார்.

பட மூலாதாரம், MIKE THEILER/AFP via Getty Images

அச்சுறுத்தலை ஏற்படுத்திய கெல்லியின் கண்டுபிடிப்பு

மருத்துவர் கெல்லி, தனது விசாரணைகளின் தொடக்கத்தில், நாஜி தலைவர்கள் “ஒரு வைரஸ்” அல்லது ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பினார். அதுவே அவர்கள் அத்தகைய கொடூரங்களைச் செய்யத் திட்டமிடவும் உத்தரவிடவும் வித்திட்டிருக்கலாம் என்று கெல்லி ஆரம்பத்தில் நம்பியதாகக் கூறுகிறார் எல்-ஹாய்.

ஆனால், “நாஜி தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. அவர்களின் நடத்தைகள் சராசரி மனிதர்கள் என்ற வரம்புக்குள்தான் இருந்தது. இந்த முடிவு, அவர்கள் நல்லவர்கள் என்று கூறவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடுகளின் பின்னணியில் எந்தவொரு மனநோயும் இருந்ததாகக் கூற முடியாது. தனது பரிசோதனையில் இறுதியாக இந்த முடிவுக்கு வந்தபோது கெல்லி அஞ்சினார்” என்கிறார் எல்-ஹாய்.

மேலும் பேசிய அவர், கெல்லியின் “இந்தக் கண்டுபிடிப்பு, அவர்களை (நாஜி தலைவர்கள்) போன்ற பலர் நம்மிடையே, அதாவது எந்த நாட்டிலும், எந்தக் காலகட்டத்திலும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது,” என்று விளக்கினார்.

அமெரிக்க உளவியல் மருத்துவர் ஜோயெல் டிம்ஸ்டேல் எழுதிய ‘அனாடமி ஆஃப் ஈவில்: தி எனிக்மா ஆஃப் வார் கிரிமினல்ஸ்’ என்ற நூலின்படி, “அவர்கள் அடிப்படையில் சாதாரண மனிதர்கள்.

பொய்கள் மற்றும் கடுமையான, சக்திவாய்ந்த அரசாங்க அமைப்பின் செல்வாக்கு அவர்கள் மீது தாக்கம் செலுத்தியது. அவர்கள் இருந்த சூழல் அவர்களை வடிவமைத்தது. உலகில் எந்தவொரு பகுதியிலும், காணப்படக்கூடிய அலுவலகப் பணியாளர்களில் இத்தகைய நபர்களைக் காண முடியும்,” என்று கெல்லி விவரித்துள்ளார்.

கடந்த 1945ஆம் ஆண்டில், நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் நீதிமன்ற அறையில் ஓர் அமர்வின்போது...

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

இதைத் தொடர்ந்து, 1946-ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பிய மருத்துவர் கெல்லி, தொடர்ச்சியான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மேலும் பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பாசிசம் முன்பு செய்ததைப் போன்ற ஆபத்து, அமெரிக்காவிலும் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

“அந்த நேரத்தில், பல மாகாணங்கள் இனப் பிரிவினையை ஆதரித்த அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டன. மேலும், நாஜிக்களின் நுட்பங்களை ஒத்த நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்காளர்களைக் கையாள்வார்கள்,” என்று பத்திரிகையாளர் எல்-ஹாய் சுட்டிக்காட்டுகிறார்.

மேற்கூறியவை போதாதென்று, கெல்லி ஒரு புதிய தொழில்முறை அத்தியாயத்தையும் தொடங்க முடிவு செய்தார்.

“நாஜிக்களுடன் செலவழித்த நேரம் கெல்லியின் மனப்பான்மையை மாற்றியது. இந்தக் குற்றவாளிகளைப் போன்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவம் மற்றும் மனநோயின் தன்மை ஒரு நல்ல துறையா என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாக, இது நல்ல துறை இல்லை என்ற முடிவுக்கும் அவர் வந்தார்,” என்று எல்-ஹாய் கூறுகிறார்.

மேற்கொண்டு பேசிய அவர், “இவர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே இருக்கின்றனர். அப்படியென்றால், அவர்கள் செய்த கொடூர குற்றங்களை ஏன் செய்தார்கள் என்பதை உளவியல் மருத்துவத்தால் எப்படி விளக்க முடியும்?

உளவியல் மருத்துவம் அந்தப் பதிலை வழங்கவில்லை என்று கருதிய அவர், தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளில் குற்றவியல் துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார். ஒருவேளை அங்கு தனது கேள்விக்கான பதில்களைக் கண்டுபிடிக்க முடியலாம் என்று நினைத்தார்,” என்று சுட்டிக்காட்டுகிறார்.

நியூரம்பெர்க் திரைப்படத்தில் கோரிங், டாக்டர் கெல்லி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ரஸ்ஸல் குரோவ் மற்றும் ராமி மாலெக்

பட மூலாதாரம், COLE BURSTON/AFP via Getty Images

கடும் மனச்சோர்வுக்கு ஆளான கெல்லி

ஜனவரி 1, 1958 அன்று மருத்துவர் கெல்லிக்கு நடந்தது, “கோரிங் உடனான அவரது தொடர்புகள் அவர் மீது ஓர் அழியா அடையாளத்தை விட்டுச் சென்றதற்கான உறுதியான சான்று” என்று சிலர் கருதுகின்றனர்.

நியூரம்பெர்கில் நாஜி தலைவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் கெல்லி, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, கடும் மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தார்.

அதன் விளைவாக, அன்றைய தினம், தனது மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது, கோபத்தில் அவர் ஒரு சயனைடு காப்ஸ்யூலை எடுத்து விழுங்கிவிட்டார். உடனடியாக அவரது உயிர் பிரிந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், ஹிட்லரின் முன்னாள் வாரிசான கோரிங்கும் இதேபோலத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் உள்படப் பல குற்றங்களைச் செய்தமைக்காக அவருக்கு வழங்கப்படவிருந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு கோரிங் தற்கொலை செய்துகொண்டார்.

கெல்லியின் மரணத்தைத் தொடர்ந்து, கோரிங்கிற்கு சயனைடு கேப்ஸ்யூலை அவர்தான் அனுப்பினாரா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றன. ஆனால், அது இனி ஒருபோதும் நிரூபிக்க முடியாத ஒன்று.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC