SOURCE :- BBC NEWS

ஹெச்.எம்.பி.வி தொற்று

பட மூலாதாரம், Getty Images

8 ஜனவரி 2025, 06:44 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சமீப வாரங்களாக சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

இந்த வைரஸால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

தற்போது தமிழகத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு குழந்தைக்கும் சேலத்தில் ஒரு குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜன. 07 வரை ஏழு பேருக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் இதுதொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்த வைரஸ் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஹெச்.எம்.பி.வி. என்பது என்ன? எப்படி பரவுகிறது?

ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் என்பதன் சுருக்கமே ஹெச்.எம்.பி.வி. இது மனிதர்களின் சுவாசப்பாதையின் மேல் பகுதியை பாதிக்கும் தொற்றை குறிக்கிறது. பெரும்பாலானோருக்கு சாதாரண சளி, காய்ச்சலை போன்றே இதன் அறிகுறிகள் இருக்கும்.

நெதர்லாந்தில் 2001ல் தான் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும்போதோ அல்லது அவருடைய சளி துளிகள் ஓரிடத்தில் விழுந்து அங்கு உங்கள் கைகளை வைத்து அதன்பின், மூக்கு அல்லது வாயைத் தொட்டாலோ இந்த வைரஸ் பரவுகிறது.

சீனாவில் ஏன் இப்போது அதிகரிக்கிறது?

ஹெச்.எம்.பி.வி தொற்று

பட மூலாதாரம், Getty Images

சுவாசம் சம்பந்தப்பட்ட மற்ற தொற்றுகளைப் போலவே ஹெச்.எம்.பி.வியும் குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தில் அதிகம் பரவுகிறது.

இத்தகைய வைரஸ்கள் குளிர்ச்சியான வானிலையில் அதிகம் தப்பிப் பிழைக்கின்றன, மேலும் மக்கள் இந்த வானிலையில் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது.

வட சீனாவில் தற்போது இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்திருப்பது, அங்கு குறைவான வெப்பநிலையுடன் ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வானிலை மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள், ஹெச்.எம்.பி.வி பரவலை அதிகளவு சந்தித்துவருகிறது என, ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாக்குலின் ஸ்டீஃபன்ஸ் கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதை, சுகாதார அதிகாரிகள் வழங்கும் தரவுகள் கூறுகின்றன.

அறிகுறிகள் என்ன?

ஹெச்.எம்.பி.வி அறிகுறிகள்

இருமல், காய்ச்சல், மூக்கு அடைப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட சிறு குழந்தைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், நோய் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகள் ஆகியோரும் இதனால் பாதிக்கப்படுவதாக, சிங்கப்பூரை சேர்ந்த தொற்று நோய்கள் மருத்துவர் ஹ்சு லி யாங் தெரிவித்தார்.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க, ஆனால் குறைவான அளவில் “இது மிக தீவிரமான நோயாக மாறும்” என்றும் இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பலருக்கும் மருத்துவமனை கண்காணிப்பு தேவைப்படலாம். ஆனால், இதனால் இறப்பதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது,” என்கிறார் ஹ்சு.

கொரோனா வைரஸ் போன்றதா? இதற்கு கவலைப்பட வேண்டுமா?

ஹெச்.எம்.பி.வி தொற்று

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பொதுமுடக்கம் போன்று தற்போதும் ஏற்படலாம் என்ற அச்சம் பெரிதுபடுத்தப்படுவதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வைரஸ், ஆனால் ஹெச்.எம்.பி.வி. அப்படியல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

ஹெச்.எம்.பி.வி உலகம் முழுவதும், பல பத்தாண்டுகளாக உள்ளது. “இதனால், இத்தொற்றால் முன்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான நோயெதிர்ப்பு சக்தி ஓரளவுக்கு இருக்கும்,” என டாக்டர் ஹ்சு கூறுகிறார்.

“ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை ஒருமுறையாவது ஹெச்.எம்.பி.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும். இது ஒவ்வொருடைய வாழ்நாளிலும் பலமுறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது,” என இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் கூறுகிறார்.

“எனவே, இப்போதைக்கு இது மிக தீவிரமான உலகளாவிய பிரச்னையாக உருவெடுப்பதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை.” என்கிறார் அவர்

சிகிச்சை என்ன?

“போதிய அளவு தண்ணீர் அருந்துவதும் ஓய்வும்” இந்த வைரஸிலிருந்து குணமடைவதற்கு அவசியமானதாக குறிப்பிட்டுள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை.

” சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்வது, ஓய்வு எடுப்பது உள்ளிட்ட கவனிப்புடன் இந்த வைரஸ் நோய்த்தொற்று குணப்படுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸால் ஏற்படும் அறிகுறிகளுக்கு ஏற்கெனவே போதிய சிகிச்சைகள் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.ஐ செய்தி முகமையிடம் பேசிய டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் சுரேஷ் குப்தா, “இருமல், சளி போன்றவற்றுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்த நோய் பாதிப்புக்கும் கொடுக்கப்படும். பின்னர் நோயாளி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்” என்று கூறுகிறார்.

“பெரும்பாலும் இதற்காக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்படவில்லை” என்கிறார் அவர்.

“தானாக வந்து தானாக குணமடையும் தொற்று இது. நோய்த்தொற்றால் பாதித்தவர்கள் எளிதில் செரிமானமாகக்கூடிய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுடுநீரை மட்டும் குடிப்பது நல்லது.” என்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான சந்திரசேகர்.

இந்த வைரஸுக்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கவில்லை என்றும் எனினும் இந்த வைரஸால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் உலகளவில் மிகக்குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரவாமல் தடுப்பது எப்படி?

ஹெச்.எம்.பி.வி தொற்று

பட மூலாதாரம், Getty Images

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிவது, ஏற்கெனவே மூச்சுப் பிரச்னை உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவற்றை கடைபிடிப்பது நல்லது என, சிங்கப்பூரை சேர்ந்த தொற்று நோய்கள் மருத்துவர் ஹ்சு லி யாங் அறிவுறுத்துகிறார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் பொருந்தும்.” என தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்த வேண்டுமா?

“ஒருவரை இந்த வைரஸ் தாக்கி, 5-7 நாட்கள் வரை அது நோய்த்தொற்றும் தன்மையுடையதாக உள்ளது. பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. எனினும் அவசியமாக வெளியே செல்ல வேண்டுமென்றால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்,” என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ். சந்திரசேகர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC