SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
37 நிமிடங்களுக்கு முன்னர்
ஜெய்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது, தேஷ்பாண்டே,மபாகா பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்டுகளை, 34 ரன்களுக்கு இழந்தது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தது இந்த போட்டியில் தான்.
பஞ்சாப் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்த பரியன்ஸ் ஆர்யா(9), பிரப்சிம்ரன் சிங்(21) ஆகியோர் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே, மிட்ஷெல் ஓவன் ரன் ஏதும் சேர்க்காமல் மபாகா ஓவரில் ஆட்டமிழந்தார். 19 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் பஞ்சாப் அணி தடுமாறியது.
4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேகல்வதேரா ஜோடி சேர்ந்த அணியை மீட்டெடுத்தனர். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.
அறியப்படாத ஹீரோ வதேரா

பட மூலாதாரம், Getty Images
நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதிகம்அறியப்படாத ஹீரோவா ஐபிஎல் தொடரில் வலம் வரும் நேகல் வதேரா தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தார். இந்த ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்ஸில் களமிறங்கிய வதேரா 6 இன்னிங்ஸில் தனது ஸ்டிரைக் ரேட்டை 150க்கு மேலாகவைத்துள்ளார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட்டை 156 ஆகவும், 86 சரசாரி வைத்துள்ளார், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 160 ஸ்ட்ரேக்ரேட் வைத்துள்ளார்.
நடுப்பகுதி ஓவரை சிறப்பாகப் பயன்படுத்திய நேகல் வதேரா ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஸ்கோரை உயர்த்தினார் 10.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய வதேரா 25 பந்துகளில் அரைசதம் அடித்தார், இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஃபினிஷர் சஷாங் சிங்
ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் ஸ்ரேயாஸ் 30 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து இருவரும் பிரிந்தனர். அடுத்துவந்த சஷாங் சிங், வதேராவுடன் சேர்ந்தார். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய சஷாங் சிங் இந்த ஆட்டத்திலும் தனது பங்களிப்பை அளிக்கத் தவறவில்லை.
சஷாங் சிங் களமிறங்கி சிறிது நேரம் தடுமாறினார், ஆனால் ஒரு பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிய சஷாங் சிங் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார்.
மறுபுறம் வதேரா சதத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தநிலையில் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 5வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஓமர்சாய், சஷாங் சிங்குடன் சேர்ந்தார்.
பரூக்கி வீசிய 17வது ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களை சஷாங் விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். டெத் ஓவர்களில் சிறந்த ஃபினிஷராக கருதப்படும் சஷாங் சிங் இந்த முறையும் அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினார், இவருக்கு துணையாக ஆடிய ஓமர் சாய் பவுண்டரி சிக்ஸர் என கேமியோ ஆடி 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 60 ரன்கள் சேர்த்தது.
சஷாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்களிலும், ஓமர் சாய் 21 ரன்களிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது.
இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 6வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதன் மூலம் ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்களை எட்டிய மும்பை, கொல்கத்தா,ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் வைத்துள்ள சாதனையை பஞ்சாப் அணி சமன் செய்தது. ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிரடி தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர். ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் போராட்டக்குணத்தை விடவில்லை. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்தார்.
யான்சென் வீசிய 2வது ஓவரில் சூர்யவன்ஷி 2 சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி, அதில் 66 ரன்கள் பவுண்டரி, சிக்ஸரில் மட்டும் சேர்த்தது. பஞ்சாப் அணி வீரர்கள் யார் பந்துவீச்சிலும் பந்து பவுண்டரி, சிக்ஸர் என ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி பறக்கவிட்டனர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் அணி வெற்றி சதவீதம் 72% ஆக இருந்தது. ஆனால், 29 பந்துகளில் சூர்யவன்ஷி , ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் வெற்றி சதவீதம் 65% ஆக உயர்ந்தது. வெற்றி இருவரின் பக்கமும் மாறி, மாறி சென்றுவந்தது.
முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தநிலையில் பிரார் பந்துவீச்சில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு சேர்த்த 76 ரன்களில் 74 ரன்கள் பவுண்டரி சிக்ஸரிலேயேதான் வந்தது. பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் வரலாற்றிலேயே ராஜஸ்தான் அணி தனது சிறந்த பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்தது.
நடுவரிசை ஏமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பஞ்சாப் அணிக்கு ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.
109 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 5 ரன்களில் கேப்டன் சாம்ஸன் விக்கெட்டையும் இழந்தது. சாம்ஸன் 20 ரன்னில் ஓமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசை பேட்டர்களான ரியான் பராக்(13), ஷிம்ரன் ஹெட்மயர்(11) ஆகியோர் ஏமாற்றமே ராஜஸ்தான் அணி தடுமாறியது.
துருவ் ஜூரெல் அணியை வெற்றிக்காக நகர்த்தினார், அதிரடியாக ஆடிய ஜூரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், துருவ் முயற்சிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. நடுவரிசை பேட்டிங்கிற்கு ஹெட்மயர், பராக் இருந்தபோதிலும் இந்த சீசன்களில் எதிர்பார்த்த அளவு இருவரும் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை.
துருவ் ஜூரெல் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜூரெல், ஷுபம் துபே களத்தில் இருந்தனர்.அர்ஷ்தீப் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஒரு பவுண்டரி மட்டுமே ஜூரெலால் அடிக்க முடிந்ததால் 8 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
யான்சென் வீசிய கடைசி ஓவரில் ஜூரெல், துபே தலா ஒரு ரன் எடுத்தனர். 3வதுபந்தில் தடுமாறிய ஜூரெல்(53) ரன்னில் ஓவனிடம் கேட்ச் கொடுத்தார், அடுத்த வந்த ஹசரங்கா வந்தவேகத்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மபாகா கடைசி நேரத்தில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது இது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. பிரார் 3 விக்கெட்டுகளையும், ஓமர்சாய், யான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
10 ஆண்டுகளுக்குப்பின் ப்ளேஆஃப்
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் முழுமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லை. பஞ்சாப் அணி தற்போது 12 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று ஆர்சிபிக்கு இணையாக இருந்தாலும் நிகர ரன்ரேட் 0.389 என இருப்பதால், 2வது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் அணிக்கு இன்னும் டெல்லி, மும்பை அணியுடன் இரு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வென்றாலே ப்ளே ஆஃப் உறுதியாகிவிடும். 17 புள்ளிகளை 5 அணிகளும் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு 17 புள்ளிகள் பஞ்சாப்புக்கு பாதுகாப்பானது இல்லை, இன்னும் ஒரு வெற்றி கண்டிப்பாகத் தேவை.
ஒருவேளை அடுத்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் ஏறக்குறைய 2014ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பஞ்சாப் அணி செல்லும்.
அறியப்படாத ஆட்டநாயகர்கள்

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார். இவர் எடுத்த முதல் இரு விக்கெட்டுகள் ராஜஸ்தான் அணியின் ஸ்கோருக்கு பிரேக் பேட்டது. அதன்பின் ரியான் பராக் விக்கெட்டை எடுத்து நடுவரிசை பேட்டிங்கை உலுக்கி எடுத்தார் பிரார். 4 ஓவர்கள்வீசிய பிரார் 22 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.
அதேபோல ஆட்டத்தில் அறியப்படாத ஆட்டநாயகர்கள் இருவர் உள்ளனர், அரைசதம் அடித்த நேகல் வதேரா(70), சஷாங் சிங்(59) இருவர்தான். இருவரின் அற்புதமான பங்களிப்பால்தான் பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இருவருமே ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக கடந்த சில சீசன்களாக ஆடி வருகிறார்கள். அதனால்தான் பஞ்சாப் அணி சஷாங்சிங்கை ஏலத்தில் தக்கவைத்தது.
உச்சம் தொட்ட கூட்டணி
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் வரை சேர்த்து ஏறக்குறைய வெற்றியின் பாதிதொலைவுவரை அணியை கொண்டுவந்தனர்.
ஆனால், இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. 24வயது ஜெய்ஸ்வாலும், 14வயது சிறுவன் சூர்யவன்ஷியும் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணியை உச்சம் தொட வைத்தனர். இருப்பினும், இருவரின் உழைப்புக்கு அணி வெற்றிபெற்றிருந்தால், மதிப்பு இருந்திருக்கும்.
ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளேஆஃப் சுற்று கனவில் ராஜஸ்தான் மண் அள்ளிபோட்டுவிடும் என்று நினைக்கத் தோன்றி இருக்கும். இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை அரங்கின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.
ஆனால், ஹர்பிரீத் பிரார் பந்துவீச வந்து இருவரின் விக்கெட்டையும் எடுத்தபின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி, பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது. ஒரு கட்டத்தில் வெற்றியை ராஜஸ்தான் துரத்தி ஓடினாலும், துருவ் ஜூரெலுக்கு துணையாக நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை.
அதேபோல பந்துவீச்சிலும் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆனால், அந்த தருணத்தை பயன்படுத்தி ஆட்டத்தை கடைசிவரை கொண்டு செல்ல நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லை. நேகல்வதேரா, ஸ்ரேயாஸ், சஷாங் சிங், ஓமர்சாய் ஆகியோர் ஆட்டத்தை பெரியஸ்கோருக்கு நகர்த்தியது ராஜஸ்தான் அணியின் கட்டுக்கோப்பில்லாத, துல்லியமில்லாத பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், அதை அந்த அணி சரியான திட்டமிடல் இல்லாமல் பயன்படுத்தமுடியாமல் தோல்வி அடைந்தது என்றுதான் சொல்ல முடியும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU