SOURCE :- BBC NEWS

’10 முதல் 15 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது’ – ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் பேட்டி

22 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 22) ஆயுததாரிகள் தாக்குதல் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.

அனந்த்நாக் மருத்துவமனையிலிருந்து பேசிய மாஜித் ஜஹாங்கீர், “பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர்.” என்று கூறினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த வினு தாபி என்பவர் குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்தவர். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், “துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரிந்துவிட்டோம். யாரும் எங்களுக்கு உதவ வரவில்லை. அவர்கள் எங்கே சென்றார்கள்? இருக்கிறார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடன் இருந்த மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. நான் இங்கே தனியாக இருக்கிறேன்.” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. முதலில் ஒரு துப்பாக்கிச் சூடு, பின்னர் மற்றொரு துப்பாக்கிச் சூடு, பின்னர் மூன்றாவது துப்பாக்கிச் சூடு, அது கடுமையானதாக இருந்தது. மக்கள் சிதறி ஓடியதால் அங்கே நெரிசல் ஏற்பட்டது. என் கையில் அடிபட்டது.” என்றார்.

பலத்த காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது, இந்த தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஜம்மு காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU