SOURCE :- INDIAN EXPRESS
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி சென்னையில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தொகுப்பூதியம் ஒழிப்பு சிறப்பு மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் கலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட செயலாளர் அல்போன்சா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் மலர்விழி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாநாட்டில் தொகுப்பூதிய முறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிட்ட அரசாணை 95 ஐ ரத்து செய்து, கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலத்தில் சத்துணவு ஊழியர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ9000 வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள சமூக நல ஆணையர் அலுவலகம் முன் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்துவது மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் திலகவதி நன்றி கூறினார்.
க.சண்முகவடிவேல்
SOURCE : TAMIL INDIAN EXPRESS