SOURCE :- BBC NEWS

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

52 நிமிடங்களுக்கு முன்னர்

தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த என்ன படிக்கலாம் என்று மாணவர்கள் யோசித்துக் கொண்டிருக்கக் கூடும்.

சிலர், ஏற்கெனவே பல நுழைவுத் தேர்வுகளை எழுதி அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கலாம். இதுவரை எந்த நுழைவுத் தேர்வையும் எழுதாதவர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நிறைய படிப்புகளில் 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே சேர முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவும், சட்டக் கல்லூரிகளிலும் சேரவும் 12ம் வகுப்பு மதிப்பெண்களே போதுமானவை.

அதே போன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர பொதுவாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை.

ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், வரலாறு, கணிதம், தாவரவியல், விலங்கியல், புவியியல் என வழக்கமாக அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் படிப்புகளில் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த படிப்புகளை தவிர வேறு சில படிப்புகளிலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர முடியும்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மனநல ஆலோசகராவதற்கான மூன்று ஆண்டு கால பி.எஸ்சி. சைகாலஜி (B.Sc Psychology) படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.

மாணவர்கள் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளிலும் சேரலாம். இவை Food Technology, Food Processing Technology and Management, Food Processing and Quality Control என வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன.

இதன் மூலம் உணவு தயாரிப்பு, உணவு பாதுகாப்பு, உணவு பதப்படுத்துதல் போன்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

அதே போன்று ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை ( Nutrition and Dietetics) என்ற படிப்பை இளங்கலை பட்டமாக சில கல்லூரிகள் வழங்குகின்றன.

ஊட்டச்சத்து நிபுணராவதற்கான முதல் படியாக இந்த படிப்பு இருக்கும். இதில் முதுகலை படிப்புகளும் பல்வேறு கல்லூரிகளில் உள்ளன.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

B.Sc. Microbiology, B.Sc Biochemistry, B.Sc Biotechnology, B.Sc Bioinformatics போன்ற படிப்புகள் சில தனியார் கல்லூரிகளிலும் வெகு சில அரசு கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் சுகாதாரத்துறை, மருந்தியல் துறை, உணவு சார்ந்த துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

ஊடகம் சார்ந்த துறைகளில் நுழைய விரும்பும் மாணவர்கள் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் சேரலாம். இதில் பல்வேறு விதமான படிப்புகள் உள்ளன.

பொதுவாக இதழியல் சார்ந்த படிப்புகள் முதுகலையில் மட்டுமே பல கல்லூரிகள், பல்கலைகழகங்களில் இருந்தாலும், சில கல்வி நிலையங்கள் இளங்கலை படிப்பை வழங்குகின்றன.

இது மட்டுமல்லாமல் விசுவல் கம்யூனிகேஷன், விசுவல் ஆர்ட்ஸ் போன்ற படிப்புகளிலும் மாணவர்கள் சேரலாம். இதன் மூலம் ஊடகம், விளம்பரம், கலை வடிவமைப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடும்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

ஆடை வடிவமைப்புக்கான B.Sc Fashion Design, B.Sc Costume Design and Fashion போன்ற படிப்புகள் தமிழ்நாட்டின் சில கல்லூரிகளில் இருக்கின்றன.

இந்த படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படை என்றாலும் சில கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றன.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

தடயவியல் அறிவியல் படிப்பை (B.Sc Forensic Science) இளங்கலை பட்டப்படிப்பாக தமிழ்நாட்டில் வெகு சில கல்லூரிகள் வழங்குகின்றன.

தடவியல் அறிவியலுடன் சேர்த்து கிரிமினாலஜி படிப்பை வழங்கும் சில கல்லூரிகளும் உள்ளன. டெல்லியில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. அங்கு விண்ணப்பிக்க மே 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

சுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகள் History and Tourism, Tourism and Travel Management என்ற பெயர்களில் வெவ்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

சுற்றுலாத்துறையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

இதே போன்று Catering and Hotel Management, Catering Technology and Hotel Administration என்று உணவு மற்றும் உணவக மேலாண்மை படிப்புகளில் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேரலாம்.

இந்த படிப்புகளுக்கான பிரத்யேக தனியார் கல்லூரிகள் பல தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

இவை தவிர வழக்கமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் படிப்புகளில் சிலவற்றுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்று பேராசிரியர் காந்திராஜ் கூறுகிறார்.

வேதியியல் பேராசிரியராக பணிபுரியும் அவர், “ஆங்கிலம் மற்றும் வேதியியல் ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆங்கிலம் இளங்கலைப் படிப்பில் உள்ள 60 இடங்களுக்கு சில நேரங்களில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். ஐடி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மனிதவளத்துறையில் பணிபுரியவும், அலுவலகப் பணிகள் மேற்கொள்ளவும் ஆங்கிலம் முக்கியமாக தேவைப்படுகிறது.

அதே போன்று வேதியியல் படிப்பிலும் பலர் சேர்கின்றனர். இளங்கலை படிப்பு முடித்த உடனே, அவர்கள் தொழிற்சாலைகளில், ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர முடியும். அதே நேரம் இயற்பியல், கணிதம் போன்ற படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனென்றால் பொதுவாக முதுகலைப் படிப்பு படித்தால்தான் இந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கும் என்பது ஒரு காரணமாக இருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு அரசின் இணையத்தில் எந்தெந்த துறைகளில் பணிகளில் சேர எந்த படிப்புகளை படிக்க வேண்டும் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த படிப்புகள் எந்தெந்த கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களும் சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

சமூகப் பணியில் ஆர்வம் உள்ள மாணவர்கள், BSW-Bachelor of Social Work படிப்பில் சேரலாம். இவை வெகு சில கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது, அல்லது இதற்கென இயங்கும் பிரத்யேக நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்பை படித்தவர்களுக்கு தன்னார்வ அமைப்புகளில், சமூக நலத்துறைகளில் பணி செய்ய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

கணினி அறிவியல் படிப்பு, கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதான படிப்பு இல்லை என்றாலும், இதை வெவ்வேறு விதமான நிபுணத்துவத்துடன் கல்லூரிகள் இப்போது வழங்குகின்றன.

சைபர் பாதுகாப்பு, டேட்டா சைன்ஸ் உள்ளிட்டவை இந்த படிப்பில் சேர்த்து வழங்கப்படுகின்றன.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

கணிதத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், புள்ளியியல் – B.Sc Statistics என்ற படிப்பில் சேரலாம். ஒரு சில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மட்டுமே இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்பாக இருந்தாலும் சில கல்லூரிகளில் B.Sc Electronics என்ற இளங்கலைப் படிப்பு வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு அறிமுகமாகவும், துறை சார்ந்த முதுகலை படிப்பை படிக்கவும் இந்த படிப்பு உதவும்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

இவற்றை தவிர பலரும் படிக்கும் பி.காம் படிப்புகளில் சேர முடியும். B.Com Computer Applications, B.Com Accounting and Finance, B.Com Business Analytics, B.Com eCommerce, B.Com Professional Accounting என பல்வேறு பிரிவுகள் இந்தப் படிப்பில் வழங்கப்படுகின்றன.

தங்களுக்கு தேவைக்கு ஏற்ற படிப்பு எந்த கல்லூரியில் வழங்கப்படுகிறது என்பதை அறிந்துக் கொண்டு மாணவர்கள் சேரலாம்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு கால இளங்கலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பாடுவது, வீணை அல்லது வயலின் வாசிப்பது, பரதநாட்டியம் ஆடுவது என மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப படிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் 17 வயது முதல் 22 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் உள்ள அரசு கவின் கலை கல்லூரியில் ஓவியம், அச்சு, விசுவல் கம்யூனிகேஷன் டிசைன் உட்பட ஆறு பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. Bachelor of Fine Arts எனப்படும் இந்த படிப்பில் சேர 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒவ்வொரு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU