SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
உங்கள் குழந்தையின் கருவிழி கருப்பாக இருப்பதற்கு பதிலாக வெள்ளையாக இருந்தாலோ அல்லது மாறுகண் போன்று தோன்றினாலோ அல்லது கண் பார்வை சரியாக தெரியவில்லை என குழந்தை கூறினாலோ, உடனடியாக கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவை, ரெட்டினோபிளாஸ்டோமாவின் அறிகுறிகளாக இருக்கலாம். கண்ணின் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் தான் ரெட்டினோபிளாஸ்டோமா. பிறந்த குழந்தை முதல் 8 வயதிலான சிறார்களிடம் இந்த நோய் காணப்படுகிறது.
ஆரம்பத்திலேயே அதுகுறித்து பரிசோதனை செய்தால், குழந்தைகள் கண்கள், பார்வை மற்றும் வாழ்க்கை காப்பாற்றப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
லேன்செட் ஆய்விதழின்படி, சீனாவை விட இந்தியாவில் உள்ள குழந்தைகளிடம் இருமடங்கு அதிகமாக இருக்கிறது, மேலும் அமெரிக்காவில் உள்ளதைவிட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நோய் பரம்பரையாக ஏற்படும் நோய் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டில் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் ரெட்டினோபிளாஸ்டோமாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளின் கண்களை அகற்ற வேண்டியிருந்தது.
கண்களை இழந்தை குழந்தையின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
எட்டு வயது சிறுமி ஃபராவின் தந்தை முஸ்தஃபா மஸ்தகி கூறுகையில், ” என்னுடைய மகளுக்கு கண்புரை புற்றுநோய் ஏற்பட்டு, அது பரவிவிட்டது. லேசர் மற்றும் கீமோதெரபி சிகிச்சை வழங்கியும் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அவளுடைய உயிரைக் காப்பாற்ற கண்களை அகற்றுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
“மருத்துவர்கள் முதலில் ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். மற்றொரு கண்ணை காப்பாற்ற அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்தது, அவளுடைய மற்றொரு கண்ணையும் அகற்ற வேண்டியிருந்தது. என் மகளின் கண்கள் பறிபோய்விட்டன, ஆனால் அவளுடைய நம்பிக்கை இல்லை.”
மத்திய குஜராத்தை சேர்ந்தவர் முஸ்தஃபா மஸ்தகி. அவருடைய மகள் ஃபரா மூன்று வயது இருக்கும்போது ரெட்டினோபிளாஸ்டோவால் பாதிக்கப்பட்டார்.
இந்த நோய் காரணமாக, அவருடைய இரண்டு கண்களும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன. கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார் ஃபரா. அவர் படித்து மருத்துவராக வேண்டும் என விரும்புகிறார்.
ஃபராவின் தந்தை பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “என் மகளின் கண்ணில் வெள்ளை மணி போன்று ஏதோவொன்று மின்னியது. ஆனந்த் (மாவட்டத்திலுள்ள) மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்று பரிசோதித்தோம். என் மகளின் கண்களை பார்த்தவுடனேயே மருத்துவர் புரிந்துகொண்டார். மகளுடைய கண்களுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்குமாறு அவர் கூறினார்.” என்றார்.
“என் மகளுக்கு கண் புற்றுநோய் இருப்பதாக தெரிந்த போது, மிகவும் மோசமான தருணமாக இருந்தது, மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம். அரசு மருத்துவமனை என்பதால், அங்கு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கவலையாக இருந்தது, ஆனால் மருத்துவமனையின் பணியாளர்கள் மிகுந்த ஆதரவாக இருந்தனர்.”
மகனின் கண்களை காப்பாற்றிய தாயின் விழிப்புணர்வு

பட மூலாதாரம், DR. WILHEMINA ANSARI
பிஹாரை சேர்ந்தவரும் தெற்கு குஜராத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவருமான ராஜேஷ் சிங்கின் இரு மகன்களுக்கும் ரெட்டினோபிளாஸ்டோமா பாதிப்பு கண்டறியப்பட்டது. முன்கூட்டியே அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவருடைய மகன்களின் கண்கள் காப்பாற்றப்பட்டன.
குழந்தைகளின் தாய் தான் அவர்களின் கண்களில் இருந்து நீர் கசிவதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார். அதனால், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு முன்கூட்டியே கண்டறியப்பட்டது.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய ராஜேஷ் சிங் கூறுகையில், “2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிஹாரில் உள்ள என்னுடைய கிராமத்துக்கு சென்றிருந்தேன். என் மனைவி என்னுடன் வரவில்லை. அப்போதுதான் என் மனைவி என்னை அழைத்து, மகன் ராகேஷின் கண்களிலிருந்து நீர் வழிவதாகவும் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் கூறி வீட்டுக்கு வருமாறு தெரிவித்தார். சிறுகுழந்தைகளுக்கு இப்படி நடக்கும் என்றுதான் முதலில் எண்ணினேன்,” என்றார்.
“எனினும், என்னுடைய மனைவியின் சகோதரனுக்கு சிறுவயதில் இந்த பிரச்னை இருந்தது. அதனால், மகனின் கண்களில் இருந்து நீர் வழிவதை என் மனைவி தீவிரமாக எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் மகனுக்கு விழித்திரையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் கண்டறிந்தார்.”
“சிகிச்சைக்காக ஆமதாபாத் வருமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். அவரின் அந்த அறிவுரைதான் எங்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. ஆமதாபாத் சிவில் கண் மருத்துவமனை பணியாளர்களும் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.”
ராஜேஷ் சிங் மேலும் கூறுகையில், “என்னுடைய இளைய மகனுக்கு மட்டுமே அறிகுறிகள் தென்பட்டன. என் மூத்த மகன் மற்றும் மகளின் கண்களில் அறிகுறிகள் தெரியவில்லை. என் மூத்த மகன் மற்றும் மகளையும் பரிசோதிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். அப்போது என் மூத்த மகனுக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. எனினும், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் மூத்த மகனுக்கும் சிகிச்சை தொடங்கப்பட்டது” என்றார்.
ராஜேஷ் சிங் கூறுகையில், “என் இரு மகன்களுக்கும் லேசர் மற்றும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. என் இளைய மகனுக்கு ஒரு கண்ணில் பார்வை மங்கலாக இருந்தது, ஆனால் மற்றொரு கண் முற்றிலும் நல்ல நிலையில் உள்ளது. அதேசமயம், என் மூத்த மகனின் இரு கண்களும் நல்ல நிலையில் உள்ளன. என் மனைவி மற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு இதைக் கண்டறிந்ததால், என் மகன்களின் கண்கள் காப்பாற்றப்பட்டன” என தெரிவித்தார்.
“என் இளைய மகனுக்கு 11 வயதாகிறது. மூத்த மகனுக்கு 15 வயது. தொடர்ந்து இருவருடைய கண்களையும் பரிசோதிக்கிறோம். இதற்கு முன்பு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களை பரிசோதித்து வந்தோம். இப்போது ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்கிறோம்.”
ரெட்டினோபிளாஸ்டோமா நோய் என்பது என்ன?

பட மூலாதாரம், DR. WILHEMINA ANSARI
ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண் மருத்துவர் வில்ஹெல்மினா அசாரி பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “பிறந்த குழந்தை முதல் எட்டு வயது வரையிலான சிறார்களுக்கு கண்ணின் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் தான் ரெட்டினோபிளாஸ்டோமா. முன்பு, இந்த நோயின் அறிகுறிகள் நான்கு ஆண்டுகள் கழித்தே தென்படும். ஆனால், இப்போது நோயின் அறிகுறிகள் முன்னதாகவே தென்படுகின்றன. தற்போது, ரெட்டினோபிளாஸ்டோமாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாத குழந்தை எங்களின் சிகிச்சையில் உள்ளது.” என்றார்.
அவர் கூறுகையில், “முன்கூட்டியே கண்டறிவது குழந்தையின் பார்வையையும் அதன் வாழ்க்கையையும் காப்பாற்றும்” என கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த நோய் பரம்பரை பரம்பரையாக தோன்றும். ஒரு குழந்தைக்கும் இது இருந்தால், அக்குழந்தையின் உடன்பிறந்தவர்களுக்கும் இந்நோய் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். மேலும், அந்த பெற்றோர் இன்னொரு குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள் என்றால், குழந்தையின் கருப்பையில் உள்ள சிசுவுக்கு மரபியல் பரிசோதனை மேற்கொள்ளும் போது சிசுவுக்கு இந்நோய் இருக்கிறதா என்பதையும் கண்டறிய முடியும்” என தெரிவித்தார்.
“வேறொருவரின் குடும்பத்தில் ரத்த சொந்தம் யாருக்காவது இந்நோய் இருந்தால், கர்ப்பிணிக்கு மரபியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மரபணு பிறழ்வு (gene mutation) இருக்கிறதா இல்லையா என்பது அப்போது தெரியும். கருவில் உள்ள குழந்தைக்கு மரபணு பிறழ்வு இருப்பது கண்டறியப்பட்டால், ஆரம்பத்திலேயே அக்குழந்தைக்கு இந்நோய்க்கான சிசிகிச்சையை வழங்கி, குழந்தையின் பார்வையையும் கண்களையும் காப்பாற்ற முடியும்.”
ரெட்டினோபிளாஸ்டோமாவின் அறிகுறிகள்

மருத்துவர் அசாரி கூறுகையில், “குழந்தையின் விழித்திரை கருப்பாக அல்லாமல் வெள்ளையாக இருக்கும். மேலும், கண் பார்வை மங்குவதாகவோ அல்லது தெளிவற்று இருப்பதாகவோ குழந்தைகள் கூறும். மாறுகண் போன்றோ அல்லது அகன்று விரிந்த கண்கள் போன்றோ இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
சிகிச்சை குறித்துப் பேசிய மருத்துவர் அசாரி, “ஆரம்பகட்டத்தில் புற்றுநோய் கட்டி சிறிதாக இருந்தால், லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். லேசர் சிகிச்சையில் சரிசெய்ய முடியாவிட்டாலோ, அல்லது கட்டி பெரிதாக இருந்தாலோ கீமோதெரபி வழங்கப்படும். கீமோதெரபியிலும் முன்னேற்றம் இல்லையென்றால், குழந்தையுடைய கண்களை அகற்ற வேண்டும். சிலருக்கு ஒரு கண்ணை அகற்ற வேண்டியிருக்கும், சிலருக்கு இரு கண்களையும் அகற்ற வேண்டியிருக்கலாம்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்நோய் முன்பாகவே கண்டறியப்பட்டால், சிகிச்சை வாயிலாக குழந்தையின் கண்களை காப்பாற்ற முடியும். மிகவும் தீவிரமான கட்டத்தை அடைந்துவிட்டால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கண்களை அகற்ற வேண்டியிருக்கும். கண்ணை அகற்றிய பிறகு, கண் தானம் மூலமாகக் கூட வேறொரு கண்ணை பொருத்த இயலாது.” என்றார்.
“விழிப் பள்ளம் (eye socke) வெளியே தெரியாமல் இருக்க செயற்கை கண் ஒன்று பொருத்தப்படும். மேலும், ஒரு கண் மட்டும் அகற்றப்பட்டவர்கள் மற்றொரு கண்ணை மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தைக்கு 21 வயதாகும் வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.”
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்?

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் வில்ஹெல்மினா அசாரி கூறுகையில், “இந்தியாவில் பிறக்கும் 1.5 லட்சம் குழந்தைகளுள் ஒரு குழந்தை இந்த நோயால் பாதிக்கப்படுவதாக” தெரிவித்தார்.
மேலும், “2024ம் ஆண்டில் எங்கள் மருத்துவமனையில் ரெட்டினோபிளாஸ்டோமாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளுக்கு கண் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டில் இந்த பிரச்னையுடன் வந்த 45 குழந்தைகளுக்கு முன்கூட்டியே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் பார்வையும் கண்களும் சிகிச்சை வாயிலாக காப்பாற்றப்பட்டன” என தெரிவித்தார்.
லேன்செட் ஆய்விதழின் இணையதளத்தின்படி, இந்தியாவில் அதிகமானோர் ரெட்டினோபிளாஸ்டோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லேன்செட் இதழின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 குழந்தைகளுக்கு இந்நோய் கண்டறியப்படுகிறது. சீனாவை விட 50% அதிகமாக இந்தியாவில் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிகமாக இந்திய குழந்தைகளிடையே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், உரிய நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததால் பலருக்கும் தீவிரமான நிலையிலேயே நோய் கண்டறியப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC